லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை உளுந்தூர்பேட்டை வன அலுவலகத்தில் கட்டுக்கட்டாக ரூ 35 லட்சம் சிக்கியது


லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை உளுந்தூர்பேட்டை வன அலுவலகத்தில் கட்டுக்கட்டாக ரூ 35 லட்சம் சிக்கியது
x
தினத்தந்தி 11 Oct 2021 11:01 PM IST (Updated: 11 Oct 2021 11:01 PM IST)
t-max-icont-min-icon

உளுந்தூர்பேட்டை வனத்தோட்டக் கழக அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய அதிரடி சோதனையில் கட்டுக்கட்டாக ரூ.35 லட்சம் சிக்கியது.இது குறித்து அலுவலர் மற்றும் ஊழியர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்


உளுந்தூர்பேட்டை

ரகசிய புகார்

உளுந்தூர்பேட்டையில் திருச்சி செல்லும் சாலையில் வனத்துறைக்கு சொந்தமான வனத்தோட்டக்கழக அலுவலகம் உள்ளது. இங்கு ஆயுதபூஜை மற்றும் தீபாவளி பண்டிகையையொட்டி ஒப்பந்ததாரர்களிடம் இருந்து பணம் வசூல் செய்வதாக விழுப்புரம் லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு ரகசிய புகார் வரப்பெற்றது.

இதையடுத்து விழுப்புரம் லஞ்ச ஒழிப்பு கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு தேவநாதன் தலைமையில் இன்ஸ்பெக்டர் ஜேசுதாஸ், ஏட்டுகள் விஜயதாஸ், பாலமுருகன் மற்றும் நரசிம்மராவ் ஆகியோரை கொண்ட போலீசார் நேற்று இரவு 8 மணியளவில் உளுந்தூர்பேட்டையில் உள்ள வனத்தோட்ட கழக அலுவலகத்தில் திடீரென புகுந்து அதிரடி சோதனை நடத்தினர்.

கட்டுக்கட்டாக  பணம்

அப்போது அலுவலக அறையில் ரூ.200, 500 என கட்டுக்கட்டாக பணம் இருந்ததை கண்டுபிடித்தனர். ஆனால் அந்த பணத்துக்கான ஆவணம் எதுவும் இல்லாததால் அவற்றை லஞ்ச ஒழிப்பு போலீசார் பறிமுதல் செய்தனர்.  பின்னர் எந்திரத்தை கொண்டு பணத்தை எண்ணும் பணி நடைபெற்றது. இரவு 10 மணி நிலவரப்படி ரூ.35 லட்சம் வரை எண்ணி முடிக்கப்பட்டது. பணத்தை எண்ணும் பணி தொடர்ந்து நடைபெற்று வருவதால் அதன் மதிப்பு  மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. 

ஊழியர்களிடம் விசாரணை

கணக்கில் வராத இந்த பணம் குறித்து வனத்தோட்டக்கழக அலுவலர் மற்றும் ஊழியர்களிடமும் லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வனத்தோட்ட கழக அலுவலகத்தில் கட்டுக்கட்டாக ரூ.35 லட்சத்துக்கும் அதிகமான பணத்தை லஞ்ச ஒழிப்பு போலீசார் பறிமுதல் செய்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Next Story