ஆம்புலன்சில் வந்து ராமநாதபுரம் கலெக்டரிடம் மனு அளித்த முதியவர்


ஆம்புலன்சில் வந்து ராமநாதபுரம்  கலெக்டரிடம் மனு அளித்த முதியவர்
x
தினத்தந்தி 11 Oct 2021 10:16 PM GMT (Updated: 11 Oct 2021 10:16 PM GMT)

சொத்துக்களை எழுதி வாங்கிவிட்டு பராமரிக்காத மகனிடம் இருந்து சொத்துக்களை மீட்டுத்தரக்கோரி ஆஸ்பத்திரியில் இருந்து ஆம்புலன்சில் வந்து ராமநாதபுரம் கலெக்டரிடம் முதியவர் மனு அளித்தார்.

ராமநாதபுரம்
சொத்துக்களை எழுதி வாங்கிவிட்டு பராமரிக்காத மகனிடம் இருந்து சொத்துக்களை மீட்டுத்தரக்கோரி ஆஸ்பத்திரியில் இருந்து ஆம்புலன்சில் வந்து ராமநாதபுரம் கலெக்டரிடம் முதியவர் மனு அளித்தார்.
வீட்டை எழுதி வாங்கியதாக புகார்
ராமநாதபுரம் மாவட்டம் பொட்டகவயல் பகுதியை சேர்ந்தவர் சண்முகம் (வயது 75). இவர் நேற்று ஆம்புலன்சில், படுத்த படுக்கையாக ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்துக்கு தனது மனைவியுடன் வந்து மனு அளித்தார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-
நான் வெளிநாட்டில் சம்பாதித்து கே.கே.நகரில் வீடுகள் கட்டி வாடகைக்கு விட்டு அதில் கிடைக்கும் வருவாயில் குடும்பம் நடத்தி வந்தேன். எனது மகள்களை திருமணம் செய்து கொடுத்த நிலையில் எனது ஒரே மகன் முனீஸ்வரன் மற்றும் அவரின் மனைவி ஆகியோர் கடந்த 2016-ம் ஆண்டு, உங்களை பார்த்து கொள்கிறோம். வீடுகளை பேரன்களின் பெயரில் உயில் எழுதி வையுங்கள் என்று கூறினர். அவர்கள் கேட்டுக்கொண்டபடி உயில் எழுதி கையெழுத்திட்ட பின்னர் பத்திரத்தை பார்த்தால், இனாம் செட்டில்மெண்ட் எழுதி வாங்கி மோசடி செய்து விட்டனர். 
இதுதொடர்பாக கோர்ட்டில் வழக்கு தொடர்ந்ேதன். இதன்பின்னர் எங்களை கவனிக்காமல் வீட்டைவிட்டு வெளியேற்றி விட்டனர். இதனால் நாங்கள் உறவினர் வீட்டில் தங்கி இருக்கிறோம். தற்போது சாப்பிடக்கூட வழியின்றி, முதுமை காரணமாக நோய்வாய்ப்பட்டு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறேன். சிகிச்சைக்கு கூட பணம் தரவில்லை.
வாழ வழிசெய்ய வேண்டும்
சொத்தினை எழுதி வாங்கிவிட்டு எங்களை பராமரிக்காமல்விட்ட எனது மகனிடம் இருந்து நான் சுயமாக சம்பாதித்த சொத்துக்களை திரும்ப கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். என்னை ஏமாற்றி சொத்துக்களை பெற்றுக்கொண்டது தொடர்பாக கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளேன். இந்நிலையில் உடல்நிலை பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறுவதால் சொத்துக்களை மீட்டு கொடுத்து நாங்கள் வாழ வழிவகை செய்ய வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனுவை பெற்றுக்கொண்ட கலெக்டர் (பொறுப்பு) காமாட்சி கணேசன் விசாரித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். சொத்துக்களை எழுதி வாங்கிவிட்டு பராமரிக்காமல் விட்ட மகனிடம் இருந்து சொத்துக்களை திரும்ப பெற்றுத்தரக்கோரி, ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த முதியவர் ஆம்புலன்சில் வந்து கலெக்டரிடம் மனு கொடுத்தது பரிதாபத்தை ஏற்படுத்தியது.

Next Story