சேலம் மாவட்டத்தில் வாக்கு எண்ணிக்கை: ஊரக உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் விவரம்
சேலம் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி பதவிகளுக்கு நடந்த வாக்கு எண்ணிக்கையில் வெற்றி பெற்றவர்கள் விவரம் வெளியிடப்பட்டுள்ளது.
சேலம்:
சேலம் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி பதவிகளுக்கு நடந்த வாக்கு எண்ணிக்கையில் வெற்றி பெற்றவர்கள் விவரம் வெளியிடப்பட்டுள்ளது.
ஊரக உள்ளாட்சி தேர்தல்
சேலம் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி பதவிகளில் காலியாக இருந்த மாவட்ட ஊராட்சி 10-வது வார்டு, பனமரத்துப்பட்டி ஒன்றியத்தில் 9-வது வார்டு உறுப்பினர், 10 கிராம ஊராட்சி மன்ற தலைவர்கள், 23 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் என மொத்தம் 35 பதவிகளுக்கு தேர்தல் நடத்தப்பட்டது. இதில், 11 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். மீதமுள்ள 24 பதவிகளுக்கு மட்டும் கடந்த 9-ந் தேதி தேர்தல் நடந்தது.
195 வாக்குச்சாவடிகளில் ஓட்டுப்பதிவு முடிந்தவுடன் அந்தந்த பகுதிகளில் அமைக்கப்பட்டு இருந்த வாக்கு எண்ணும் மையங்களுக்கு வாக்குச்சீட்டு பெட்டிகள் போலீஸ் பாதுகாப்புடன் கொண்டு செல்லப்பட்டன.
வாக்கு எண்ணும் பணி
மாவட்ட ஊராட்சி 10-வது வார்டு உறுப்பினர், ஓமலூர் ஒன்றியத்தில் சிக்கனம்பட்டி, புளியம்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் பதவிகள், புளியம்பட்டி கிராம ஊராட்சி 3-வது வார்டு உறுப்பினர், கோட்டமேட்டுப்பட்டி கிராம ஊராட்சி 5-வது வார்டு உறுப்பினருக்கான தேர்தலில் பதிவான வாக்குகள் ஆகியவை கருப்பூரில் உள்ள அரசு பொறியியல் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையத்தில் வைத்து எண்ணப்பட்டன. இதேபோல், மற்ற பகுதிகளில் அந்தந்த ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் வாக்குகள் எண்ணும் பணி நடந்தன.
காலை 8 மணிக்கு வாக்குச்சீட்டுகள் இருந்த பெட்டிகள் அனைத்தும் பிரித்து வாக்கு எண்ணும் பணி தொடங்கியது. மதியம் 1 மணி அளவில் கிராம ஊராட்சி தலைவர்கள் மற்றும் ஊராட்சி வார்டு உறுப்பினர்களின் வெற்றி பெற்றவர்கள் விவரம் அறிவிக்கப்பட்டது. மேலும், வெற்றி பெற்றவர்களுக்கு உடனடியாக வெற்றி சான்றிதழ்களை அந்தந்த தேர்தல் நடத்தும் அலுவலர்கள் வழங்கினர்.
ஊராட்சி தலைவர்கள்
ஓமலூர் ஒன்றியம் சிக்கனம்பட்டி ஊராட்சி தலைவர் தேர்தலில் தி.மு.க. ஆதரவு வேட்பாளரான கோ.ரங்கநாதன் 1,263 வாக்குகளும், புளியம்பட்டி ஊராட்சி தலைவர் தேர்தலில் கோவிந்தசாமி 1,285 வாக்குகளும் பெற்று வெற்றி பெற்றுள்ளனர். இவர்களுக்கு தேர்தல் அதிகாரி குணசேகர் வெற்றி சான்றிதழை வழங்கினார்.
வீரபாண்டி ஒன்றியம் புத்தூர் அக்ரஹாரம் ஊராட்சி தலைவர் தேர்தலில் பெ.சிவானந்தம் 4,892 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அவருக்கு தேர்தல் அதிகாரி அன்புராஜன் வெற்றி சான்றிதழை வழங்கினார். வெற்றி பெற்ற சிவானந்தம், வீரபாண்டி ஒன்றிய தி.மு.க. செயலாளர் வெண்ணிலா சேகரை சந்தித்து வெற்றி சான்றிதழை காண்பித்து ஆசி பெற்றார்.
தலைவாசல்
சேலம் ஒன்றியம் சேலத்தாம்பட்டி ஊராட்சி தலைவர் தேர்தலில் ரா.கண்மணி 2,600 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அவருக்கு தேர்தல் அதிகாரி ஸ்ரீகுமார் வெற்றி சான்றிதழ் வழங்கினார். அப்போது, சேலம் வடக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் ரெயின்போ நடராஜன், முன்னாள் பஞ்சாயத்து தலைவர் ராஜேந்திரன், ஒன்றிய அவைத்தலைவர் கோவிந்தராஜ் உள்பட பலர் உடன் இருந்தனர்.
தலைவாசல் ஒன்றியம் கோவிந்தம்பாளையம் ஊராட்சி தலைவர் தேர்தலில் ஆ.விஜயா 1,401 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அவருக்கு தேர்தல் அதிகரி தாமரைச்செல்வி வெற்றி சான்றிதழை வழங்கினார். அப்போது, ஒன்றிய தி.மு.க. செயலாளர் சாத்தப்பாடி மணி, தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் சின்னதுரை, குணசேகரன், மாவட்ட விவசாய அணி அமைப்பாளர் சேகர், தி.மு.க. முன்னாள் ஒன்றிய செயலாளர் லட்சுமணன், வரகூர் ஜெயபாலன் மற்றும் தி.மு.க. நிர்வாகிகள் பட்டாசு வெடித்து கொண்டாடினர்.
எடப்பாடி பழனிசாமி
அயோத்தியாப்பட்டணம் ஒன்றியம் அதிகாரிப்பட்டி ஊராட்சி தலைவர் தேர்தலில் க.சத்யா 2,707 வாக்குகளும்,, வீராணம் ஊராட்சி தேர்தலில் ஏ.செல்வராணி 2,542 வாக்குகளும் பெற்று வெற்றி பெற்றுள்ளனர். இவர்களுக்கு தேர்தல் அதிகாரி இளங்கோ வெற்றி சான்றிதழை வழங்கினார்.
மேலும் மேச்சேரி ஒன்றியம் வெள்ளார் ஊராட்சி தலைவர் தேர்தலில் சுகந்தி பழனிசாமி 3,645 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அவருக்கு தேர்தல் அதிகாரி ரேவதி வெற்றி சான்றிதழை வழங்கினார். அப்போது மேச்சேரி ஒன்றிய தி.மு.க. பொறுப்பாளர் சீனிவாசபெருமாள் உடன் இருந்தார். எடப்பாடி ஒன்றியம் தாதாபுரம் ஊராட்சி தலைவர் தேர்தலில் வி.வளர்மதி 2,004 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அவருக்கு தேர்தல் அதிகாரி ரவிச்சந்திரன் வெற்றி சான்றிதழை வழங்கினார்.
நங்கவள்ளி ஒன்றியம் கரிக்காப்பட்டி ஊராட்சி தலைவர் தேர்தலில் சி.விஜயா 1,064 வாக்குகளும் பெற்று வெற்றி பெற்றார். அவர், தமிழக சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து பூங்கொத்து கொடுத்து வாழ்த்து பெற்றார்.
வார்டு உறுப்பினர்கள்
இதேபோல், ஓமலூர் ஒன்றியம் கோட்ட மேட்டுப்பட்டி ஊராட்சி 5-வது வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியிட்ட டெய்சி 258 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். புளியம்பட்டி ஊராட்சி 3-வது வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியிட்ட மகேஸ்வரி 140 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். பனமரத்துப்பட்டி ஒன்றியம் கெஜ்ஜல்நாயக்கன்பட்டி ஊராட்சி 1-வது வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியிட்ட பிரதீப் 284 வாக்குகளும் பெற்று வெற்றி பெற்றார். தாசநாயக்கன்பட்டி ஊராட்சி 5-வது வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியிட்ட ராமச்சந்திரன் 248 வாக்குகளும், நெய்காரப்பட்டி ஊராட்சி 1-வது வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியிட்ட வெங்கடேசன் 491 வாக்குகளும் பெற்று வெற்றி பெற்றனர்.
அயோத்தியாப்பட்டணம் ஒன்றியம் சின்னனூர் ஊராட்சி 1-வது வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியிட்ட மாலா 143 வாக்குகளும், பூவனூர் ஊராட்சி 4-வது வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியிட்ட சிவராஜ் 146 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றனர். ஏற்காடு ஒன்றியம் மாரமங்கலம் ஊராட்சி 2-வது வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியிட்ட ஆர்.ராணி 227 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். வாழப்பாடி ஒன்றியம் நீர்முள்ளிக்குட்டை ஊராட்சி 3-வது வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியிட்ட மதன்மோகன் 187 வாக்குகளும், எடப்பாடி ஒன்றியம் சித்தூர் ஊராட்சி 7-வது வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியிட்ட சாந்தி 387 வாக்குகளும் பெற்று வெற்றி பெற்றனர். கொளத்தூர் ஒன்றியம் நவப்பட்டி ஊராட்சி 9-வது வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியிட்ட செல்வி 222 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். தலைவாசல் ஒன்றியம் காட்டுக்கோட்டை ஊராட்சி 12-வது வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியிட்ட ஷபிபுன்னிசா 265 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.
Related Tags :
Next Story