ஏரல் அருகே மூதாட்டி மர்மச்சாவு உடலை தோண்டி எடுத்து பரிசோதனை


ஏரல் அருகே மூதாட்டி மர்மச்சாவு உடலை தோண்டி எடுத்து பரிசோதனை
x
தினத்தந்தி 12 Oct 2021 12:17 PM GMT (Updated: 12 Oct 2021 12:17 PM GMT)

ஏரல் அருகே மூதாட்டி மர்மமான முறையில் இறந்து போனார். புதைக்கப்பட்ட அவரது உடல் தோண்டி எடுக்கப்பட்டு பரிசோதனை செய்யப்பட்டது.

ஏரல்:
ஏரல் அருகே மூதாட்டி சாவில் மர்மம் இருப்பதாக எழுந்த புகாரை தொடர்ந்து நேற்று அவரது உடல் தோண்டி எடுக்கப்பட்டு பரிசோதனை நடத்தப்பட்டது.
மூதாட்டி சாவு
ஏரல் அடுத்து உள்ள சிறுத்தொண்டநல்லூர் முஸ்லிம் நடுத்தெருவை சேர்ந்தவர் ஹமீர் அலியாஸ் மனைவி சித்தி ஜபூர்நிஷா (வயது 60). ஹமீர் அலியாஸ் 2003-ஆம் ஆண்டு இறந்துவிட்டார். இவர்களுக்கு குழந்தைகள் கிடையாது. சித்தி ஜபூர்நிஷா மட்டும் வீட்டில் தனியாக வசித்து வந்த நிலையில் கடந்த ஆகஸ்டு 24-ஆம் தேதி இறந்து விட்டார். அவரது உடலை, உறவினர்கள் சிறுத்தொண்டநல்லூரில் அடக்கம் செய்தனர்.
இந்த நிலையில் சிறுத்தொண்டநல்லூர் முஸ்லிம் நடுத்தெருவில் வசித்து வரும் சித்தி ஜபூர்நிஷாவின் தம்பி முஹம்மது நியாஸ் (வயது 43), தன்னுடைய அக்காவை பணம் மற்றும் நகைகளுக்காக பராமரிப்பு பணியில் இருந்த பெண் மற்றும் அவரது கணவர் கொலை செய்து விட்டதாகவும், அவரது உடலை தோண்டி பிரேத பரிசோதனை நடத்தி நடவடிக்கை எடுத்திட வேண்டும் என ஏரல் போலீசில் புகார் மனு அளித்திருந்தார்.
உடலை தோண்டி எடுத்து பரிசோதனை
இதையடுத்து நேற்று ஏரல் தாசில்தார் இசக்கிராஜ் மற்றும் வருவாய் துறையினர் முன்னிலையில் சிறுத்தொண்டநல்லூர் சுடுகாட்டில் சித்தி ஜபூர்நிஷா உடல் உறவினர்கள் முன்னிலையில் தோண்டி எடுக்கப்பட்டது. உடல் அழுகிய நிலையில் இருந்ததால் தூத்துக்குடி அரசு மருத்துவமனை டாக்டர்கள் சதாசிவம், உதயகுமார் ஆகியோர் சம்பவ இடத்திலேயே பிரேத பரிசோதனை நடத்தினர். அப்போது போலீஸ் பயிற்சி துணை போலீஸ் சூப்பிரண்டு ஷியாமளாதேவி, ஏரல் இன்ஸ்பெக்டர் மேரி ஜெமிதா, சப்-இன்ஸ்பெக்டர் ராஜாமணி,  ஏரல் வருவாய் ஆய்வாளர் ராமலட்சுமி, சிறுத்தொண்டநல்லூர் கிராம நிர்வாக அதிகாரி முத்துமாலை, தலையாரி வள்ளி ஆகியோர் உடனிருந்தனர்.
பரிசோதனை அறிக்கை வந்தவுடன் மேல் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என ஏரல் போலீசார் தெரிவித்தனர்

Next Story