ஓட்டப்பிடாரம் அருகே பெண்ணை வெட்டிக் கொன்றது ஏன்? என கைதானவர் பரபரப்பு வாக்குமூலம்
ஓட்டப்பிடாரம் அருகே பெண்ணை வெட்டிக் கொன்றது ஏன்? என கைதானவர் பரபரப்பு வாக்குமூலம் கொடுத்துள்ளார்
ஓட்டப்பிடாரம்:
ஓட்டப்பிடாரம் அருகே பெண்ணை வெட்டிக் கொலை செய்தது ஏன்? என கைதானவர் போலீசாரிடம் பரபரப்பு வாக்குமூலம் கொடுத்துள்ளார்.
பொதுச்சுவர் பிரச்சினை
ஓட்டப்பிடாரம் அருகே உள்ள தெற்குஆவாரங்காடு கிராமத்தைச் சேர்ந்த பச்சைக்கனி (வயது 45). இவரது மனைவி முத்துலெட்சுமி (40). இவர்களுக்கும் பக்கத்து வீட்டை சேர்ந்த ராமர் (50) என்பவருக்கும் இடையே சில மாதங்களாக பொதுச் சுவர் பிரச்சினை இருந்து வந்துள்ளது.
இந்நிலையில் நேற்று முந்தினம் மாலை வழக்கு போல் முத்துலட்சுமி தனது வீட்டு வாசல் முன்பு சுத்தம் செய்து கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த ராமருக்கும், முத்துலட்சுமிக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
வெட்டிக்கொலை
இதில் ஆத்திரமடைந்த ராமர் தனது கையில் மறைத்து வைத்து இருந்த கத்தியால் சரமாரியாக முத்துலட்சுமியை வெட்டிவிட்டு தப்பி ஓடிவிட்டார். இதில் முத்துலட்சுமி படுகாயமடைந்து சம்பவ இடத்திலே துடி துடித்து இறந்து போனார். இச்சம்பவம் குறித்து அக்கம் பக்கத்தினர் ஓட்டப்பிடாரம் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். இச்சம்பவம் குறித்து ஒட்டப்பிடாரம் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இச்சம்பவம் தொடர்பாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் சம்பவ இடத்தை பார்வையிட்டு இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்தினார். மேலும் குற்றவாளியை பிடிக்க மணியாச்சி போலீஸ் துணை சூப்பிரண்டு சங்கர் மேற்பார்வையில் ஓட்டப்பிடாரம் இன்ஸ்பெக்டர் முத்துராமன் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர்கள் முத்துராஜா, பொன்முனியசாமி மற்றும் போலீசாார் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் இறங்கினார்.
பரபரப்பு வாக்குமூலம்
இதில் ஓட்டப்பிடாரம் அருகே உள்ள வெள்ளாரம் கிராமத்தில் பதுங்கி இருந்த ராமரை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.
அப்போது அவர் போலீசாரிடம் கொடுத்த வாக்குமூலம் வருமாறு:- எங்களுக்கும் பக்கத்து வீட்டை சேர்ந்த பச்சைக்கனி குடும்பத்தினருக்கும் பொதுப்பாதை பிரச்சினை இருந்து வந்தது. சம்பவத்தன்று வீட்டு முன்பு சுத்தம் செய்து கொண்டிருந்தபோது எனக்கும் முத்துலட்சுமிக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் அவர் என்னை விளக்குமாறால் அடிக்க முற்பட்டார். இதனால் ஆத்திரம் அடைந்த நான் நான் வைத்திருந்த கத்தியால் முத்துலட்சுமியை வெட்டினேன். அவளது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். இதனை அறிந்த நான் அங்கிருந்து தப்பி ஓடி விட்டேன். போலீசார் என்னை கைது செய்து விட்டனர். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். அவரை விரைவாக கைது செய்த தனிப்படை போலீசாரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் பாராட்டினார்.
Related Tags :
Next Story