பயிர்க்கடன் வழங்கக்கோரி விவசாயிகள் போராட்டம்


பயிர்க்கடன் வழங்கக்கோரி விவசாயிகள் போராட்டம்
x
தினத்தந்தி 12 Oct 2021 3:35 AM IST (Updated: 12 Oct 2021 3:35 AM IST)
t-max-icont-min-icon

பயிர்க்கடன் வழங்கக்கோரி விவசாயிகள் போராட்டம் நடத்தினர்.

ஆர்.எஸ்.மங்கலம்
பயிர்க்கடன் வழங்கக்கோரி விவசாயிகள் போராட்டம் நடத்தினர்.
பயிர்க்கடன்
ஆர்.எஸ்.மங்கலம் ஆனந்தூர் அருகே உள்ள சேந்தமங்கலம் கிராமத்தில் திருத்தேர்வளை தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் செயல்பட்டு வருகிறது. இந்த கூட்டுறவு சங்கத்தில் திருத்தேர்வளை, கப்பகுடி, சேந்தமங்கலம், சேத்திடல், மருதவயல், செட்டியக்கோட்டை, கொக்கூரணி ஆகிய கிராமத்தைச் சேர்ந்த விவசாயிகள் விவசாய நகைக்கடன், பயிர்க் கடன்களை பெற்று பயனடைந்து வந்தனர். இந்த சங்கத்தில் 2015 முதல் 2020 வரை பயிர் கடன் பெற்ற 221 விவசாயிகளுக்கு கடந்த ஆட்சியில் கடன் முழுவதையும் தள்ளுபடி செய்து அதற்கான ரசீதை அந்தந்த கூட்டுறவு சங்கங்களில் விவசாயிகள் பெற்றுக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டது. ஆனால் சிலருக்கு மட்டுமே கடன் தள்ளுபடி செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்தநிலையில் விவசாயிகளுக்கு புதிய பயிர்கடன் வழங்கவில்லை என கூறப்படுகிறது. இதனால் 7 கிராமத்தைச் சேர்ந்த விவசாயிகள் பழைய பயிர்க்கடனை தள்ளுபடி செய்து ரசீது வழங்க வேண்டும், புதிய பயிர்க்கடன் உடனே வழங்க வேண்டும் என கோரி கூட்டுறவு சங்கம் முன்பு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டம்
தகவலறிந்த ஆர்.எஸ்.மங்கலம் தாசில்தார் முருகவேல், மண்டல துணை தாசில்தார் கார்த்திகேயன், திருத்தேர்வளை கிராம நிர்வாக அலுவலர் அரிபிரசாத், கூட்டுறவு களப்பணியாளர் ஆனந்த், கூட்டுறவு சங்க செயலாளர் (பொறுப்பு) செல்வம், ஆர்.எஸ்.மங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் தேவி ஆகியோர் விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது பயிர்க்கடன் வாங்கியவர்களின் உண்மை தன்மை அறிவது தொடர்பான விசாரணை இன்னும் முடியவில்லை என்பதால் புதிய பயிர்க்கடன் வழங்க இயலாது என கூட்டுறவு சங்கத்தின் சார்பாக தெரிவிக்கப்பட்டது. இதற்கு பழைய பயிர் கடன் தள்ளுபடி செய்வதற்கான ரசீதும், தற்போது பயிர்கள் உரம் இடாமல் வாடி நிற்பதால் உடனடியாக புதிய பயிர்க்கடன் வழங்க வேண்டும் என விவசாய தரப்பில் கோரிக்கை வைத்தனர்.
இதுகுறித்து ஆர்.எஸ்.மங்கலம் தாசில்தார் முருகவேல் இந்த வாரத்துக்குள் பழைய பயிர் கடனுக்கான தள்ளுபடி ரசீது வழங்கப்படும் எனவும், அடுத்த வாரம் 18-ம் தேதிக்கு மேல் புதிய பயிர் கடன் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததின் பேரில் விவசாயிகள் முற்றுகை போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

Next Story