ஊரக உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் விவரம்; எருமப்பட்டி 15-வது வார்டு கவுன்சிலர் பதவியை தி.மு.க. கைப்பற்றியது


ஊரக உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் விவரம்; எருமப்பட்டி 15-வது வார்டு கவுன்சிலர் பதவியை தி.மு.க. கைப்பற்றியது
x
தினத்தந்தி 12 Oct 2021 11:45 PM IST (Updated: 12 Oct 2021 11:45 PM IST)
t-max-icont-min-icon

நாமக்கல் மாவட்டத்தில் நடந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்றவர்களின் விவரங்கள் அறிவிக்கப்பட்டன. இதில் எருமப்பட்டி ஒன்றிய 15-வது வார்டு கவுன்சிலர் பதவியை தி.மு.க. கைப்பற்றியது.

நாமக்கல்:
ஊரக உள்ளாட்சி தேர்தல்
தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடைபெறாத செங்கல்பட்டு, காஞ்சீபுரம் உள்ளிட்ட 9 மாவட்டங்களில் அக்டோபர் மாதம் 6 மற்றும் 9-ந் தேதிகளில் 2 கட்டங்களாக தேர்தல் நடைபெறும் என மாநில தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதோடு சேர்த்து பிற மாவட்டங்களில் காலியாக உள்ள ஊரக உள்ளாட்சி பதவிகளுக்கும் அக்டோபர் 9-ந் தேதி தேர்தல் நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.
அதன்படி நாமக்கல் மாவட்டத்தில் காலியாக இருந்த 6-வது வார்டு மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் பதவி (பொது), எருமப்பட்டி ஒன்றியத்தில் 15-வது வார்டு ஒன்றியக்குழு உறுப்பினர் பதவி (பொது), கோப்பணம்பாளையம், திம்மநாயக்கன்பட்டி, ஆவல்நாயக்கன்பட்டி, கூடச்சேரி, நடுகோம்பை ஊராட்சி மன்ற தலைவர்கள் பதவிகளுக்கு 9-ந் தேதி தேர்தல் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
63 பேர் போட்டி
இந்த பதவிகளுக்கான வேட்பு மனுதாக்கல் கடந்த மாதம் 15-ந் தேதி தொடங்கி 22-ந் தேதி முடிவடைந்தது. தொடர்ந்து 23-ந் தேதி வேட்புமனுக்கள் பரிசீலனை செய்யப்பட்டன. மொத்தம் 25 பதவிகளுக்கு 109 பேர் வேட்புமனுக்களை தாக்கல் செய்தனர். வேட்புமனு பரிசீலனையின் போது 5 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. மீதமுள்ள 104 வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன. 
இந்தநிலையில் 31 வேட்புமனுக்கள் திரும்ப பெறப்பட்டன. எனவே மீதமுள்ள 63 வேட்புமனுக்கள் ஏற்று கொள்ளப்பட்டன. இதையடுத்து 25-ந் தேதி இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது. வேட்பாளர்களுக்கான சின்னங்களும் ஒதுக்கீடு செய்யப்பட்டன.
அதன்படி மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் பதவிக்கு 12 பேரும், ஒன்றியக்குழு உறுப்பினர் பதவிக்கு 8 பேரும், ஊராட்சி மன்ற தலைவர் பதவிகளுக்கு 14 பேரும், ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு 29 பேரும் என மொத்தம் 63 பேர் போட்டியிட்டனர்.
10 பேர் போட்டியின்றி தேர்வு
இதனிடையே 2 ஊராட்சி தலைவர்கள் பதவி மற்றும் 8 ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் பதவிகளுக்கு தலா ஒருவர் மட்டுமே போட்டியிட்டதால், அவர்கள் அனைவரும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. 
இதையடுத்து மீதமுள்ள 15 பதவிகளுக்கான தேர்தல் பணிகள் மும்முரமாக நடந்தன. இதற்காக மாவட்டத்தில் 141 வாக்குச்சாவடிகள் ஏற்படுத்தப்பட்டன. இதில் 35 வாக்குச்சாவடிகள் பதற்றமானவையாக அறிவிக்கப்பட்டன. இதையடுத்து கடந்த 9-ந் தேதி 15 பதவிகளுக்கான தேர்தல் நடந்தது.
வாக்கு எண்ணிக்கை
தேர்தல் நடந்த பதவிகளுக்கான வாக்கு எண்ணிக்கை நேற்று நடந்தது. மாவட்ட ஊராட்சிக்குழு உறுபினர் பதவிக்கான தேர்தல் வாக்கு எண்ணிக்கை வெண்ணந்தூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடந்தது. இதற்காக அங்கு தடுப்புகள் அமைக்கப்பட்டிருந்தன. இதேபோல் எருமப்பட்டி ஒன்றிய அலுவலகத்தில் 15-வது வார்டு ஒன்றிய கவுன்சிலர் பதவி மற்றும் பவித்திரம் ஊராட்சி 2-வது உறுப்பினர், கோடங்கிபட்டி 9-வது உறுப்பினர் பதவிக்கான வாக்கு எண்ணிக்கை நடந்தது.
15 பதவிகளுக்கான வாக்கு எண்ணிக்கை மொத்தம் 8 இடங்களில் நேற்று நடந்தது. வாக்கு எண்ணும் மையங்களில் 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
காலை 8 மணிக்கு வாக்குகள் எண்ணும் பணி தொடங்கியது. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டன. தொடர்ந்து சீல் வைக்கப்பட்டிருந்த வாக்குப்பெட்டிகள் வேட்பாளர்களின் முகவர்கள் முன்னிலையில் திறக்கப்பட்டன. பின்னர் வாக்குப்பெட்டிகளில் இருந்த வாக்குகள் எண்ணும் பணி மும்முரமாக நடந்தது. ஒவ்வொரு சுற்று முடிவின் போதும் வேட்பாளர்கள் பெற்ற வாக்குகள் விபரம் அறிவிக்கப்பட்டது. 
கலெக்டர் ஆய்வு
வெண்ணந்தூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடந்த வாக்கு எண்ணும் பணியை மாவட்ட கலெக்டர் ஸ்ரேயாசிங் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். வாக்குகள் அனைத்தும் எண்ணப்பட்டு இரவு 8 மணிக்கு முடிவுகள் அறிவிக்கப்பட்டது. 
இதில் தி.மு.க. சார்பில் போட்டியிட்ட துரைசாமி, அ.தி.மு.க. வேட்பாளரான கண்ணனை விட 15 ஆயிரம் வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
ஒன்றிய கவுன்சிலர்
எருமப்பட்டி ஒன்றிய 15-வது வார்டு கவுன்சிலர் பதவிக்கு மொத்தம் 8 பேர் போட்டியிட்டனர். மொத்தம் உள்ள 5 ஆயிரத்து 742 வாக்காளர்களில் 4 ஆயிரத்து 973 பேர் தங்களது வாக்குகளை பதிவு செய்தனர். இதில் தி.மு.க. சார்பில் போட்டியிட்ட பெரியகருப்பன் 3 ஆயிரத்து 135 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்ட விஜய் ஆயிரத்து 696 வாக்குகள் பெற்றார். 
அ.ம.மு.க. சார்பில் பிரசர் குக்கர் சின்னத்தில் போட்டியிட்ட சிவக்குமார் 24 வாக்குகளும், நாம் தமிழர் கட்சி சார்பில் கரும்பு விவசாயி சின்னத்தில் போட்டியிட்ட முருகேசன் 31 வாக்குகளும் பெற்றனர். அ.தி.மு.க. வேட்பாளரை தவிர மற்ற 6 பேரும் டெபாசிட் இழந்தது குறிப்பிடத்தக்கது.
எருமப்பட்டி ஒன்றிய கவுன்சிலர் தேர்தலில் வெற்றி பெற்ற முத்துகருப்பனுக்கு தேர்தல் நடத்தும் அலுவலர் கிருஷ்ணமூர்த்தி சான்றிதழை வழங்கினார். அப்போது அமைச்சர் மதிவேந்தன், கே.ஆர்.என்.ராஜேஷ்குமார் எம்.பி., சேந்தமங்கலம் எம்.எல்.ஏ. பொன்னுசாமி, ஒன்றிய தி.மு.க. செயலாளர் பாலு என்கிற பாலசுப்பிரமணியன், நகர பொறுப்பாளர் பழனியாண்டி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் குணாளன், பிரபாகரன் ஆகியோர் உடன் இருந்தனர்.
ஊராட்சி மன்ற தலைவர்கள்
கபிலர்மலை ஊராட்சி ஒன்றியம் கோப்பணம்பாளையம் ஊராட்சி மன்ற தலைவர் (பொது) பதவிக்கு நடந்த தேர்தலில் அன்பழகன் 891 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இவருக்கு அடுத்தபடியாக நடராஜன் 817 வாக்குகள் பெற்றார். இந்த ஊராட்சியில் போட்டியிட்ட 4 வேட்பாளர்களில் 2 பேர் டெபாசிட் இழந்தனர்.
நாமகிரிப்பேட்டை ஊராட்சி ஒன்றியம் திம்மநாயக்கன்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் (பொது) பதவிக்கு நடந்த தேர்தலில் சித்தராஜ் 755 வாக்குகள் பெற்று வெற்றிபெற்றார். இவருக்கு அடுத்தபடியாக செல்வம் 733 வாக்குகள் பெற்றார். இந்த ஊராட்சியில் போட்டியிட்ட 6 வேட்பாளர்களில் 3 பேர் டெபாசிட் இழந்தனர்.
பரமத்தி ஊராட்சி ஒன்றியம் கூடச்சேரி ஊராட்சி மன்ற தலைவர் (பொது) பதவிக்கு நடந்த தேர்தலில் சுப்பிரமணி 775 வாக்குகள் பெற்று வெற்றிபெற்றார். இவருக்கு அடுத்தபடியாக பெரியசாமி 366 வாக்குகள் பெற்றார். இந்த ஊராட்சியில் போட்டியிட்ட 4 வேட்பாளர்களில் 2 பேர் டெபாசிட் இழந்தனர்.
வார்டு உறுப்பினர்கள்
இதேபோல் கோணங்கிபட்டி ஊராட்சி 9-வது வார்டு உறுப்பினராக லட்சுமி, பவித்திரம் ஊராட்சி 2-வது வார்டு உறுப்பினராக சுதாகரன், என்.புதுப்பட்டி ஊராட்சி 8-வது வார்டு உறுப்பினராக கிருபாகரன், தின்னனூர்நாடு ஊராட்சி 5-வது வார்டு உறுப்பினராக அன்புராஜ், கார்கூடல்பட்டி ஊராட்சி 6-வது வார்டு உறுப்பினராக சித்ரா, மங்களபுரம் ஊராட்சி 8-வது வார்டு உறுப்பினராக மூர்த்தி, பெரப்பன்சோலை ஊராட்சி 2-வது வார்டு உறுப்பினராக செல்வராணி, காரைக்குறிச்சிபுதூர் ஊராட்சி 3-வது வார்டு உறுப்பினராக வசந்தா, சர்க்கார் உடுப்பம் ஊராட்சி 6-வது வார்டு உறுப்பினராக குமாரசாமி, திருமலைப்பட்டி ஊராட்சி 7-வது வார்டு உறுப்பினராக கோகிலன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.
கொல்லிமலை ஒன்றியத்தில் உள்ள தின்னனூர் நாடு ஊராட்சி 5-வது வார்டுக்கு நடந்த தேர்தலில் தி.மு.க. ஆதரவு பெற்ற வேட்பாளர் அன்புராஜ் 108 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அவருக்கு தேர்தல் அதிகாரி நடராஜன் வெற்றி சான்றிதழை வழங்கினார். அப்போது உதவி தேர்தல் அலுவலர் செந்தில்குமார், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் நாகலிங்கம், கொல்லிமலை ஒன்றிய தி.மு.க. செயலாளர் செந்தில் முருகன், கிளை செயலாளர் ராஜேந்திரன், தகவல் தொழில் நுட்ப அணி பழனிசாமி ஆகியோர் உடன் இருந்தனர்.
ஒரு ஓட்டில் வென்ற வேட்பாளர்
புதுச்சத்திரம் ஒன்றியம் காரைக்குறிச்சிபுதூர் ஊராட்சி 3-வது வார்டு உறுப்பினர் பதவிக்கு நடந்த தேர்தலில் 5 பேர் போட்டியிட்டனர். இந்த வார்டில் 113 வாக்குகள் பதிவாகின. இதில் 3 வாக்குகள் செல்லாதவை என அறிவிக்கப்பட்டது. மீதமுள்ள 110 வாக்குகளில் வசந்தா 44 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இவருக்கு அடுத்த படியாக லட்சுமி 43 வாக்குகள் பெற்று ஒரு ஓட்டில் தோல்வியை தழுவினார்.
போட்டியின்றி தேர்வு
நாமக்கல் மாவட்டத்தில் 25 பதவிகளுக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டது. இதில் 2 ஊராட்சி மன்ற தலைவர்கள் மற்றும் 8 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.

Next Story