பல்லாவரம் அருகே கொசு மருந்தை குடித்த 3 வயது குழந்தை பலி


பல்லாவரம் அருகே கொசு மருந்தை குடித்த 3 வயது குழந்தை பலி
x
தினத்தந்தி 12 Oct 2021 10:39 AM IST (Updated: 12 Oct 2021 10:39 AM IST)
t-max-icont-min-icon

கொசு மருந்தை குடித்த 3 வயது குழந்தை பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பல்லாவரம் அடுத்த பம்மல் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது. குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனைக்கு மறுத்ததால் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

கொசு மருந்து

சென்னை பல்லாவரம் அடுத்த பம்மல், பாத்திமா நகர், வெள்ளச்சாமி தெருவைச் சேர்ந்தவர் தமிழரசன். இவருடைய மனைவி அருள்மொழி. இவர்களுக்கு 3 வயதில் கிஷோர் என்ற மகன் இருந்தான்.

நேற்று முன்தினம் இரவு வீட்டில் விளையாடிக்கொண்டிருந்த கிஷார், வீட்டில் வைத்து இருந்த கொசு மருத்தை எடுத்து குடித்துவிட்டான். இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர், கிஷோரை அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அழைத்துச்சென்று முதலுதவி சிகிச்சை அளித்தனர். பி்ன்னர் குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.

உயிரிழந்தது

அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக சென்னை எழும்பூர் குழந்தைகள் நல ஆஸ்பத்திரியில் கிஷோரை அனுமதித்தனர். அங்கு குழந்தைக்கு டாக்டர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வந்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று அதிகாலை கிஷோர் பரிதாபமாக உயிரிழந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். தங்கள் குழந்தையின் உடலை பார்த்து பெற்றோர் கதறி அழுதனர்.

இதையடுத்து எழும்பூர் குழந்தைகள் நல ஆஸ்பத்திரியில் இருந்து குழந்தையின் உடலை பிரேத பரிசோதனைக்காக காரிலேயே குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு உறவினர்கள் கொண்டு வந்தனர். ஆனால் குழந்தை இறந்தது, எழும்பூர் குழந்தைகள் நல ஆஸ்பத்திரி என்பதால் இங்கு பிரேத பரிசோதனை நடத்த முடியாது. ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு ெசல்லும்படி டாக்டர்கள் கூறிவிட்டனர்.

சாலை மறியல்

இதனால் பல மணிநேரம் குழந்தையின் உடல் காரிலேயே வைக்கப்பட்டு இருந்ததால் ஆத்திரம் அடைந்த உறவினர்கள், குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரி எதிரே ஜி.எஸ்.டி. சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். சம்பவ இடத்துக்கு வந்த குரோம்பேட்டை போலீசார், மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

குழந்தையின் உடலை நாளை(இன்று) ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனை செய்ய ஏற்பாடு செய்வதாக கூறினர். மேலும் பம்மலில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் தவறான சிகிச்சை அளித்ததாலேயே குழந்தை இறந்ததாகவும் உறவினர்கள் புகார் தெரிவித்தனர். அதற்கு போலீசார், பிரேத பரிசோதனை அறிக்கை வந்தவுடன் அதன் மீது நடவடிக்கை எடுப்பதாக கூறினர்.

இதனால் சமாதானம் அடைந்த உறவினர்கள், சாலை மறியலை கைவிட்டனர். பின்னர் குழந்தையின் உடல், குரோம்பேட்டையில் உள்ள பிணவறையில் வைக்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்து சங்கர் நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


Next Story