முத்திரையிடப்படாத எடை அளவைகளை உபயோகப்படுத்தினால் அபராதம்


முத்திரையிடப்படாத எடை அளவைகளை உபயோகப்படுத்தினால் அபராதம்
x
தினத்தந்தி 13 Oct 2021 12:27 AM IST (Updated: 13 Oct 2021 12:27 AM IST)
t-max-icont-min-icon

முத்திரையிடப்படாத எடை அளவைகளை உபயோகப்படுத்தினால் அபராதம் விதிக்கப்படும் என தொழிலாளர் உதவி ஆணையர் அமுலாக்கம் பாஸ்கரன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

திருவாரூர்:
முத்திரையிடப்படாத எடை அளவைகளை உபயோகப்படுத்தினால் அபராதம் விதிக்கப்படும் என தொழிலாளர் உதவி ஆணையர் அமுலாக்கம் பாஸ்கரன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறி்த்து அவர் விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-
ஆய்வு
திருவாரூர் தொழிலாளர் உதவி ஆணையர் அமலாக்கம் ப.பாஸ்கரன் தலைமையில் மயிலாடுதுறை தொழிலாளர் உதவி ஆய்வர்கள் ராதிகா, சிவகாமி மற்றும் முத்திரை ஆய்வர் கார்த்திகேயன் ஆகியோர் மற்றும் போலீசார் அடங்கிய குழுவினர் மயிலாடுதுறையில் பெரியகடைத்தெரு. பஸ் நிலையம் அருகாமையில் உள்ள காய்கறி, மலர் வணிகம் மற்றும் பழக்கடைகளில் திடீர் ஆய்வு செய்தனர்.
முத்திரையிடப்பட்ட எடைகள்
ஆய்வின்போது உரிய காலத்தில் மறு முத்திரையிடாத எலக்ட்ரானிக் தராசுகள்-16, மேசை தராசுகள்-6, ஒரு விட்டத்தராசுகள் மற்றும் இரும்பு எடைக்கற்கள் மற்றும் தரப்படுத்தப்படாத அளவையான இரும்பு படிகள் பறிமுதல் செய்யப்பட்டன.
மேலும் இரும்பு மரக்கால் அல்லது படி போன்ற தரப்படுத்தப்படாத அளவைகளை வணிகத்தில் உபயோகப்படுத்தக் கூடாது. மேலும் தரப்படுத்தப்பட்ட அரசினால் முத்திரையிடப்பட்ட எடை அளவைகள் மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும்.
தரப்படுத்தப்படாத அளவைகளை உபயோகப்படுத்தினால் அதிகபட்சமாக ரூ.5 ஆயிரம், இரண்டாவது குற்றமாக இருப்பின் குறைந்த பட்சமாக 3 மாத சிறைத்தண்டனையும், அதிகபட்சமாக ஒரு ஆண்டு சிறைதண்டனையும் அல்லது இரண்டுமே விதிக்க சட்டத்தில் வழிவகை உள்ளது.
நுகர்வோர் நலன் பாதுகாத்திட
முத்திரையிடப்படாத எடை அளவைகள் முரண்பாடு காணப்படும் பட்சத்தில் அதிகபட்சமாக ரூ.10 ஆயிரம், இரண்டாவது குற்றமாக இருப்பின் அதிகபட்சமாக ஒரு ஆண்டு சிறை தண்டனை அல்லது அபராதம் அல்லது அபராதத்துடன் கூடிய சிறை தண்டனையும் விதிக்க சட்டத்தில் வழிவகை உள்ளது. எனவே அனைத்து வணிகர்களும் முத்திரையிட்ட தரப்படுத்தப்பட்ட எடை அளவைகளை வியாபாரத்தில் உபயோகித்து நுகர்வோர் நலன் பாதுகாத்திட கேட்டு கொள்ளப்படுகிறது.
வணிக நிறுவனத்தில் பயன்படுத்தப்படும் எடை அளவைகளின் முத்திரை சான்றிதழை வெளிக்காட்டி வைத்திருக்க வேண்டும். தவறினால் சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story