லஞ்சம் வாங்கிய வனத்தோட்ட கழக மண்டல மேலாளர், வனவர் மீது வழக்கு
ரூ.35½ லட்சம் சிக்கிய விவகாரம் தொடர்பாக லஞ்சம் வாங்கிய வனத்தோட்ட கழக மண்டல மேலாளர், வனவர் மீது விழுப்புரம் லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
விழுப்புரம்,
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் வனத்துறை அலுவலர் லஞ்சம் வாங்குவதாக கிடைத்த ரகசிய தகவலின்பேரில் நேற்று முன்தினம் மாலை விழுப்புரம் லஞ்ச ஒழிப்புத்துறை கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு தேவநாதன் தலைமையிலான போலீசார் உளுந்தூர்பேட்டையில் முகாமிட்டு தீவிரமாக கண்காணித்தனர்.
அப்போது இரவு 8 மணியளவில் உளுந்தூர்பேட்டை ரவுண்டானா அருகில் ஒரு கார் வந்து நின்றது. அதன் அருகில் மற்றொரு காரில் இருந்து இறங்கிய ஒருவர், அந்த காரின் அருகில் சென்று அதிலிருந்த ஒருவருக்கு லஞ்சப்பணம் கொடுத்தார். உடனே அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் விரைந்து சென்று அவர்கள் இருவரையும் மடக்கி அவர்கள் கட்டுக்கட்டாக வைத்திருந்த ரூபாய் நோட்டுகளை கைப்பற்றினர்.
மண்டல மேலாளர்
பின்னர் அவர்களை, உளுந்தூர்பேட்டை வனச்சரக அலுவலகத்துக்கு அழைத்துச்சென்று விசாரணை நடத்தியதில் அவர்கள் இருவரும் புதுக்கோட்டை வனத்தோட்ட கழக மண்டல மேலாளர் நேசமணி, உளுந்தூர்பேட்டை வனவர் சங்கர்கணேஷ் என்பது தெரியவந்தது.
மேலும் விசாரணையில், புதுக்கோட்டை மண்டல வனத்தோட்ட கழக அலுவலகத்திற்கு உட்பட்ட காரைக்குடி, அறந்தாங்கி ஆகிய பகுதிகளுக்கு மண்டல மேலாளராக நேசமணி பணியாற்றி வருவதும், கடந்த 2 மாதங்களுக்கு முன்பு திருக்கோவிலூர் மண்டலத்திற்குட்பட்ட திருக்கோவிலூர், சங்கராபுரம், தியாகதுருகம், பகண்டை, திருவண்ணாமலை மாவட்டம் மேல்செங்கம் ஆகிய வனச்சரக பகுதிகளுக்கும் சேர்த்து பொறுப்பு அதிகாரியாக செயல்பட்டு வந்துள்ளார்.
ரூ.35½ லட்சம் சிக்கியது
இவர் வனத்தோட்ட காப்புக்காடு பகுதிகளில் மரக்கன்று, செடிகள் வளர்த்து பராமரிக்கவும், உற்பத்தி செய்யவும் வரும் ஒப்பந்ததாரர்களிடம் இருந்து ஒரு குறிப்பிட்ட தொகையை கமிஷனாக தரும்படியும், அந்த தொகையை அந்தந்த வனவர்கள் வசூலித்து தரும்படியும் கூறியுள்ளதன்பேரில் ஒப்பந்ததாரர்களிடம் இருந்து வசூலித்த தொகையான ரூ.11 லட்சத்து 64 ஆயிரத்து 500-ஐ உளுந்தூர்பேட்டை வனவர் சங்கர்கணேஷ் பெற்று அந்த தொகையை மண்டல மேலாளர் நேசமணியிடம் கொடுக்க முயன்றபோது இருவரும் சிக்கியது தெரியவந்தது.
இதையடுத்து ரூ.11 லட்சத்து 64 ஆயிரத்து 500-ஐ போலீசார் கைப்பற்றினர். மேலும் நேசமணி வந்த காரை போலீசார் சோதனை செய்தபோது அதில் ரூ.24 லட்சம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த தொகையை புதுக்கோட்டை, காரைக்குடி, அறந்தாங்கியில் உள்ள ஒப்பந்ததாரர்களிடம் இருந்து வசூல் செய்துகொண்டு உளுந்தூர்பேட்டை வந்தது தெரியவந்ததன் அடிப்படையில் ரூ.24 லட்சத்தையும் போலீசார் கைப்பற்றினர்.
2 பேர் மீது வழக்குப்பதிவு
மேலும் மண்டல மேலாளர் நேசமணி, இதுபோன்று யார், யாரிடமெல்லாம் லஞ்சப்பணம் பெற்றுள்ளார் என்பது குறித்து உளுந்தூர்பேட்டை வனச்சரக அலுவலகத்தில் இருந்து அவரிடமும் மற்றும் அந்த அலுவலகத்தில் உள்ள அலுவலர்கள், ஊழியர்களிடமும் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். இந்த விசாரணை நேற்று அதிகாலை 5 மணி வரை நடைபெற்றதாக கூறப்படுகிறது.
அதன் பிறகு கணக்கில் வராத ரூ.35 லட்சத்து 64 ஆயிரத்து 500-யும் மற்றும் முக்கிய ஆவணங்கள் சிலவற்றையும் லஞ்ச ஒழிப்பு போலீசார் கைப்பற்றி விழுப்புரம் லஞ்ச ஒழிப்பு அலுவலகத்திற்கு எடுத்துச்சென்றனர். மேலும் லஞ்சம் வாங்கியதாக மண்டல மேலாளர் நேசமணி, வனவர் சங்கர்கணேஷ் ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் புதுக்கோட்டையில் உள்ள மண்டல மேலாளர் நேசமணி வீட்டிலும் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story