வருண்காந்தி கருத்துக்கு சிவசேனா ஆதரவு


கோப்பு படம்
x
கோப்பு படம்
தினத்தந்தி 12 Oct 2021 2:28 AM GMT (Updated: 12 Oct 2021 2:30 AM GMT)

லகிம்பூர் கேரி சம்பவம் குறித்து வருண்காந்தி கூறிய கருத்துக்கு சிவசேனா ஆதரவு தெரிவித்துள்ளது.

மும்பை, 

லகிம்பூர் கேரி சம்பவம் குறித்து வருண்காந்தி கூறிய கருத்துக்கு சிவசேனா ஆதரவு தெரிவித்துள்ளது. 

வருண்காந்தி எதிர்ப்பு

உத்தரபிரதேச மாநிலம் லகிம்பூர் கேரி மாவட்டத்தில் பா.ஜனதாவினர் காரை மோதியதில் 2 விவசாயிகள் உயிரிழந்தனர். இதையடுத்து நடந்த வன்முறையில் மேலும் 2 விவசாயிகள் உள்பட 6 பேர் பலியானார்கள். 

இந்த சம்பவத்துக்கு பா.ஜனதா எம்.பி. வருண் காந்தி தனது டுவிட்டர் பக்கத்தில் கடுமையான எதிர்ப்பை பதிவு செய்திருந்தார். மேலும் வன்முறை தொடர்பான வீடியோவையும் பதிவேற்றம் செய்திருந்தார். 

பதவியில் இருந்து நீக்கம்

இதையடுத்து வருண் காந்தியும், அவரது தாயும் மத்திய மந்திரியுமான மேனகா காந்தியும் கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்பட்டனர். 

இருப்பினும் தொடர்ந்து வருண் காந்தி இந்த சம்பவத்தில் தனது எதிர்ப்பை பதிவு செய்து வருகிறார். லகிம்பூர் கேரி சம்பவத்தை சிலர் இந்து, சீக்கியர்களுக்கு இடையேயான சண்டையாக மாற்ற முயற்சி செய்வதாகவும், போராடும் விவசாயிகளை காலிஸ்தானிகள் என்று அழைப்பது தவறு எனவும் தெரிவித்திருந்தார். 

இந்தநிலையில் இது குறித்து சிவசேனா கட்சியின் ஆதிகாரப்பூர்வ பத்திரிகையான சாம்னாவில் வெளியான தலையங்கத்தில் கூறப்பட்டு இருப்பதாவது:-

இந்திரா காந்தியின் பேரன்

மக்களுக்குள் பகைமையை பரப்புவதற்கான முயற்சிகளை நாடு ஒருபோதும் ஏற்காது. வருண் காந்தி முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் பேரன் மற்றும் சஞ்சய் காந்தியின் மகன் ஆவார். லகிம்பூர் கேரி கொடூர சம்பவத்தை பார்த்ததும் அவரது ரத்தம் கொதித்தது. அவர் தனது கருத்தை வெளிப்படுத்தினார். மற்ற எம்.பி.க்கள் இந்த கொடூரத்தை பார்த்தும் வாய்மூடி மவுனியாக இருப்பது என்? அவர்களின் ரத்தம் உறைந்துவிட்டதா?
வருண் காந்தி எந்த பின் விளைவையும் யோசிக்காமல் தனது அரசியல் தைரியத்தை காட்டினார். மற்றும் விவசாயிகள் கொல்லப்பட்டதற்கு தனது கண்டனத்தை பதிவு செய்தார். 

வருண் காந்தியை பாராட்டக்கூடிய தீர்மானத்தை விவசாயிகள் நிறைவேற்ற வேண்டும். 

விவசாயிகள் கொல்லப்பட்டதற்கு எதிராக மராட்டிய ஆளும் கட்சிகள் அழைப்பு விடுத்த முழு அடைப்பு தங்கள் உணர்வுகளை வெளிப்படையாக கூற தயங்குபவர்களுக்கான வாய்ப்பாகும். 
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

Next Story