மாவட்டத்தில் பலத்த மழை
மாவட்டத்தில் பலத்த மழை பெய்தது.
அரியலூர்:
பலத்த மழை
அரியலூர் மாவட்ட பகுதியில் கடந்த ஒரு வாரமாக மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் தமிழகத்தில் அதிக அளவாக 10.5 செ.மீ. மழை பெய்தது. நகரில் பல இடங்களில் வீடுகள், கடைகளில் மழை நீர் புகுந்தது. இந்நிலையில் நேற்று பகலில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. மாலை 5 மணிக்கு பலத்த மழை பெய்ய தொடங்கியது. நகர் முழுவதும் மாலை 5.30 மணிக்கே இரவு போன்று இருள் சூழ்ந்து காணப்பட்டது. மாநில நெடுஞ்சாலையான மார்க்கெட் தெரு, செந்துறை சாலை, ஜெயங்கொண்டம் சாலை மற்றும் நகராட்சி சாலைகளில் தண்ணீர் தேங்கும் இடங்களை கண்டறிந்து சரி செய்யவில்லை. பல தெருக்களில் கழிவுநீர் வாய்க்கால் கட்டும் பணி நடைபெறுகிறது. இதனால் பல வீடுகளில் மழை நீர் தேங்கி நிற்கிறது.
உடையார்பாளையம் பகுதியில் நேற்று மதியம் வெயிலின் தாக்கம் குறைந்து வானில் கருேமகங்கள் சூழ்ந்து குளிர்ந்த காற்று வீசத் தொடங்கியது. பின்னர் மழை பெய்ய தொடங்கியது. இதில் உடையார்பாளையம், கழுமங்கலம், முனையதரையன்பட்டி, கச்சிப்பெருமாள், துலாரங்குறிச்சி, சூரியமணல், இடையார், சோழங்குறிச்சி, தத்தனூர், வெண்மான்கொண்டான், மணகதி, விளாங்குடி, ஆதிச்சனூர், சுத்தமல்லி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இடி, மன்னலுடன் பலத்த மழை பெய்தது.
ஜெயங்கொண்டம், வி.கைகாட்டி
ஜெயங்கொண்டம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நேற்று மாலை காற்று, இடி, மின்னலுடன் சுமார் 3 மணி நேரத்திற்கு மேலாக பலத்த மழை கொட்டித்தீர்த்தது. சாலையில் மழைநீர் ஆறுபோல் ஓடியது. ஜெயங்கொண்டம்-சிதம்பரம் சாலையின் இருபுறங்களிலும் மழைநீர் செல்ல போதிய வடிகால் வசதி இல்லாததால் சாலையில் மழைநீர் ஓடியது. இதனால் வாகன ஓட்டிகள் அவதிக்கு உள்ளாகினர். மேலும் சாலையின் இருபுறங்களிலும் தாழ்வாக உள்ள வீடு மற்றும் கடைகளில் தண்ணீர் புகுந்ததால் கடையின் உரிமையாளர்கள், வீடுகளை சேர்ந்தவர்கள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகினர். மழையின் காரணமாக அவ்வப்போது மின் நிறுத்தம் ஏற்பட்டது.
சாலையின் இருபுறங்களிலும் சரியான முறையில் வடிகால் வசதி அமைக்க வேண்டும் என்று ஜெயங்கொண்டம் நகராட்சிக்கு உட்பட்ட பொதுமக்கள் மற்றும் கடை உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதேபோல் ஜெயங்கொண்டம் பகுத்தறிவு நகர், வேலாயுதம் நகர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் புதிதாக போடப்பட்டுள்ள சாலையின் இருபுறமும் வடிகால் வசதி இல்லாததால் வீடுகளுக்குள் மழைநீர் புகுந்துள்ளது குறிப்பிடத்தக்கது. வி.கைகாட்டியில் நேற்று காலை முதல் வானம் கருமேகங்களுடன் காணப்பட்டது. மாலை 4 மணியளவில் இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்ய தொடங்கியது. தொடர்ந்து பெய்த மழையால் சாலையில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.
கொட்டும் மழையில் சாலை மறியல்
உடையார்பாளையம் அருகே துளாரங்குறிச்சி கிராமத்தில், திருச்சி - சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையை அகலப்படுத்தும் பணி நடந்து வருகிறது. இதில், சாலையின் இருபுறங்களிலும் மழைநீர் வடிகால் வசதி அமைக்காமல் சாலை அமைத்து வருவதாகவும், இதனால் நேற்று பெய்த பலத்த மழையால் தண்ணீர் வெளியேற வழியின்றி கிராமத்தில் சூழ்வதாகவும், எனவே வடிகால் வசதி செய்து தரவேண்டும் என்றும் வலியுறுத்தி, கிராம மக்கள் நேற்று கொட்டும் மழையில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இது பற்றி தகவல் அறிந்து வந்த உடையார்பாளையம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி கால்வாய் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தனர். இதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர். மறியலால் திருச்சி- சிதம்பரம் சாலையில் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
3 நாட்களில் 100 மி.மீ. மழை
அரியலூர் மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக அதிகபட்சமாக செந்துறையில் 61 மி.மீ. மழை பெய்து உள்ளது. இந்த நிலையில் நேற்று மாலை இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. இதில் சுமார் 40 மி.மீ. அளவுக்கு மேல் மழை பெய்துள்ளது. பலத்த காற்றுடன் பெய்த மழையால் மாலை 5 மணி முதல் மின்சாரம் தடைபட்டு பொதுமக்கள் அவதிப்பட்டனர். சாலைகள் மற்றும் ஓடைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. ஆங்காங்கே தாழ்வான குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் தேங்கி குளம்போல் காட்சி அளித்தது. மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான ஏரி, குளங்கள் நிரம்பி வழிகின்றன.
Related Tags :
Next Story