விற்பனைக்கு குவிந்த பூசணிக்காய்


விற்பனைக்கு குவிந்த பூசணிக்காய்
x
தினத்தந்தி 11 Oct 2021 6:26 PM GMT (Updated: 11 Oct 2021 6:26 PM GMT)

ஆயுதபூஜை விழாவிற்காக காரைக்குடியில் சாலையோர கடைகளில் விற்பனைக்காக பூசணிக்காய் வந்து குவிய தொடங்கி உள்ளது.

காரைக்குடி,

ஆயுதபூஜை விழாவிற்காக காரைக்குடியில் சாலையோர கடைகளில் விற்பனைக்காக பூசணிக்காய் வந்து குவிய தொடங்கி உள்ளது. 

விற்பனைக்கு வந்த பூசணிக்காய்

உழைப்பாளர்கள், கல்வியாளர்கள் மற்றும் பல்வேறு தரப்பினரும் ஆண்டுதோறும் கொண்டாடப்படுவது ஆயுதபூஜை விழா. அன்றைய தினம் உழைப்பாளர்கள் தங்கள் பயன்படுத்தும் ஆயுதங்களை படையலில் வைத்து சிறப்பு செய்து வழிபாடு நடத்தும் விழாவாக ஆயுதபூஜை விழா கொண்டாடப்பட்டு வருகிறது. அன்றைய தினம் முக்கியமாக இருப்பது  பூசணிக்காய். 
பெரும்பாலும் ஆயுதபூஜை விழாவை கொண்டாடும் வர்த்தக நிறுவனத்தினர் மற்றும் வீடுகளில் உள்ளவர்கள் விழா முடிந்ததும் பூசணிக்காய் வாங்கி அதை சந்தியில் உடைப்பது வழக்கமாக இருந்து வருகிறது. இந்தாண்டு ஆயுதபூஜை விழா வருகிற 14-ந்தேதி கொண்டாடப்பட உள்ளது. இதையடுத்து ஆயுதபூஜை விழாவிற்காக பல்வேறு இடங்களில் இருந்து விற்பனைக்காக தற்போது பூசணிக்காய் வந்து குவிய தொடங்கி உள்ளது. காரைக்குடி ஐந்து விளக்கு பகுதி அருகே தஞ்சாவூர் பகுதியில் விளைந்த பூசணிக்காய்கள் ஆயுதபூஜையை முன்னிட்டு தற்போது விற்பனைக்காக வந்து குவிய தொடங்கி உள்ளது. இங்கு கிலோ ரூ.20வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதிகபட்சமாக ரூ.300 வரை விற்கப்படுகிறது. 

வரத்து அதிகம்
இதுகுறித்து வியாபாரி ஒருவர் கூறியதாவது:-
கடந்த ஆண்டை விட இந்தாண்டு பல்வேறு இடங்களில் நல்ல மழை பெய்து உள்ளதால் பூசணிக்காய் விளைச்சல் அதிகளவில் உள்ளது. எனவே கடந்தாண்டை விட இந்தாண்டு விலை குறைவாகவே உள்ளது. தஞ்சாவூர், திண்டுக்கல், தர்மபுரி உள்ளிட்ட பகுதியில் விளைந்த இந்த  பூசணிக்காய்களை இங்கு கொண்டு வந்து வியாபாரம் செய்து வருகிறோம். 
இவ்வாறு அவர் கூறினார்.
 இந்த நிைலயில் தற்போது காரைக்குடி பகுதியில் விற்பனைக்காக பூசணிக்காய் வந்து குவிய தொடங்கியதால் அவற்றை விற்பனை செய்யும் வியாபாரிகள் வாங்குபவர்களிடம் பூசணிக்காயை சாலைகள் மற்றும் மக்கள் நடமாட்டம் பகுதியில் உடைக்க கூடாது என்று அறிவுரை வழங்கி விற்பனை செய்ய வேண்டும். மேலும் பொதுஇடங்கள் மற்றும் சாலைகளில் திருஷ்டி பூசணிக்காயை உடைப்பதால் ஆண்டுதோறும் விபத்து சம்பவங்கள் அதிகளவில் நடக்கிறது. இதை கட்டுப்படுத்தும் விதமாக இந்தாண்டு ஆயுதபூஜையை முன்னிட்டு சாலைகளில் பூசணிக்காய் உடைப்பவர்கள் மீது போலீசார் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story