பயிர் காப்பீட்டு தொகை வழங்கக்கோரி கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் மனு


பயிர் காப்பீட்டு தொகை வழங்கக்கோரி கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் மனு
x
தினத்தந்தி 12 Oct 2021 12:39 AM IST (Updated: 12 Oct 2021 12:39 AM IST)
t-max-icont-min-icon

பயிர் காப்பீட்டு தொகை வழங்கக்கோரி கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் மனு அளித்தனர்.

கரூர், 
மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்
கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடந்தது. இதில் கலெக்டர் பிரபுசங்கர் தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றார். கரூர் மாவட்ட விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் கொடுக்கப்பட்ட மனுவில் கூறியிருந்ததாவது:-
தமிழக அரசு விவசாய பயிர் கடன் மற்றும் விவசாய நகை பயிர் கடன் தள்ளுபடி செய்ததாக அறிவிப்பு செய்து கடன் தீர்வு ரசீது வழங்கப்பட்ட நிலையில் கூட்டுறவு நிர்வாகம் ஏனைய விவசாயிகளுக்கு ரசீது வழங்கவில்லை. மேலும், நகை வைத்து வாங்கிய விவசாய கடனுக்கு கடன் தீர்வு கொடுத்த நிலையில் அடமானம் வைக்கப்பட்ட நகைகளை இதுவரை  விவசாயிகளிடம் ஒப்படைக்கவில்லை.
புதிய பயிர் கடன்
பொது விவசாய கடன் தள்ளுபடியில் ஆஸ்தி பொறுப்பு மற்றும் கணினி சிட்டா வைத்து கடன் பட்டியல் தயாரித்து வழங்கப்பட்ட கடன்களை தள்ளுபடி செய்தார்கள். தற்போதும் அதே நடைமுறையை பின்பற்றி விவசாயிகளுக்கு பயிர்கடன் வழங்கப்பட்டு இருக்கிறது. ஆனால் தள்ளுபடி பட்டியலில் அடங்கல் இல்லையென்று அதிகாரிகள் தள்ளுபடிக்கு ஆய்வு என்ற காரணம் காட்டி காலம் தாழ்த்தி வருகிறார்கள். பக்கத்து மாவட்டங்களில் அனைத்து விவசாயிகளுக்கும் கூட்டுறவு நிர்வாகம் தள்ளுபடி ரசீது தள்ளுபடியான நகையையும் விவசாயிகளுக்கு திருப்பி கொடுத்து விட்டார்கள். 
கரூர் மாவட்டத்திலும் துரித நடவடிக்கை எடுத்து அடமானம் வைத்த நகைகளை திருப்பி கொடுத்தும், மீண்டும் பயிர் செய்யும் விவசாயிகளுக்கு புதிய பயிர் கடன் வழங்க தாங்கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். 
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
பயிர் காப்பீட்டு தொகை
கூட்டுப்பண்ணையம் (வேளாண்மை) குளித்தலை (பி) உழவர் உற்பத்தியாளர் குழு சார்பில் கொடுக்கப்பட்ட மனுவில் கூறியிருப்பதாவது:- விவசாயிகளின் நலன்கருதி மத்திய, மாநில அரசுகளின் வேண்டுகோளின்படி 2020-21-ம் ஆண்டு பயிர் காப்பீடு செய்யப்பட்டது.
தற்போது இயற்கை மாற்றத்தால் அதிகளவு மழை பெய்ததால் விவசாய பயிர்கள் பாதிக்கப்பட்டு சேதமடைந்ததால் அதற்கு மாநில அரசு நிவாரணத்தொகை வழங்கி உள்ளது. ஆனால் பயிர் காப்பீட்டு தொகை இதுவரை கிடைக்கப் பெறவில்லை. ஆகவே பயிர் காப்பீட்டு தொகை கிடைக்க ஆவன செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story