தினத்தந்தி புகார் பெட்டி
‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 8939278888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
தினத்தந்தி செய்தி எதிரொலி
சேலம்- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வேகத்தடைகள் நீக்கப்பட்டன. இதனால் ஏராளமான விபத்துகள் நடந்தன. குறிப்பாக இலக்கியம்பட்டி பகுதியில் தினமும் ஏதாவது ஒரு விபத்து நடந்தது. எனவே அந்த பகுதியில் வேகத்தடைகள் அமைக்க வேண்டும் என்று கடந்த 6-ந் தேதி ‘தினத்தந்தி’ புகார் பெட்டி பகுதியில் செய்தி வெளியானது. இதை தொடர்ந்து அந்த பகுதியில் உடனடியாக வேகத்தடைகள் அமைக்கப்பட்டன. இதுதொடர்பாக நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும், வேகத்தடை அமைக்க செய்தி வெளியிட்டு உதவிய ‘தினத்தந்தி’க்கும் அந்த பகுதி மக்கள் பாராட்டும், நன்றியும் தெரிவித்தனர்.
-அர்ஜூன், இலக்கியம்பட்டி, தர்மபுரி.
வீணாகும் குடிநீர்
சேலம் மாவட்டம் பூலாம்பட்டி பகுதியில் இருந்து கூட்டு குடிநீர் திட்டம் மூலம் குழாய் வழியாக ஆட்டையாம்பட்டி, வெண்ணந்தூர், அத்தனூர், ராசிபுரம் உள்ளிட்ட பகுதிகளுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் நாச்சிபட்டி பஸ் நிறுத்தம் அருகில் ஆட்டையாம்பட்டியில் இருந்து ராசிபுரம் செல்லும் சாலையில் குழாய் உடைந்து சாலையில் தண்ணீர் வீணாக செல்கிறது. இதனால் வெண்ணந்தூர், அத்தனூர் ராசிபுரம் உள்ளிட்ட பகுதிகளுக்கும் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளுக்கும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே இந்த குழாய் உடைப்பை உடனே சரிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ஊர்மக்கள், நாமக்கல்.
சேலம் மாவட்டம் கொப்பம்பட்டி கிராம பகுதியில் குழாய் உடைந்து பல வருடங்களாக குடிநீர் வீணாகிறது. அப்படி வீணாகும் தண்ணீர் தெருவிலே தேங்கி கிடக்கிறது. இதனால் சாலை சேதமடைந்து குண்டும், குழியுமாக காட்சி அளிக்கிறது. இதுபற்றி அதிகாரிகளிடம் பலமுறை முறையிட்டும் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே சம்பந்தப்பட்ட உயர் அதிகாரிகள் இதுதொடர்பாக நடவடிக்கை எடுத்து வீணாகும் குடிநீரை தடுத்து நிறுத்த வேண்டும்.
-குமார், கொப்பம்பட்டி, சேலம்.
திறந்த வெளியில் கழிப்பிட கழிவுகள்
சேலம் மாவட்டம் அன்னதானப்பட்டி 49-வது வார்டில் புட்டா மெஷின் ரோட்டில் உள்ள பொதுகழிப்பிடம் அருகில் கழிவுநீர் தொட்டி அமைக்கப்படவில்லை. கழிப்பிடத்தில் உள்ள கழிவுகள் அந்த பகுதியில் திறந்தவெளியில் செல்கிறது. இதனால் நோய் தொற்று அபாயம் ஏற்பட்டுள்ளது. கொசுக்கள் உற்பத்தியாகி துர்நாற்றம் வீசுகிறது. இதுகுறித்து அதிகாரிகளிடம் பலமுறை புகார் செய்தும் பலனில்லை. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக கவனத்தில் கொண்டு இதனை சரிசெய்யவேண்டும்.
-விஜய் தியாகராஜன், அன்னதானப்பட்டி, சேலம்.
கழிவுநீர் வடிகால் வசதி
சேலம் மாநகராட்சி தாதகாபட்டி சீரங்கன் புதுதெருவில் மழை காலத்தில் மழைநீர், கழிவுநீருடன் கலந்து அங்குள்ள தெருவில் தண்ணீர் கடல்போல் காட்சி அளிக்கிறது. அந்த நீர் வீட்டுக்குள்ளும் புகுந்து விடுகிறது. இதனால் துர்நாற்றம் வீசுகிறது. இதுதவிர குப்பைகளையும் சாலையோரம் கொட்டுகின்றனர். இதனால் சுகாதார கேடு ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே தெருவின் இருபுறமும் கழிவுநீர் வடிகால் அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ஊர்பொதுமக்கள், தாதகாபட்டி, சேலம்.
குண்டும், குழியுமான சாலை
கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் ஒன்றியம் ரங்கசமுத்திரம் கிராமத்திற்கு கப்பல்வாடியில் இருந்து செல்லும் சாலை பல ஆண்டுகளாக குண்டும், குழியுமாக மிகவும் மோசமாக உள்ளது. மழைக்காலங்களில் சாலை முழுவதும் சேறும் சகதியுமாகவே காட்சி அளிக்கிறது. அவ்வழியே செல்லும் பள்ளி மாணவர்கள், பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே இதற்கு அதிகாரிகள் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ஊர்மக்கள், கிருஷ்ணகிரி.
சாக்கடை கால்வாய் வழியாக குடிநீர் குழாய்
சேலம் மாவட்டம் அயோத்தியாப்பட்டணம் வடக்கு ஒன்றியம் தாசநாயக்கன்பட்டி பகுதியில் பல ஆண்டுகளாக சாக்கடை கால்வாய் வழியாக குடிநீர் குழாய் செல்கிறது. இதனால் அந்த பகுதி மக்களுக்கு நோய் வர வாய்ப்பு உள்ளது. எனவே இதனை மாற்றி அமைத்து தர கோரி பல முறை தெரிவித்தும் எந்த வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைவில் இதற்கு தீர்வு காண வேண்டும்.
-சக்திவேலு, அயோத்தியாப்பட்டணம், சேலம்.
நடுரோட்டில் நிறுத்தப்படும் வாகனங்கள்
தர்மபுரி நாச்சியப்பகவுண்டர் தெருவில் ஆஸ்பத்திரிகள், ஜவுளி கடைகள், தங்கும் விடுதிகள், அலுவலகங்கள் உள்ளிட்ட ஏராளமான கடைகள் உள்ளன. இந்த கடைகளுக்கு வரும் வாடிக்கையாளர்கள் தங்களது இரு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களை நடு ரோட்டிலேயே நிறுத்தி விட்டு சென்று விடுகின்றனர். இதுமட்டுமல்லாமல் அந்த சாலை அகலமாக இருப்பதால் வேறு பகுதிக்கு செல்பவர்களும் தங்களது வாகனங்களை அங்கேயே நிறுத்திவிட்டு சென்றுவிடுகின்றனர். இதனால் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. பண்டிகை காலம் என்பதால் ஏராளமான பொதுமக்கள் வந்து செல்கின்ற இந்த பகுதியில் வாகனங்களை சாலைஓரத்தில் நிறுத்த போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-முல்லைவேந்தன், தர்மபுரி.
Related Tags :
Next Story