மாவட்டத்தில் பலத்த மழை
மாவட்டத்தில் பலத்த மழை பெய்தது.
பெரம்பலூர்:
பலத்த மழை
பெரம்பலூர் மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாகவே அவ்வப்போது பெய்து வரும் பலத்த மழையால் ஏரி, குளங்களுக்கு தண்ணீர் வரத்து அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதனால் மாவட்டத்தில் விவசாய பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் நேற்றும் பெரம்பலூர் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் பகல் நேரத்தில் அவ்வப்போது விட்டு, விட்டு லேசான மழை பெய்தது. மாலையில் சுமார் 5.30 மணியளவில் திடீரென்று பலத்த மழை பெய்ய தொடங்கியது. இந்த மழை விடாமல் சுமார் 1 மணி நேரம் தொடர்ந்து பெய்தது. பின்னர் இரவில் விட்டு, விட்டு பலத்த மழை பெய்தது. இதேபோல் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் நேற்று பலத்த மழை பெய்தது என்பது குறிப்பிடத்தக்கது.
மாவட்டத்தில் நேற்று முன்தினம் முதல் நேற்று காலை வரை பெய்த மழை அளவு விவரம் மில்லி மீட்டரில் வருமாறு:- பெரம்பலூர்-44, தழுதாழை-13, லெப்பைக்குடிகாடு-13, செட்டிகுளம்-12, வி.களத்தூர்-11, பாடாலூர்-10, எறையூர்-10, கிருஷ்ணாபுரம்-10, வேப்பந்தட்டை-9, புதுவேட்டக்குடி-3.
வெள்ள அபாய முன்னெச்சரிக்கை
பெரம்பலூர் மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் பலத்த மழையால் ஆலத்தூர் தாலுகா, கொட்டரை கிராமத்தின் அருகே மருதையாற்றின் குறுக்கே அமைக்கப்பட்டுள்ள மருதையாறு நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் அதிகரித்து வருகிறது. தொடர்ந்து மழை பெய்தால் நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் நாளை (புதன்கிழமை) மாலைக்குள் முழு அளவை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. முழு அளவை எட்டியவுடன் நீர்த்தேக்கத்திற்கு வரும் முழு தண்ணீரும் மருதையாற்றில் வெளியேற்றப்பட உள்ளது. எனவே மருதையாற்றின் கரையோரம் மற்றும் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களுக்கும், விவசாயிகளுக்கும் வெள்ள அபாய முன்னெச்சரிக்கை தமிழ்நாடு நீர்வள ஆதாரத்துறையின் பெரம்பலூர் மருதையாறு வடிநில உபகோட்டத்தின் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story