16-ம் நூற்றாண்டை சேர்ந்த மகாவீரர் பற்றிய கல்வெட்டு கண்டுபிடிப்பு
வந்தவாசி அருகே உள்ள தென்னாத்தூர் கிராமத்தில் சிதிலமடைந்த கோவிலில் 16-ம் நூற்றாண்டை சேர்ந்த மகாவீரர் குறித்த கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.
திருவண்ணாமலை
வந்தவாசி அருகே உள்ள தென்னாத்தூர் கிராமத்தில் சிதிலமடைந்த கோவிலில் 16-ம் நூற்றாண்டை சேர்ந்த மகாவீரர் குறித்த கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.
16-ம் நூற்றாண்டை சேர்ந்த கல்வெட்டு
திருவண்ணாமலை மரபுசார் அமைப்பை சேர்ந்த ராஜ்பன்னீர் செல்வம் மற்றும் உதயராஜா ஆகியோர் இணைந்து வந்தவாசி பகுதியில் கள ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது சீயமங்கலத்தை அடுத்த தென்னாத்தூர் கிராமத்தில் பாழடைந்த கோவிலில் 16-ம் நூற்றாண்டை சேர்ந்த மகாவீரர் குறித்த கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டது.
இதுகுறித்து அவர்கள் கூறியதாவது:-
சீயமங்கலத்தில் இருந்து மடம் செல்லும் சாலையில் உள்ள தென்னாத்தூர் கிராமத்தில் ஒரு கோவில் சிதிலமடைந்து காணப்பட்டது.
சிறிய கருவறை மற்றும் அர்த்தமண்டபத்துடன் கூடிய இக்கோவிலில் புதர்கள் மண்டி போய் மரங்கள் முளைத்து காணப்பட்டது. கோவிலின் உள்ளே எந்த சிற்பமும் இல்லை.
மேற்கு நோக்கி அமைந்துள்ள இக்கோவிலின் தெற்கு பக்க அதிட்டானத்தில் ஆவணம் செய்யப்படாத மூன்று வரி கல்வெட்டு ஒன்று இருப்பது கண்டறியப்பட்டது.
அதனை சுத்தம் செய்து பார்க்கையில் இக்கோவில் சமண சமயத்தை சார்ந்த மகாவீரர் கோவில் என்பதை கல்வெட்டு மூலம் அறியமுடிந்தது.
முக்குடை செல்வர் என்று மகாவீரரைக் குறிப்பிடும் இக்கல்வெட்டு, தென்னாத்தூர் ஊர் மக்கள் இக்கோவிலுக்குப் பல்லவராயர் மனை என்று குறிப்பிடப்படும் இடத்திற்கு கிழக்கே உள்ள மனையையும், ஏந்தல் நிலம் மற்றும் 2 கிணறுகளுக்கு வரி நீக்கி தானம் அளித்த செய்தியை அறிய முடிகிறது.
இத்தானத்திற்கு சாட்சியாக மலையபெருமாள், ஆடுவார், குருகுலராய ஆடுவார் மற்றும் அப்பாண்டையார் இருப்பதாகவும், சந்திர, சூரியர் உள்ளவரை இத்தானம் செல்லும் என்று குறிப்பிடப்படுகிறது.
பழமையான கோவில்
இக்கோவிலின் அருகே தலை உடைந்த மகாவீரர் சிலை ஒன்று இருந்ததாகவும், உறை கிணறு ஒன்று இருந்ததாகவும் அவ்வூர் மக்கள் தெரிவித்தனர்.
சமண சமயத்தின் 24 தீர்த்தங்கரர்களுள் கடைசி தீர்த்தங்கரர் மகாவீரர் என்பது குறிப்பிடத்தகுந்தது. இக்கோவிலின் கட்டுமானம் பிற்கால விஜயநகர காலத்தை சேர்ந்ததாகும்.
இவ்வூரில் சமணர்கள் பெரும்பான்மையாக வாழ்ந்துள்ளதை அந்த ஊரில் "முத்தா கோவில்" என்று இன்றும் சிறப்பாக இயங்கி வரும் மற்றுமொரு சமணர் கோவில் மூலம் அறியலாம்.
500 ஆண்டு பழமையான இக்கோவில் கேட்பார் அற்று கைவிட்டதனால் புதர் மண்டி அழிவின் விழிம்பில் உள்ளது. இவ்வூரில் உள்ள சமண சமயத்தை சார்ந்தோர் இக்கோவிலை புனரமைத்து, 500 ஆண்டு பழமையான கோவிலை மீண்டும் வழிபாட்டிற்கு கொண்டு வருவதே முக்குடை செல்வரான மகாவீரருக்குச் செலுத்தும் மரியாதையாகும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
Related Tags :
Next Story