அரசு மருத்துவமனைகளில் குழந்தைகள் கடத்தலை தடுக்க கண்காணிப்பு கேமராக்களின் செயல்பாடுகள் ஆய்வு போலீஸ் ஐ.ஜி. தகவல்
அரசு மருத்துவமனைகளில் குழந்தைகள் கடத்தலை தடுக்க கண்காணிப்பு கேமராக்களின் செயல்பாடுகள் ஆய்வு செய்யப்படுவதாக மத்திய மண்டல போலீஸ் ஐ.ஜி. பாலகிருஷ்ணன் தெரிவித்தார்.
புதுக்கோட்டை:
குழந்தைகள் காப்பகம்
புதுக்கோட்டை ஆயுதப்படை வளாகத்தில் போலீசார் குழந்தைகளுக்கான காப்பகம் அமைக்கப்பட்டுள்ளது. பணி நேரத்தில் பெண் போலீசாரின் குழந்தைகளை கவனித்து கொள்ளும் வகையில் இந்த காப்பகம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதில் குழந்தைகளுக்கான விளையாட்டு உபகரணங்கள், குழந்தைகளை கவரும் வகையில் வண்ண ஓவியங்கள், பயனுள்ள தகவல்கள் இடம்பெற்றுள்ளன. பகல் நேரத்தில் மட்டும் இயங்கும் இந்த காப்பகத்தினை திருச்சி மத்திய மண்டல போலீஸ் ஐ.ஜி. பாலகிருஷ்ணன் நேற்று திறந்து வைத்தார். அதன்பின் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
தஞ்சாவூர் அரசு மருத்துவமனையில் சமீபத்தில் குழந்தை கடத்தப்பட்ட சம்பவத்தில் 30 மணி நேரத்தில் குழந்தை கண்டுபிடிக்கப்பட்டது. அரசு மருத்துவமனையில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகியிருந்த காட்சி மூலம் போலீசார் விரைந்து செயல்பட்டு நடவடிக்கை எடுத்தனர்.
கண்காணிப்பு கேமராக்கள்
திருச்சி மத்திய மண்டலத்தில் ஒவ்வொரு அரசு மருத்துவமனைகளிலும் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களின் செயல்பாடுகளை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகள் ஆய்வு செய்து தணிக்கை செய்ய உள்ளனர். அதில் ஏதேனும் குறைபாடுகள் இருந்தால் மருத்துவ துறை மூலம் சரி செய்யப்படும். அரசு மருத்துவமனைகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளதை புறக்காவல் நிலையத்தில் இருந்தும் கண்காணிக்க ஏற்பாடு செய்யப்படுகிறது.
கஞ்சா குற்ற வழக்குகளில் அதனை கடத்தி வருபவர்கள், எங்கிருந்து கடத்தப்பட்டு வருகிறது என கண்காணிக்கப்படும் போது கடத்தல் முதல் விற்கும் வரை அனைவரையும் பிடிக்க போலீசார் கண்காணித்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர். ஆன்லைன் மோசடிகளை தவிர்க்க சைபர் கிரைம் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இந்த விழிப்புணர்வு மூலம் புகார்கள் அதிகம் பெறப்பட்டுள்ளன. சைபர் குற்றங்களும் தடுக்கப்பட்டுள்ளது.
பாலியல் சம்பவம், குழந்தைகள் திருமணத்தை தடுக்க கிராம கண்காணிப்பு குழு மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. போக்சோ குற்றவாளிகள் பற்றிய சரித்திர பதிவேடுகள் பராமரித்து கண்காணிக்கப்படுகிறது. குழந்தைகள் மீதான பாலியல் வன்முறை குற்றங்களில் ஆய்வு மேற்கொண்ட போது பெற்றோர்கள் இல்லாத குழந்தைகள், பெற்றோரால் சரியாக கவனிக்கப்படாத குழந்தைகள், பள்ளிகளில் இடையில் நின்ற குழந்தைகள் தான் அதிக அளவில் பாதிக்கப்பட்டது தெரியவந்தது. இதுபோன்ற குழந்தைகளை போலீஸ் நிலையங்களில் உள்ள பெண்கள் உதவி மையம் மூலம் தொடர்பு கொண்டு பாதுகாப்பு ஏற்படுத்தப்படுகிறது.
அதிகாரிகள்
மத்திய மண்டலத்தில் கொரோனாவால் பெற்றோரை இழந்த 365 குழந்தைகளை போலீசார் வாரத்தில் ஒரு நாள் நேரில் சென்று சந்தித்து அவர்களிடம் குறைகளை கேட்டு, நலம் விசாரித்து, பாதுகாப்பிற்கான சூழலை உருவாக்கி வருகின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின் போது மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நிஷா பார்த்திபன், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள் கீதா, ஜெரினா பேகம், ராஜேந்திரன் மற்றும் போலீஸ் அதிகாரிகள் உடன் இருந்தனர்.
Related Tags :
Next Story