ஊட்டியில் 2 இடங்களில் சாகச சுற்றுலா தலங்கள்
ஊட்டியில் 2 இடங்களில் சாகச சுற்றுலா தலங்கள் அமைக்கப்படும் என்று இயக்குனர் சந்தீப் நந்தூரி தெரிவித்தார்.
ஊட்டி
ஊட்டியில் 2 இடங்களில் சாகச சுற்றுலா தலங்கள் அமைக்கப்படும் என்று இயக்குனர் சந்தீப் நந்தூரி தெரிவித்தார்.
கலந்துரையாடல் நிகழ்ச்சி
தமிழ்நாடு சுற்றுலாத்துறை சார்பில் சுற்றுலாவை மேம்படுத்துவது குறித்து தென்னிந்திய மற்றும் நீலகிரி ஓட்டல்கள், உணவகங்கள் சங்க நிர்வாகிகளுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சி, ஊட்டி தனியார் ஓட்டலில் நேற்று நடைபெற்றது. நீலகிரி கலெக்டர் இன்னசென்ட் திவ்யா முன்னிலை வகித்து பேசினார்.
பின்னர் சுற்றுலாத்துறை இயக்குனர் சந்தீப் நந்தூரி தலைமை தாங்கி பேசும்போது, உள்நாட்டு சுற்றுலா பயணிகளை கவர்வதில் முதலிடத்திலும், வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை கவர்வதில் 2-ம் இடத்திலும் தமிழகம் உள்ளது. தண்ணீரில் மிதக்கும் ஓட்டல், புதிய சுற்றுலா என அடுத்த 10 ஆண்டுகளில் சுற்றுலாவை மேம்படுத்த தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்படும். அனைத்து வயதினரையும் கவரும் வகையில் சுற்றுலா மேம்படுத்தப்படும் என்றார்.
சாகச சுற்றுலா தலம்
நிகழ்ச்சிக்கு பிறகு சுற்றுலாத்துறை இயக்குனர் சந்தீப் நந்தூரி நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது கூறியதாவது:-
தமிழகத்தில் சுற்றுலாவை மேம்படுத்த 2 குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளது. நீலகிரியில் காமராஜ் சாகர் அணை, ஊட்டி படகு இல்லம் ஆகிய 2 இடங்களில் சாகச சுற்றுலா தலங்கள் அமைக்கப்படும். இதற்கான திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டு வருகிறது. தேயிலை தோட்ட மற்றும் காபி தோட்ட, கால்ப் சுற்றுலா உருவாக்க நடவடிக்கை எடுக்கப்படும். பைக்காரா படகு இல்லம் செல்லும் சாலை, தொட்டபெட்டா சாலை பிற துறை அதிகாரிகளுடன் ஆலோசனை செய்து மேம்படுத்தப்படும்.
வனத்துறையில் புதிய சுற்றுலா தலங்களை ஏற்படுத்த சுற்றுலாத்துறை, வனத்துறை செயலாளர்களுடன் ஆலோசனை செய்து அனுமதி கிடைத்த பிறகு முடிவு எடுக்கப்படும். ஊட்டியில் ஹெலிகாப்டர் சுற்றுலா, கேபிள் கார் தொடங்க சாத்தியக்கூறுகள் உள்ளதா என்று ஆராயப்படும்
இவ்வாறு அவர் கூறினார்.
படகு இல்லங்களில் ஆய்வு
நிகழ்ச்சியில் சுற்றுலா வளர்ச்சி கழக மண்டல மேலாளர் வெங்கடேஷ், மாவட்ட சுற்றுலா அலுவலர் உமாசங்கர், மாவட்ட வருவாய் அலுவலர் கீர்த்தி பிரியதர்ஷினி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
சங்க நிர்வாகிகள் கலாச்சார சுற்றுலா, தோடர், கோத்தர், இருளர், பனியர், காட்டுநாயக்கர், குறும்பர் ஆகிய 6 பழங்குடியின மக்களின் வாழ்வியல் முறைகள் குறித்த சுற்றுலா, இயற்கை வேளாண்மை சுற்றுலா மற்றும் ஏற்கனவே உள்ள சுற்றுலா தலங்களை புதிதாக கண்டு ரசிக்கும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை முன்வைத்தனர். முன்னதாக சுற்றுலா துறை இயக்குனர் சந்தீப் நந்தூரி ஊட்டி படகு இல்லம், பைக்காரா படகு இல்லத்துக்கு நேரில் சென்று அடிப்படை வசதிகள் உள்ளதா என்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
Related Tags :
Next Story