பதிவு திருமணம் செய்ய வந்த பெண்ணை உறவினர்கள் இழுத்துச்சென்று காரில் ஏற்ற முயற்சி


பதிவு திருமணம் செய்ய வந்த பெண்ணை உறவினர்கள் இழுத்துச்சென்று காரில் ஏற்ற முயற்சி
x
தினத்தந்தி 12 Oct 2021 10:01 PM IST (Updated: 12 Oct 2021 10:01 PM IST)
t-max-icont-min-icon

நாகையில், பதிவு திருமணம் செய்ய முயன்ற பெண்ணை அவரது உறவினர்கள் இழுத்து சென்று காரில் ஏற்ற முயற்சி செய்தனர். இதுகுறித்து காதலன் புகாரின் பேரில் போலீசார் அந்த பெண்ணை மீட்டனர்.

நாகப்பட்டினம்:
நாகையில், பதிவு திருமணம் செய்ய முயன்ற பெண்ணை அவரது உறவினர்கள் இழுத்து சென்று காரில் ஏற்ற முயற்சி செய்தனர். இதுகுறித்து காதலன் புகாரின் பேரில் போலீசார் அந்த பெண்ணை மீட்டனர்.

காதல்-எதிர்ப்பு
நாகை மாவட்டம் செம்பியன்மகாதேவி கிராமத்தை சேர்ந்த நல்லதம்பி என்பவரது மகன் மதன்(வயது 24). புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் பகுதியை சேர்ந்தவர் பாரதி (23). இவர்கள் இருவரும் திருச்சியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் பணியாற்றி வருகின்றனர். ஒரே இடத்தில் பணிபுரிந்ததால் இவர்களுக்கிடையே ஏற்பட்ட நட்பு நாளடைவில் காதலாக மாறியது. 
கடந்த 2 ஆண்டுகளாக இருவரும் காதலித்து வந்தனர். இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால், இவர்களது காதலுக்கு பாரதியின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.

பதிவு திருமணம் செய்ய வந்தனர்
இதனால் காதல் ஜோடியினர் கடந்த சில நாட்களுக்கு முன்பு வீட்டை விட்டு வெளியேறி நாகை அருகே உள்ள ஒரு கோவிலில் திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இந்த திருமணத்திற்கும் கடும் எதிர்ப்பு கிளம்பியதால் இருவரும் பதிவு திருமணம் செய்ய முடிவு செய்தனர். இதற்காக இருவரும் நேற்று நாகை கோர்ட்டு வளாகத்தில் உள்ள சார்பதிவாளர் அலுவலகத்திற்கு வந்தனர்.

இழுத்துச்சென்று காரில் ஏற்ற முயன்றனர் 
அங்கு பதிவு திருமணம் செய்து கையெழுத்து போட முயன்றபோது சார்பதிவாளர் அலுவலகத்தின் உள்ளே நுழைந்த பாரதியின் உறவினர்கள், பாரதியை வலுக்கட்டாயமாக காருக்கு இழுத்து சென்றனர். ஆனால் பாரதியோ அவர்களுடன் செல்ல மறுத்து கூச்சலிட்டார். ஆனாலும் அவர்கள் பாரதியை விடாமல் இழுத்துச்சென்றனர். 
அவரது அலறல் சத்தத்தை கேட்ட அங்கிருந்த பொதுமக்கள் பாரதியின் உறவினர்களிடம் கேட்டபோது அதற்கு அவர்கள் பதிலேதும் சொல்லாமல் பாரதியை காரில் ஏற்றிச்செல்ல முயன்றனர். இதையடுத்து அங்கிருந்த பொதுமக்கள் காரை முற்றுகையிட்டு அவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 

காதலன் புகாரில் போலீசார் மீட்டனர்
இந்த நிலையில் மதன்ராஜ், தனக்கும், பாரதிக்கும் திருமணம் நடந்து விட்டதாகவும், தனது மனைவியை அவரது உறவினர்கள் காரில் கடத்திச்செல்ல முயற்சிப்பதாகவும், மீட்டுத்தர வேண்டும் என்றும் வெளிப்பாளையம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். 
இதனைத்தொடர்ந்து போலீசார் பாரதியை மீட்டு போக்சோ சிறப்பு ்கோர்ட்டுக்குள் பாதுகாப்புக்காக கொண்டு சென்றனர். இதுகுறித்து வெளிப்பாயைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

பரபரப்பு
நாகையில் பதிவு திருமணம் செய்ய முயன்ற பெண்ணை உறவினர்கள் வலுக்கட்டாயமாக காரில் ஏற்றிச் செல்ல முயன்றது மற்றும் அந்த பெண்ணை போலீசார் மீட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story