செவ்வந்தி பூ விற்பனை


செவ்வந்தி பூ விற்பனை
x
தினத்தந்தி 13 Oct 2021 11:25 AM GMT (Updated: 13 Oct 2021 11:25 AM GMT)

ஆயுதபூஜை பண்டிகை இன்று கொண்டாடப்படுவதையொட்டி திருப்பூர் சந்தையில் 30 டன் செவ்வந்தி பூ விற்பனையானது. இதுபோல் பழங்கள் வாழைக்கன்றுகள் விற்பனையும் ஜோராக நடைபெற்றது

திருப்பூர்
ஆயுதபூஜை பண்டிகை இன்று கொண்டாடப்படுவதையொட்டி திருப்பூர் சந்தையில் 30 டன் செவ்வந்தி பூ விற்பனையானது. இதுபோல் பழங்கள் வாழைக்கன்றுகள் விற்பனையும் ஜோராக நடைபெற்றது. 
இன்று ஆயுதபூஜை 
பண்டிகை என்றாலே அதற்கான தேவையான பொருட்களை வாங்க பொதுமக்கள் கடைவீதிகளில் அலைமோதுவார்கள். இதனால் சந்தை உள்ளிட்ட பகுதிகளில் மற்ற நாட்களை விட பண்டிகை நாட்களில் பொதுமக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும். இதிலும் திருப்பூரில் லட்சக்கணக்கானவர்கள் இருப்பதால், பண்டிகை நாட்களில் திருப்பூர் எப்போதும் பரபரப்பாக காணப்படும். 
போக்குவரத்து நெரிசலும் அதிகமாக இருக்கும். இந்நிலையில் இன்று வியாழக்கிழமை ஆயுதபூஜை மற்றும் நாளை வெள்ளிக்கிழமை விஜயதசமி பண்டிகைகள் என்பதால் கடந்த 2 நாட்களாக கடை வீதிகளில் பொருட்கள் வாங்க பொதுமக்கள் கூட்டம் அதிகமாக குவிந்து வருகிறது. நேற்றும் காலை முதல் மாலை வரை திருப்பூர் தென்னம்பாளையம் சந்தை மற்றும் பல்லடம் ரோட்டில் உள்ள காட்டன் மார்க்கெட் உள்ளிட்ட பகுதிகளில் பழங்கள் மற்றும் பூக்கள், பொறி, காய்கறிகள் உள்ளிட்டவைகளை பொதுமக்கள் வாங்கினர். 
30 டன் செவ்வந்தி பூ விற்பனை 
ஏராளமானவர்கள் ஒரே நேரத்தில் குவிந்ததால் சந்தையில் விற்பனையும் நன்றாக நடைபெற்றது. பூக்கள் மற்றும் பழங்களின் விலையும் உயர்ந்திருந்தது. அதன்படி நேற்று ஒரு கிலோ மல்லிகை ரூ.1000ல் இருந்து  ரூ.1600 வரையும், முல்லை ரூ.400 முதல் ரூ.600க்கும், ஜாதிமல்லி ரூ.400 முதல் ரூ.600க்கும், அரளி ரூ.250 முதல் ரூ.350க்கும், செவ்வந்தி ரூ.200 முதல் ரூ.350க்கும், சம்பங்கி ரூ.150 முதல் ரூ.250க்கும், பட்டுப்பூ ரூ.80க்கும் என பூக்கள் விற்பனை செய்யப்பட்டது. 
ஆயுதபூஜைக்கு செவ்வந்தி பூ தேவை அதிகமாக இருப்பதால் ராயக்கோட்டையில் இருந்து 30 டன் செவ்வந்தி பூக்கள் விற்பனைக்காக கொண்டுவரப்பட்டது. இந்த பூக்கள் அனைத்து விற்பனையாகின. இதுபோல் வாழைக்கன்று ரூ.20 முதல் ரூ.50 வரையிலும், கரும்பு ரூ.120 முதல் ரூ.150 வரையிலும், பொறி  ரூ.20, வெண்பூசணி ரூ.50-க்கும் விற்பனை செய்யப்பட்டது. 
போக்குவரத்து நெரிசல் 
இதுபோல் ஒரு கிலோ ஆப்பிள் ரூ.160 முதல் ரூ.180க்கும், ஆரஞ்சு ரூ.120 முதல் ரூ.180க்கும், மாதுளை ரூ.200 முதல் ரூ.220க்கும், திராட்சை கருப்பு ரூ.120க்கும், பச்சை ரூ.150 முதல் ரூ.200க்கும், அன்னாசி ரூ.60க்கும், சாத்துக்குடி ரூ.80 முதல் ரூ.100க்கும், கொய்யா ரூ.80க்கும், வாழைப்பழம் ரூ.60 முதல் ரூ.100க்கும், எலுமிச்சை ரூ.120 முதல் ரூ.150க்கும் விற்பனை, மாவிழை ஒரு பிடி ரூ.10க்கும் என அனைத்து பொருட்களின் விற்பனையும் ஜோராக நடைபெற்றது.  
மேலும், எந்திரங்கள் மற்றும் நிறுவனங்களை அலங்கரிக்கும் அலங்கார பொருட்கள், திருஷ்டி பொருட்கள் விற்பனையும் மும்முரமாக நடந்தது. பலரும் தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்கி சென்றனர். இதன் காரணமாக மாநகர் பகுதிகளில் வாகன போக்குவரத்தும் அதிகமாக இருந்தது. பல இடங்களில் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது. புதுமார்க்கெட் வீதி, குமரன் ரோடு உள்ளிட்ட முக்கிய சாலைகள் மற்றும் பொதுமக்கள் அதிகமாக கூடும் இடங்களில் போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டிருந்தது. 
-------
படங்கள் உண்டு..
-----


Next Story