தினத்தந்தி புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x
தினத்தந்தி 11 Oct 2021 8:22 PM GMT (Updated: 11 Oct 2021 8:22 PM GMT)

தஞ்சை மாவட்டத்தில் உள்ள குறைகள் புகார் பெட்டியில் கூறப்பட்டுள்ளது.

 நாய்கள் தொல்லை
 தஞ்சை மாவட்டம் பாபநாசத்தை அடுத்த கபிஸ்தலம் வெள்ளாளர் தெருவில் நாய்கள் அதிகளவில் சுற்றித்திரிகின்றன. இந்த நாய்கள் சாலையில் செல்லும் பெண்கள், குழந்தைகளை விரட்டிச்சென்று கடிக்கின்றன. அந்த பகுதியில் உள்ள வீடுகளில் வளர்க்கப்படும் ஆடு, கோழிகளை வேட்டையாடி செல்கின்றன. அதுமட்டுமின்றி இரவு நேரங்களில் வாகனங்களில் செல்பவர்களையும் விரட்டிச்செல்கின்றன. இதன் காரணமாக வாகனத்தில் செல்பவர்கள் அடிக்கடி விபத்துகளில் சிக்கிக்கொள்கின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பொதுமக்களை அச்சுறுத்தி வரும் நாய்களை பிடித்துச்செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாகும்.                                       
-பொதுமக்கள், பாபநாசம்.
பூங்கா சீரமைக்கப்படுமா?
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் வட்டம் பசுபதிகோவில் கிராமத்தில் பொதுமக்கள் வசதிக்காக அம்மா பூங்கா அமைக்கப்பட்டது. இந்த பூங்காவில் தினமும் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் நடைபயிற்சி சென்று வந்தனர்.மேலும், முதியவர்கள், குழந்தைகள் என அனைத்து தரப்பினரும் பூங்காவை பயன்படுத்தி வந்தனர். இந்த நிலையில் தற்போது அம்மா பூங்கா பராமரிப்பின்றி புற்கள் முளைத்து புதர்மண்டி கிடக்கின்றன. மேலும்  பூங்காவில் அமைக்கப்பட்டிருந்த உடற்பயிற்சி நிலையம் பழுதடைந்து உள்ளன. இதனால், அந்த பகுதி மக்கள் உடற்பயிற்சி, நடைபயிற்சி செய்ய பூங்காவை பயன்படுத்த முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பராமரிப்பின்றி கிடக்கும் அம்மா பூங்காவை சீரமைத்து தர வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாகும்.                    -முத்து, பசுபதிகோவில்.
 கைப்பம்பு சீரமைக்கப்படுமா? 
 தஞ்சை கீழவாசல் பகுதியில் கொள்ளுபேட்டை தெரு உள்ளது. இந்த தெருவையும், பாம்பாட்டி தெருவையும் இணைக்கும் சின்னையா நாயக்கர் பகுதியில் பொதுமக்கள் வசதிக்காக கைப்பம்பு ஒன்று அமைக்கப்பட்டது. இந்த கைப்பம்பு தற்போது பராமரிப்பின்றி பழுதடைந்து கிடக்கிறது. மேலும், கைப்பம்பு போக்குவரத்துக்கு இடையூறாக சாலையில் அமைந்துள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகி வருகின்றனர். எனவே, பழுதடைந்த நிலையில் உள்ள கைப்பம்பை சீரமைத்து சாலையோரம் போக்குவரத்துக்கு இடையூறு இன்றி அமைத்து தர வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாகும்.                   -கோபி, தஞ்சாவூர்.
 குப்பைகளால் நோய் பரவும் அபாயம்
 தஞ்சாவூர் புதுபட்டினம் ஊராட்சி ராதாகிருஷ்ணன் நான்காம் நகர் பகுதியில் குப்பைகள் கொட்டப்பட்டு வருகின்றனர். இதனால் அந்த பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது.குப்பைகள் குவிந்து கிடப்பதால் நாய்கள், கால்நடைகள் அந்த பகுதியில் குவிந்து வருகின்றனர். இதனால் அடிக்கடி விபத்துகள் ஏற்பட்ட வண்ணம் உள்ளன. அதுமட்டுமின்றி மழைக்காலங்களில் குப்பைகள் மழைநீருடன் கலந்து வீடுகளை சூழ்ந்து கொள்கின்றன. இதனால் அந்த பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது. இதன் காரணமாக சுகாதார சீர்கேடு ஏற்பட்டு நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே  சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ராதாகிருஷ்ணன் நான்காம் நகர் பகுதியில் குவிந்து கிடக்கும் குப்பைகளை அகற்றவும், புதிய குப்பை தொட்டி வைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அந்த பகுதி மக்களின் கோரிக்கையாகும்.                          -பொதுமக்கள், தஞ்சாவூர்.



Next Story