மாவட்ட ஊராட்சி 3வது வார்டில் திமுக வேட்பாளர் வெற்றி


மாவட்ட ஊராட்சி 3வது வார்டில் திமுக வேட்பாளர் வெற்றி
x
தினத்தந்தி 12 Oct 2021 11:38 PM IST (Updated: 12 Oct 2021 11:38 PM IST)
t-max-icont-min-icon

மாவட்ட ஊராட்சி 3வது வார்டில் திமுக வேட்பாளர் வெற்றி

கோவை

கோவை மாவட்டத்தில் நடந்த ஊரக உள்ளாட்சி இடைத்தேர்தல் முடிவில் மாவட்ட ஊராட்சி 3-வது வார்டில் தி.மு.க. வேட்பாளர் அமோக வெற்றி பெற்றார். மேலும், 2 பஞ்சாயத்து தலைவர் பதவிகளையும் கைப்பற்றியது.



உள்ளாட்சி இடைத்தேர்தல்


கோவை மாவட்டத்தில் காலியாக இருந்த மாவட்ட ஊராட்சி 3-வது வார்டு கவுன்சிலர் பதவி, ஆனைமலை ஒன்றியம் திவான்சாபுதூர், பொள்ளாச்சி தெற்கு ஒன்றியம் தென்குமாரப்பாளையம் கிராம ஊராட்சி தலைவர்கள் பதவி மற்றும் கிராம ஊராட்சி கவுன்சிலர் பதவிகளான பெள்ளாதி 3-வது வார்டு, தேக்கம்பட்டி 15-வது வார்டு, வெள்ளியங்காடு 10-வது வார்டு, நெம்பர் 10 முத்தூர் 2-வது வார்டு, சீரபாளையம் 4-வது வார்டு, குருடம்பாளையம் 9-வது வார்டு, ஜமீன் முத்தூர் 6-வது வார்டு, கள்ளிபாளையம் 5-வது வார்டு, போகம்பட்டி 6-வது வார்டு, மாதம்பட்டி 3-வது வார்டு ஆகிய 13 உள்ளாட்சி பதவிகளுக்கு இடைத்தேர்தல் கடந்த 9-ந் தேதி நடைபெற்றது. இதற்கான வேட்பு மனு கடந்த மாதம் 15-ந் தேதி தாக்கல் செய்யப்பட்டது. இதில் மொத்தம் 51 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இதற்காக 128 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு இருந்தன.
இதில் மொத்த வாக்காளர்கள் 77 ஆயிரத்து 104 பேர் உள்ளனர். இந்த தேர்தலில் 55 ஆயிரத்து 680 பேர் வாக்களித்தனர். இதனால் 72.21 சதவீதம் வாக்குகள் பதிவானது. முன்னதாக 27 பதற்றமான வாக்குச்சாவடிகளில் வெப்கேமரா பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டது. மேலும் அங்கு துப்பாக்கி ஏந்திய போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

வாக்கு எண்ணிக்கை

இந்தநிலையில் நேற்று அந்தந்த ஊராட்சி ஒன்றியங்களுக்குட்பட்ட 11 இடங்களில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. இதற்காக மேஜைகள் அமைக்கப்பட்டு இருந்தன. வாக்கு எண்ணுவதற்காக பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கட்டுக்காப்பு மையத்தில் இருந்து வாக்குச்சீட்டுகள் போடப்பட்டு இருந்த பெட்டிகளை தேர்தல் பணியாளர்கள் எடுத்து வந்து வாக்கு எண்ணும் மையத்திற்கு கொண்டு வந்தனர்.
இதையடுத்து முகவர்கள் முன்னிலையில் வாக்குப்பெட்டிகளின் சீல் திறக்கப்பட்டு வாக்கு எண்ணும் பணி காலை 8 மணிக்கு தொடங்கி மும்முரமாக நடந்தது. வாக்கு எண்ணும் மையத்துக்குள் செல்போன் கொண்டு செல்ல அனுமதி அளிக்கப்படவில்லை.

தி.மு.க. அபார வெற்றி

அன்னூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கோவை மாவட்ட ஊராட்சி வார்டு எண் 3-க்கான மாவட்ட கவுன்சிலர் பதவிக்கு தி.மு.க., அ.தி.மு.க., சுயேட்சைகள் உள்பட 11 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். 59 ஆயிரத்து 240 வாக்காளர்கள் உள்ளனர். அதில் 42 ஆயிரத்து 78 பேர் வாக்களித்தனர். ஆண்கள் 20,854, பெண்கள் 20 ஆயிரத்து 224 பேர் என வாக்களித்தால் மொத்தம் 71 சதவீதம் வாக்குப்பதிவு ஆனது.


இதற்கான வாக்கு எண்ணிக்கை அன்னூர் சத்தி ரோட்டில் உள்ள தனியார் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. இதில் முதல் கட்டமாக தபால் ஓட்டுகள் எண்ணப்பட்டன. அதில் தி.மு.க.வை சேர்ந்த ஆனந்தன் ஆரம்பத்தில் இருந்தே முன்னிலை பெற்றார். இதையடுத்து வாக்குப் பெட்டிகள் அந்தந்த முகவர்கள் முன்னிலையில் சீல் உடைக்கப்பட்டு தனித்தனியாக பிரித்து வாக்குகள் எண்ணும் பணி நடைபெற்றது.


வாக்கு எண்ணும் பணியானது காலை 8 மணிக்கு தொடங்கி இரவு 9.30 மணி வரை நீடித்தது. வாக்குச்சீட்டு முறை என்பதால் அவற்றை எண்ணுவதில் மிகவும் காலதாமதம் ஏற்பட்டது. ஆயிரத்துக்கும் கீழ் பதிவாகி இருந்த மையங்களில் ஓட்டுகளை விரைந்து எண்ணப்பட்டன. முடிவில் தி.மு.க. வேட்பாளர் ஆனந்தன் 26 ஆயிரத்து 287 ஓட்டுகள் பெற்று 13 ஆயிரத்து 36 வாக்குகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட அ.தி.மு.க. வேட்பாளர் கருப்புசாமி 13 ஆயிரத்து 251 வாக்குகள் பெற்று தோல்வியடைந்தார். முன்னதாக இங்கு நடந்த வாக்கு எண்ணும் பணிகளை மாவட்ட கலெக்டர் சமீரன் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

2 கிராம ஊராட்சி தலைவர் பதவி


பொள்ளாச்சி (தெற்கு) ஊராட்சி ஒன்றியம் தென்குமாரபாளையம் ஊராட்சி தலைவர் பதவிக்கான தேர்தலில் தி.மு.க. சார்பில் நாராயணமூர்த்தி, அ.தி.மு.க. சார்பில் சரஸ்வதி ஆகியோர் போட்டியிட்டனர். இதில் தி.மு.க. வேட்பாளர் நாராயணமூர்த்தி 1451 வாக்குகள் பெற்று 613 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட அ.தி.மு.க. வேட்பாளர் சரஸ்வதி 838 வாக்குகள் பெற்று தோல்வி அடைந்தார்.
ஆனைமலை ஊராட்சி ஒன்றியம் திவான்சாபுதூர் கிராம ஊராட்சி தலைவர் தேர்தலில் தி.மு.க. சார்பில் கலைவாணி, அ.தி.மு.க. சார்பில் சரோஜினி ஆகியோர் போட்டியிட்டனர். இதில் தி.மு.க. ஆதரவு வேட்பாளர் கலைவாணி 4,372 வாக்குகள் பெற்று 2,297 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து களம் கண்ட அ.தி.மு.க. வேட்பாளர் சரோஜினி 2,075 வாக்குகள் பெற்று தோல்வி அடைந்தார்.

2 இடங்களை அ.தி.மு.க. கைப்பற்றியது

காரமடை ஊராட்சி ஒன்றியம் தேக்கம்பட்டி ஊராட்சியில் வார்டு உறுப்பினருக்கான தேர்தலில் 15-வது வார்டில் தி.மு.க. சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் முத்துக்குமார் 379 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். வெள்ளியங்காடு ஊராட்சியில் 10-வது வார்டில் தி.மு.க. சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் முருகம்மாள் 213 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். பெள்ளாதி ஊராட்சியில் 3-வது வார்டில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் சுரேஷ் 372 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.


கிணத்துக்கடவு ஊராட்சி ஒன்றியத்தில் நெம்பர் 10 முத்தூர் ஊராட்சியில் 2-வது வார்டில் தி.மு.க. வேட்பாளர் மகேந்திரன் 112 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். மதுக்கரை ஊராட்சி ஒன்றியத்தில் சீரபாளையம் ஊராட்சியில் 4-வது வார்டில் தி.மு.க. வேட்பாளர் ஜெயபிரகாஷ் 168 வாக்குகள் பெற்று வெற்றி வாகை சூடினார்.
பெரியநாயக்கன்பாளையம் ஊராட்சி ஒன்றியத்தில் குருடம்பாளையம் ஊராட்சியில் 9-வது வார்டில் தி.மு.க. வேட்பாளர் அருள் ராஜ் 387 வாக்குகள் பெற்று வென்றார். 

பொள்ளாச்சி (வடக்கு) ஊராட்சி ஒன்றியத்தில் ஜமீன் முத்தூர் ஊராட்சியில் 6-வது வார்டில் தி.மு.க. வேட்பாளர் செந்தில்குமார் 289 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். சர்க்கார் சாமக்குளம் ஊராட்சி ஒன்றியத்தில் கள்ளிப்பாளையம் ஊராட்சியில் 5-வது வார்டில் தி.மு.க. வேட்பாளர் மனோன்மணி 155 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். சுல்தான்பேட்டை ஊராட்சி ஒன்றியத்தில் போகம்பட்டி ஊராட்சியில் 6-வது வார்டில் அ.தி.மு.க. வேட்பாளர் சந்தியா 214 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். தொண்டாமுத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் மாதம்பட்டி ஊராட்சியில் 3-வார்டில் 259 வாக்குகள் பெற்று தி.மு.க. வேட்பாளர் பிரகாஷ் வெற்றி பெற்றார்.

Next Story