தூய்மை பணியாளர்களுக்கு சிறப்பு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும்


தூய்மை பணியாளர்களுக்கு சிறப்பு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும்
x
தினத்தந்தி 12 Oct 2021 8:19 PM GMT (Updated: 12 Oct 2021 8:19 PM GMT)

தூய்மை பணியாளர்களுக்கு சிறப்பு காலமுறை ஊதியம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் ஒன்றிய கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

வத்திராயிருப்பு,
தூய்மை பணியாளர்களுக்கு சிறப்பு காலமுறை ஊதியம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் ஒன்றிய கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 
செயற்குழு கூட்டம் 
வத்திராயிருப்பு தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் ஒன்றிய செயற்குழு கூட்டம் ரெங்கப்பநாயக்கன்பட்டியில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் கணேச பாண்டியன் தலைமை தாங்கினார். மாநில துணைத் தலைவர் ராமசுப்பு முன்னிலை வகித்தார். 
தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்க மாநில நிர்வாகி சின்ன மாரிமுத்து வாழ்த்துரை வழங்கினார். தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்க மாவட்ட செயலாளர் கண்ணன் சிறப்புரை ஆற்றினார். கூட்டத்தில் ஊராட்சி செயலர்களுக்கு அரசு கருவூலம் மூலம் ஊதியம் வழங்க வேண்டும். 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை பணியிட மாறுதல் வழங்க வேண்டும். 
காலமுறை ஊதியம் 
ஊராட்சி செயலாளர்களுக்கு மாத ஓய்வூதியம் வழங்க வேண்டும். தூய்மை பணியாளர்கள், மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி இயக்குனர்களுக்கு சிறப்பு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். கொரோனா காலத்தில் பணிபுரிந்த ஊரக வளர்ச்சித்துறை முன்கள பணியாளர்களுக்கு ஊக்கத்தொகை விரைந்து வழங்க வேண்டும்  என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. வருகிற 18-ந் தேதி முதல் அனைத்து பணியாளர் சங்கத்தால் அறிவிக்கப்பட்டுள்ள அரசு கவன ஈர்ப்பு 5 கட்ட போராட்டத்திற்கு முழு ஆதரவு அளிப்பது என்று கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. 
முன்னதாக ஒன்றிய செயலாளர் ராஜ்குமார் வரவேற்றார். ஒன்றிய பொருளாளர் பாண்டியன் நன்றியுரை வழங்கினார். 
கூட்டத்தில் ராஜபாளையம் ஒன்றிய தலைவர் ஈஸ்வரன், வெம்பக்கோட்டை ஒன்றிய செயலாளர் சரவணக்குமார், ஊராட்சி செயலாளர்கள், துப்புரவு பணியாளர்கள், தூய்மை காவலர்கள், மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி இயக்குனர்கள் உள்ளிட்ட ஊரக வளர்ச்சி துறை பணியாளர்கள், அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Next Story