தினமும் குடிநீர் வினியோகம்


தினமும் குடிநீர் வினியோகம்
x
தினத்தந்தி 12 Oct 2021 11:36 AM GMT (Updated: 12 Oct 2021 11:36 AM GMT)

தினமும் குடிநீர் வினியோகம்

தளி
உடுமலை  கிராமப்புறங்களுக்கு தினமும் குடிநீர்  வழங்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
குடிநீர் வினியோகம்
உடுமலையை அடுத்த திருமூர்த்தி அணையை ஆதாரமாக கொண்டு கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் உள்ள பாசன நிலங்கள் பயன்பெறும் வகையில் பி.ஏ.பி. பாசனத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வரப்படுகிறது. அத்துடன் தளி கால்வாயை அடிப்படையாகக் கொண்டு உடுமலை, குடிமங்கலம், கணக்கம்பாளையம், பூலாங்கிணர், மடத்துக்குளம் உள்ளிட்ட கூட்டுகுடிநீர் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் மூலமாக உடுமலை நகரம் மட்டுமின்றி சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த ஏராளமான மக்கள் பயனடைந்து வருகின்றனர்.
 உடுமலை நகர பகுதிக்கு மட்டும் நாள்தோறும் தவறாமல் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. கிராமப்புறங்களில் வாரத்துக்கு இரண்டு முறை அதுவும் குறைந்த அளவு தண்ணீரே வழங்கப்படுகிறது.இதனால் பொதுமக்கள் தேவையான அளவு குடிநீர் கிடைக்காமல் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர்.
இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது
தினமும்
திருமூர்த்தி அணையை ஆதாரமாக கொண்டு செயல்பட்டு வருகின்ற கூட்டு குடிநீர் திட்டங்கள் மூலம் குடிநீரை பெற்று வருகின்றோம்.ஆனால் உடுமலை நகரத்தை போன்று கிராமப்புறத்திற்கு அதிகாரிகள் முக்கியத்துவம் அளித்து நாள்தோறும் குடிதண்ணீரை வழங்குவதில்லை. கிராமத்தில் வாரம் இரண்டு முறை மட்டுமே தண்ணீர் வருகிறது. அது எப்போது வரும் என்று தெரியாது.இதற்காக வேலைக்கு செல்லாமல் வருமானத்தை இழந்து குடிநீர் குழாயை நோக்கியவாறு காத்துக் கிடக்க வேண்டும்.அதுவும் குறைந்த அளவு தண்ணீர் மட்டுமே கிடைக்கும்.தண்ணீரை தங்கம்போல் வைத்து சிக்கனமாக பயன்படுத்தி வந்தாலும் பற்றாக்குறை ஏற்பட்டு விடுகிறது.
எனவே உடுமலை நகரபகுதியை போன்று சுற்றுப்புறங்களில் உள்ள கிராமங்களுக்கும் நாள்தோறும் குடிநீரை வழங்குவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். அத்துடன் நகரப்பகுதியில் குடிநீரை சிக்கனமாக வழங்குவதற்கும் அதை ஆய்வு செய்வதற்கும் அதிகாரிகள் முன்வர வேண்டும்.இதனால் தண்ணீரும் வீணாகாது பொதுமக்களுக்கும் பயன்படும் வகையில் ஏதுவாக இருக்கும்.
 இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

----
Reporter : L. Radhakrishnan  Location : Tirupur - Udumalaipet - Thali

Next Story