கொடைக்கானல் அருகே அருவியில் மூழ்கிய தனியார் நிறுவன ஊழியர் உடல் மீட்பு
கொடைக்கானல் அருகே அருவியில் மூழ்கிய தனியார் நிறுவன ஊழியர் உடல் மீட்கப்பட்டது.
கொடைக்கானல் :
ராமநாதபுரம் மாவட்டம் அழகன்குளத்தை சேர்ந்த பாஸ்கர் மகன் அருண்குமார் (24). தனியார் நிறுவன ஊழியர். இவர் தனது நண்பர்கள் 13 பேருடன் நேற்று முன்தினம் கொடைக்கானல் தாலுகா பேத்துப்பாறை பாரதி அண்ணா நகர் என்ற கிராமத்தின் அருகே உள்ள ஓராவி அருவிக்கு சுற்றுலா சென்றார். அங்கு அருண்குமார் மற்றும் நண்பர்கள் 3 பேர் அருவியில் குளித்தனர். அப்போது அருண்குமார் யாரும் எதிர்பாராதவகையில் ஆழமான பகுதியில் தண்ணீரில் மூழ்கினார். இதுகுறித்து கொடைக்கானல் போலீசாருக்கும், தீயணைப்பு படையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து தீயணைப்பு படையினர் விரைந்து வந்து நேற்று முன்தினம் பலமணிநேரம் தேடுதல் வேட்டை நடத்தினர். பின்னர் இரவு நேரமானதால் தேடுதல் பணி நிறுத்தப்பட்டது.
இந்தநிலையில் நேற்று காலை 2-வது நாளாக ஆர்.டி.ஓ. முருகேசன் நேரடி கண்காணிப்பில் தீயணைப்புபடையினர், போலீசார் மற்றும் வனத்துறையினர் படகு மூலம் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இதில், பிற்பகல் 3 மணி அளவில் அருண்குமாரின் உடல் மீட்கப்பட்டது. பின்னர் அவரது உடல் கொடைக்கானல் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இது தொடர்பாக கொடைக்கானல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.
இதனிடையே இறந்த அருண்குமாரின் உடலை பார்த்து அவரது உறவினர்கள் கதறி அழுதனர். இது பார்க்க பரிதாபமாக இருந்தது. பேத்துப்பாறை பகுதியில் பல அருவிகள் உள்ளன. இதன் அழகை ரசிப்பதற்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர். அவர்களுக்கு தேவையான பாதுகாப்பு வழங்குவதற்கும், விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story