தினத்தந்தி புகார் பெட்டி
‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு நன்றி
திருச்சி மாவட்டம், மேற்கு தொகுதி 52-வது வார்டு 9-வது குறுக்கு தெருவில் உள்ள கழிவுநீர் வாய்க்கால் சுத்தம் செய்யப்பட்டது. ஆனால் அதன் கழிவுகள் அகற்றாமல் சாலையோரம் கொட்டப்பட்டது. இதுகுறித்து ‘தினத்தந்தி’ புகார் பெட்டியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு செய்தி வெளியிடப்பட்டது. இதையடுத்து, நகராட்சி ஊழியர்கள் அந்த கழிவுகளை அகற்றினர். எனவே செய்தி வெளியிட்ட ‘தினத்தந்தி’க்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.
பொதுமக்கள், திருச்சி.
சாலையில் கொட்டப்படும் கட்டிடக்கழிவுகள்
திருச்சி மாநகராட்சி 62-வது வார்டு பாத்திமாபுரம் சாலையில் இரவு நேரங்களில் மர்ம ஆசாமிகள் கட்டிடக்கழிவுகள் கொட்டி செல்கிறார்கள். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த கட்டிடக்கழிவுகளை உடனடியாக அகற்றுவதுடன், சாலையில் கட்டிட கழிவுகளை கொட்டி செல்வோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அப்துல் ரஹ்மான், திருச்சி.
ஒருங்கிணைந்த பஸ் நிலையம் அமைக்கப்படுமா?
தமிழகத்தின் மையப்பகுதியான திருச்சிக்கு ஒருங்கிணைந்த பஸ் நிலையம் இல்லை. பண்டிகை காலங்களில் தற்காலிக பஸ் நிறுத்தம் அமைத்து கூட்ட நெரிசலை போக்குவரத்து துறை அதிகாரிகள் சரி செய்து வருகிறார்கள். இதனால் வெளியூரிலிருந்து வரும் பொதுமக்கள் அலைக்கழிக்கப்படுகிறார்கள். எனவே அரசு அறிவித்த ஒருங்கிணைந்த பஸ் நிலைய பணிகளை உடனடியாக தொடங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
செய்யது இஸ்மாயீல், திருச்சி.
சேறும், சகதியுமான சாலை
திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் பேரூராட்சிக்குட்பட்ட ஜம்பு நகரில் உள்ள சாலை சரிவர பராமரிக்கப்படாததால் மழைக்காலங்களில் சேறும், சகதியுமாக காட்சியளிக்கிறது. மேலும் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் சேற்றில் தவறி விழுந்து காயம் அடைந்து வருகிறார்கள். எனவே இந்த சாலையை சீரமைக்க வேண்டும்.
சண்முகம்,மண்ணச்சநல்லூர்,திருச்சி.
திருச்சி பொன்மலை ராணுவ காலனியில் இருந்து ராஜீவ் காந்தி நகருக்கு செல்லும் சாலை தற்போது பெய்த மழையால் சேறும், சகதியுமாக காட்சியளிக்கிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த சாலையை சீரமைக்க வேண்டும்.
பாலு, திருச்சி.
திருச்சி மாவட்டம், இனம் கல்பாளையம ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி பள்ளியில் குட்டை போல் தேங்கி நிற்கும் மழை நீராலும், சேறும் சகதியாலும் பள்ளிக்கு வரும் மாணவ-மாணவிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். எனவே மாணவர்களின் நலன் கருதி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
விஜய் மாணிக்கம்.
திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் வார்டு எண் 65 , பங்காரு அடிகளார் நகரில் உள்ள சாலை சேறும், சகதியுமாக உள்ளது. இதனால் பள்ளி செல்லும் மாணவ-மாணவிகள் அவதியடைந்து வருகிறார்கள். எனவே இந்த சாலையை சீரமைக்க வேண்டும்.
பிரபா, திருச்சி.
கால்நடைகளால் போக்குவரத்து நெரிசல்
திருச்சி குழுமணி ரோட்டில் உறையூர் முதல் மருதாண்டாக்குறிச்சி வரை உள்ள சாலையில் ஆடு, மாடு மற்றும் குதிரைகளால் நாள்தோறும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. மேலும் அதிவேகமாக வாகனங்கள் செல்லும்போது கால்நடைகள் குறுக்கே வருவதால் வாகன ஓட்டிகள் மற்றும் விலங்குகளுக்கு விபத்து ஏற்படும் வாய்ப்பு உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட நகராட்சி அதிகாரிகள் கால்நடைகளை சாலையோரம் விடும் நபர்களை கண்டறிந்து அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பாலு, திருச்சி.
டாஸ்மாக் கடையை மாற்ற கோரிக்கை
திருச்சி மாவட்டம் உறையூர் கடைவீதி பகுதியில் டாஸ்மாக் கடை உள்ளது. இதனால் காலை மற்றும் மாலை நேரங்களில் மதுபிரியர்கள் போதை தலைக்கேறியதும் அந்த வழியாக செல்வோரிடம் தகராறில் ஈடுபட்டு வருகிறார்கள். எனவே பொதுமக்களுக்கு இடையூறாக உள்ள டாஸ்மாக் கடையை வேறு இடத்திற்கு மாற்ற சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஹூமேரா பர்வீன், திருச்சி.
பயணிகள் நிழற்குடை சேதம்
திருச்சி ஒத்தகடை அருகே உள்ள பயணிகள் நிழற்குடை மேற்கூரை சேதமடைந்து மழைக்காலங்களில் மழை நீர் கசிகிறது. இதனால் பஸ் பயணிகள் நிழற்குடையில் ஒதுங்க முடியாத சூழ்நிலை உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட மாநகராட்சி அதிகாரிகள் இந்த மேற்கூரையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
லூயிஸ் ஜோயல், திருச்சி.
Related Tags :
Next Story