கோவில்பட்டியில் பா.ஜனதாவினர் போராட்டம்
கோவில்பட்டி பஞ்சாய்த்து யூனியன் அலுவலகம் முன்பு பாஜனதா கட்சியினர் காத்திருப்பு போராட்டம் நடத்தினர்
கோவில்பட்டி:
கோவில்பட்டி தெற்கு ஒன்றிய பா.ஜனதா சார்பில் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் காத்திருப்பு போராட்டம் நடந்தது. கோவில்பட்டி பஞ்சாயத்து யூனியனுக்கு உட்பட்ட நாலாட்டின்புதூர் மந்தை குளத்தை தூர்வாரி குப்பைகளை அகற்ற வேண்டும். பாண்டவர்மங்கலம் பஞ்சாயத்து இ.பி., காலனி பிரதான சாலையை சீரமைத்து தார்ச்சாலை அமைக்க வேண்டும். ஆனந்த நகர், எஸ்.எஸ்.நகர் குறுக்குத் தெருவில் பேவர் பிளாக் சாலை அமைக்க வேண்டும். நரியூத்து கண்மாயை தூர்வாரி நந்தவனம் அமைக்க வேண்டும். பாண்டவர்மங்கலம் துணை சுகாதார நிலையத்தை ஆரம்ப சுகாதார நிலையமாக தரம் உயர்த்தி, பழைய கட்டிடத்தை புதுப்பித்து, தினசரி இயங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மந்தித்தோப்பில் வாறுகால் வசதி, மின் வசதி, சாலை வசதி ஏற்படுத்தித்தர வேண்டும். மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் 50 வயதுக்கு மேற்பட்டவர்களை அனுமதிக்க வேண்டும். ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் அனைத்து கிராமத்திற்கும் குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ரூ.9 லட்சம் ஒதுக்கியும் வில்லிசேரியில் கழிப்பிடம் கட்டாமல் காலதாமதப் படுத்துவதைக் கண்டித்தும் இந்த போராட்டம் நடந்தது.
போராட்டத்துக்கு பா.ஜனதா தெற்கு ஒன்றிய பொறுப்பாளர் மாரிமுத்து தலைமை தாங்கினார். அவர்களுடன் கோவில்பட்டி பஞ்சாயத்து யூனியன் தலைவர் கஸ்தூரி சுப்புராஜ், ஆணையாளர்கள் பாலசுப்பிரமணியன், சீனிவாசன், கிழக்கு காவல் நிலைய இன்ஸ்பெக்டர் சுஜித் ஆனந்த் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில், கோரிக்கைகள் குறித்து முறையாக விசாரணை செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டதையடுத்து, போராட்டக் குழுவினர் கலைந்து சென்றனர்.
Related Tags :
Next Story