தேனியில் பஸ்களில் உயிரை பணயம் வைத்து பயணிக்கும் மாணவர்கள்
தேனியில் பஸ் படிக்கட்டுகளில் தொங்கிக்கொண்டு மாணவர்கள் உயிரை பணயம் வைத்து பயணம் செய்வது அதிகரித்துள்ளது.
தேனி:
தேனியில் பஸ் படிக்கட்டுகளில் தொங்கிக்கொண்டு மாணவர்கள் உயிரை பணயம் வைத்து பயணம் செய்வது அதிகரித்துள்ளது.
ஆபத்தான பயணம்
தேனி மாவட்டத்தில் பஸ்களில் மாணவ-மாணவிகள் ஆபத்தான பயணம் மேற்கொள்வது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தேனியில் இருந்து வேப்பம்பட்டி, காமாட்சிபுரம் பகுதிகளுக்கும், சுற்றுவட்டாரத்தில் உள்ள கிராமப்புறங்களில் இருந்து தேனிக்கும் காலை, மாலை நேரங்களில் போதிய அளவில் அரசு டவுன் பஸ்கள் இயக்கப்படுவது இல்லை. தமிழக அரசு கொரோனா வழிகாட்டு விதிமுறைகளை பின்பற்றி பஸ்களில் பயணம் செய்ய வேண்டும் என்று அறிவித்துள்ளது. ஆனால், மாவட்டத்தில் எங்கும் அந்த வழிகாட்டு விதிமுறைகள் பின்பற்றப்படுவதில்லை.
சில நாட்களுக்கு முன்பு உத்தமபாளையம் அருகே ராயப்பன்பட்டியில் அரசு பஸ் படிக்கட்டுகளிலும், பின்புற ஏணிப்படியிலும் மாணவர்கள் ஆபத்தான முறையில் தொங்கியபடி பயணம் செய்த சம்பவம் குறித்து மாவட்ட குழந்தைகள் நலக்குழு தானாக முன்வந்து விசாரணையை தொடங்கியது. இதுதொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து விளக்கம் அளிக்க மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர், தேனி அரசு போக்குவரத்து கழக மேலாளர் ஆகியோருக்கு குழந்தைகள் நலக்குழுவினர் நோட்டீஸ் அனுப்பினர்.
கண்டுகொள்ளாத அதிகாரிகள்
இருப்பினும் உயிரை பணயம் வைத்து மாணவர்கள் பயணம் செய்வது தொடர்கதையாக உள்ளது. இந்தநிலையில் தேனியில் இருந்து பழனிசெட்டிபட்டி, வீரபாண்டி வழியாக வேப்பம்பட்டிக்கு நேற்று காலை அரசு டவுன் பஸ் ஒன்று சென்றது. இந்த பஸ்சில் படிக்கட்டுகளில் கால் வைக்கக்கூட இடம் இல்லாத அளவுக்கு ஏராளமான மாணவர்கள் தொங்கியபடி ஆபத்தான முறையில் பயணம் செய்தனர். கை நழுவினால் சாலையில் விழுந்தோ, பஸ்சின் சக்கரத்தில் சிக்கியோ விபத்தில் சிக்கும் அபாயத்தில் பயணம் செய்தனர். ஆனால் இதை தடுக்க வேண்டிய அரசுத்துறை அதிகாரிகள் கண்டுகொள்ளாமல் இருப்பதாக பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
அதேநேரத்தில் புறநகர் பஸ்களில் கூட்டம் குறைவாக காணப்பட்டது. எனவே, இதுபோன்ற ஆபத்தான பயணங்களை தவிர்க்கவும், மாணவர்கள் கொரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி பயணம் செய்வதை உறுதி செய்யவும் மாவட்ட கலெக்டர் ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.
Related Tags :
Next Story