புகார் பெட்டி


புகார் பெட்டி
x
தினத்தந்தி 12 Oct 2021 7:50 PM GMT (Updated: 12 Oct 2021 7:50 PM GMT)

‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு வந்த மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்

‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு வந்த மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

தாழ்வாக செல்லும் மின்கம்பி

கல்லணை - திருவையாறு சாலையில் பவனமங்கலம் கிராமம் உள்ளது.இந்த கிராமத்தில் மின்கம்பிகள் தாழ்வாக செல்கின்றன.  மின்கம்பிகள் மீது லாரி, பஸ்கள் உரசி அசம்பாவிதம் ஏற்பட்டு விடுமோ? என பொதுமக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர். எனவே தாழ்வாக செல்லும் மின் கம்பிகளை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அந்தப் பகுதி மக்களின் கோரிக்கையாகும்.
-தமிழ்செல்வன், திருவையாறு.

தெருவில் தேங்கி நிற்கும் கழிவுநீர்

தஞ்சை மாவட்டம் கண்டிதம்பட்டு ஆதிதிராவிடர் தெருவில் 50-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்தப் பகுதிகளில் உள்ள வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் செல்வதற்கு வசதியாக கழிவுநீர் வடிகால் அமைக்கப்படவில்லை. இதன் காரணமாக வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் தெருவில் தேங்கி நிற்கிறது. கழிவுநீர் தேங்குவதால் தெரு முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது. மேலும் கழிவுநீரில் கொசுக்கள் உற்பத்தியாகி சுகாதார சீர்கேடு ஏற்பட்டு நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே பொதுமக்களின் நலன் கருதி சம்மந்தப்பட்ட அதிகாரிகள் வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் தெருவில் தேங்காதபடி, வடிகால் அமைத்துத் தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அந்தப் பகுதி மக்களின் எதிர்பார்ப்பாகும்.
-பொதுமக்கள், கண்டிதம்பட்டு.

நிறைந்து வழியும் குப்பை தொட்டிகள்

தஞ்சை மாவட்டம் பாபநாசம் அருகே ராஜகிரி கிராமம் உள்ளது. இந்த கிராமத்திலுள்ள வடக்குத் தெரு பகுதியில் குப்பைகள் தேங்கி கிடக்கின்றன. மேலும் அந்தப்பகுதியில் வைக்கப்பட்டுள்ள குப்பை தொட்டிகளிலும் குப்பைகள் நிறைந்து வழிகின்றன. இதனால் அந்த பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது. சுகாதார சீர்கேடு ஏற்பட்டு நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது. அதுமட்டுமின்றி மழைக்காலங்களில் குப்பைகளுடன் கழிவுநீர், மழைநீர் தேங்கி சகதியாக மாறிவிடுகின்றன. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பொதுமக்களின் நலன் கருதி ராஜகிரி வடக்கு தெரு பகுதிகளில் குவிந்து கிடக்கும் குப்பைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அந்த பகுதி மக்களின் கோரிக்கையாகும்.
-முகமது இக்பால், ராஜகிரி.

மழைநீர் வடிகால் வசதி வேண்டும்

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அடுத்த திருச்சிற்றம்பலம் மெயின் சாலை பகுதியில் மழைநீர் வடிகால் வசதி இல்லை. இதனால், மழைக்காலங்களில் மழைநீர் வெளியேற வழியின்றி சாலையில் குளம் போல் தேங்கி நிற்கிறது. மழைநீர் தேங்குவதால் அதில் கொசுக்கள் உற்பத்தியாகி சுகாதார சீர்கேடு ஏற்பட்டு நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது. மேலும், மெயின் சாலையில் வடிகால் வசதி இல்லாததால், அந்த பகுதியில் உள்ள மருத்துவமனைக்கு வருபவர்கள், பள்ளிக்கு செல்லும் மாணவ-மாணவிகள் மிகுந்த சிரமத்துடன் சாலையில் பயணித்து வருகின்றனர். அதுமட்டுமின்றி சாலையில் தேங்கி கிடக்கும் மழைநீரால் அடிக்கடி விபத்துகளும் ஏற்பட்டு வருகின்றன.எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் திருச்சிற்றம்பலம் பகுதியில் உள்ள மெயின் சாலையில் மழைநீர் வடிகால் அமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அந்த பகுதி மக்களின் கோரிக்கையாகும்.
-தேவேந்திரன், திருச்சிற்றம்பலம்.

சாலை சீரமைக்கப்படுமா?

தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு வட்டம் நெம்மேலி திப்பியக்குடி பகுதியில் திப்பியக்குடி ஆதிதிராவிடர் தெரு உள்ளது. இந்த பகுதியில் உள்ள சாலை பராமரிப்பின்றி குண்டும், குழியுமாக காட்சி அளிக்கிறது. இதனால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். குறிப்பாக மழைக்காலங்களில் சாலையில் மழைநீர் குளம்போல் தேங்கி விடுகிறது. இதன் காரணமாக சாலையில் பள்ளம் இருப்பது தெரியாமல் வாகனங்களில் செல்பவர்கள் அடிக்கடி விபத்துக்களில் சிக்கிக் கொள்கின்றனர். மேலும் சாலையில் உள்ள ஜல்லிக்கற்கள் பெயர்ந்து உள்ளதால் சைக்கிளில் பள்ளிக்கு செல்லும் மாணவ-மாணவிகளும் சிரமத்துக்கு உள்ளாகின்றனர். எனவே பொதுமக்களின் நலன் கருதி திப்பியக்குடி ஆதிதிராவிடர் தெருவில் உள்ள சாலையை சீரமைக்க பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாகும்.
-தினேஷ்குமார், திப்பியகுடி.

Next Story