ஆம்பூர் அருகே மழைநீருடன் கழிவுநீர் வீட்டுக்குள் புகுந்ததால் பொதுமக்கள் சாலை மறியல்


ஆம்பூர் அருகே  மழைநீருடன் கழிவுநீர் வீட்டுக்குள் புகுந்ததால் பொதுமக்கள் சாலை மறியல்
x
தினத்தந்தி 12 Oct 2021 7:35 PM GMT (Updated: 12 Oct 2021 7:35 PM GMT)

ஆம்பூர் அருகே மழைநீருடன், கழிவுநீர் வீடுகளுக்குள் புகுந்ததால் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

ஆம்பூர்

ஆம்பூர் அருகே மழைநீருடன், கழிவுநீர் வீடுகளுக்குள் புகுந்ததால்  பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது

ஆம்பூரை அடுத்த விண்ணமங்கலம், மின்னூர் ஆகிய பகுதிகளில் நேற்று மாலை திடீரென கனமழை பெய்தது. இதன் காரணமாக பல்வேறு இடங்களில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. விண்ணமங்கலம் தேசிய நெடுஞ்சாலையில் பெருக்கெடுத்து ஓடிய மழைநீருடன் கழிவுநீர் கலந்து அருகில் இருக்கும் குடியிருப்பு பகுதிகளுக்குள் புகுந்தது. மேலும் தாழ்வான இடங்களில் கழிவுநீர் சென்று சூழ்ந்ததால் அப்பகுதியினர் வீட்டை விட்டு வெளியேற இயலாமல் தவித்தனர்.

மேலும் அப்பகுதியில் உள்ள ராஜாஜி வீதி, அன்னை தெரசா வீதி உள்ளிட்ட பல்வேறு தெருக்களில் வீடுகளுக்குள் கழிவு நீர் புகுந்தது. தண்ணீர் வீடுகளுக்குள் புகுந்ததால் ஒரு வீட்டின் சுவர் இடிந்து விழுந்தது. அதில் 3 பேர் காயமடைந்தனர். அவர்கள் ஆம்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.

சாலை மறியல்

இதனால் அப்பகுதியினர் தங்களுக்கு நிரந்தர தீர்வு ஏற்படுத்தக்கோரி சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவலறிந்த ஆம்பூர் தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். இதுகுறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர்.
அதைத்தொடர்ந்து பொதுமக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த மறியல் காரணமாக விண்ணமங்கலம் தேசிய நெடுஞ்சாலையில் சுமார் ஒரு கிலோமீட்டர் தூரம் வாகனங்கள் அணிவகுத்து நின்றன.

Next Story