ஆட்கொல்லி புலியின் நடமாட்டம் கேமராவில் பதிவானது
ஆட்கொல்லி புலியின் நடமாட்டம் கேமராவில் பதிவானது
கூடலூர்
மசினகுடியில் இருந்து முதுமலை ஊராட்சிக்கு வந்த ஆட்கொல்லி புலியின் உருவம் கேமராவில் பதிவானது. எனவே கிராமப்புற மக்களுக்கு ஒலி பெருக்கி மூலம் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
கேமராவில் பதிவானது
நீலகிரி மாவட்டம் கூடலூர், மசினகுடி பகுதியில் 2 பேரை புலி தாக்கி கொன்றது. இதனால் கூடலூர் பகுதியில் உள்ள தேவன்- 1, ஸ்ரீமதுரை, முதுமலை ஊராட்சி மற்றும் அடர்ந்த வனப்பகுதி மசின குடி, சிங்காரா, மாயார் உள்ளிட்ட இடங்களில்
சுமார் 90-க்கும் மேற்பட்ட கேமராக்களை வனத்துறையினர் பொருத்தி கண்காணித்து வருகின்றனர். மேலும் தேடுதல் வேட்டையிலும் ஈடுபட்டு வருகின்றனர்.
தினமும் கேமராக்களை ஆய்வு செய்து வந்தனர். ஆனால் ஆட்கொல்லி புலி நடமாட்டம் குறித்து எந்த தடயமும் கிடைக்க வில்லை.
இந்த நிலையில் நேற்று காலை முதுமலை ஊராட்சியை சேர்ந்த ஆதிவாசி மக்கள் சிலர் ஆட்கொல்லி புலியின் நடமாட்டத்தை வனப்பகுதியில் கண்டனர்.
இது பற்றி வனத்துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது. உடனே வனத் துறையினர் தானியங்கி கேமராக்களை ஆய்வு செய்தனர்.
அப்போது முதுமலை புலிகள் காப்பக ஓம்பெட்டா வனத்தில் வைத்திருந்த கேமரா வில் ஆட்கொல்லி புலியின் உருவம் பதிவானதை உறுதி செய்தனர்.
இதைத்தொடர்ந்து வனத்துறையின் தேடுதல் குழுவினர் மசினகுடி பகுதியில் இருந்து முதுமலை வனப்பகுதிக்கு விரைந்து வந்து புலியை தேடினர்.
புதரில் படுத்து கிடந்த புலி
அப்போது முதுமலை ஊராட்சிக்கு உட்பட்ட நம்பிகுன்னு பகுதியில் புதர்களுக்கு இடையே ஆட்கொல்லி புலி படுத்து கிடப்பதை அப்பகுதி மக்கள் கண்டனர். தகவல் அறிந்த வனத்துறையினரும் அப்பகுதிக்கு விரைந்து வந்தனர்.
ஆட்கள் நடமாட்டம் அதிகரிப்பதை உணர்ந்த புலி புதர்களுக்கு இடையே பதுங்கி சென்றது. தொடர் தேடுதல் வேட்டை யில் கோழி கண்டி என்ற இடத்தில் ஆட்கொல்லி புலி இருப்பதை வனத்துறையினர் உறுதி செய்தனர்.
எனவே புலியை பிடிப்பதில் சிறந்த பயிற்சி பெற்ற கேரளா மாநிலம் வயநாடு வன அதிரடிப்படையினரும் வரவழைக்கப்பட்டனர். மாலை 6 மணி வரை கோழிகண்டி பகுதியில் புதர்களுக்கு இடையே படுத்து கிடந்த புலி வெளியே வரும்போது மயக்க ஊசி செலுத்தி பிடிப்பதற் காக வனத்துறையினர் அப்பகுதியில் தயாராக நின்றனர்.
ஆனால் புலி புதரில் இருந்து வெளியே வரவில்லை. இதனால் வனத் துறையினர் கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்தியுள்ளனர். இந்த நிலையில் இரவு 7 மணிக்கு ஆட்கொல்லி புலி முதுகுளி பகுதிக்கு இடம்பெயர்ந்தது. இதனால் அப்பகுதி மக்கள் பீதியடைந்துள்ளனர்.
ஒலி பெருக்கி மூலம் எச்சரிக்கை
முன்னதாக மசினகுடியில் இருந்து முதுமலை ஊராட்சிக்கு ஆட்கொல்லி புலி இடம்பெயர்ந்ததால் ஸ்ரீ மதுரை, முதுமலை ஊராட்சிகள் மற்றும் தேவன்-1, மே பீல்டு சுற்றுவட்டார கிராமப்புற மக்கள் உஷாராக இருக்கும்படி ஒலிபெருக்கி மூலம் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
இது குறித்து வனத்துறையினர் கூறும்போது, கடந்த 10 நாட்களாக புலி குறித்து எந்த தகவலும் இல்லாமல் இருந்து வந்தது. தற்போது தெப்பக் காடு, கார்குடி வழியாக முதுமலை ஊராட்சி பகுதிக்கு தேடப்படும் புலி வந்துள்ளது.
ஓம்பெட்டா பகுதியில் வைத்து இருந்த கேமராவில் ஆட்கொல்லி புலி உருவம் பதிவு ஆகி உள்ளது. இதனால் புலி விரை வாக பிடிக்கப்படும் என்றனர்.
Related Tags :
Next Story