ஆண்டியப்பனூர் அணை நிரம்பி வழிந்தது


ஆண்டியப்பனூர் அணை நிரம்பி வழிந்தது
x
தினத்தந்தி 13 Oct 2021 12:12 PM GMT (Updated: 13 Oct 2021 12:12 PM GMT)

வாணியம்பாடி அருகே உள்ள ஆண்டியப்பனூர் அணை நிரம்பி வழிகிறது. இதனால் பாசனத்துக்கு தண்ணீர் திறக்க வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வாணியம்பாடி

வாணியம்பாடி அருகே உள்ள ஆண்டியப்பனூர் அணை நிரம்பி வழிகிறது. இதனால் பாசனத்துக்கு தண்ணீர் திறக்க வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஆண்டியப்பனூர் அணை

திருப்பத்தூர் மாவட்டத்தில் கடந்த 25 நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் மாவட்டத்தில் உள்ள ஏரிகள் நிரம்பி உள்ளன. வாணியம்பாடி தொகுதியில் உள்ள ஆண்டியப்பனூர் அணை 8 மீட்டர் உயரம் கொண்டது. தொடர் மழை காரணமாக அணையின் மொத்த கொள்ளளவான 112.2 மில்லியன் கன அடியை எட்டி உள்ளது.

இந்த அணை மூலம் 14 ஏரிகளுக்கு தண்ணீர் நிரப்பப்பட்டு, இதன் மூலம் 2,055 ஏக்கர் விவசாய நிலம் பாசன வசதி பெறும். கால்வாய் மூலம் நேரடியாக 2,970 ஏக்கர் புஞ்சை நிலமும், 2055 ஏக்கர் நஞ்சை நிலமும் என மொத்தம் 5 ஆயிரத்து 25 ஏக்கர் விவசாய நிலம் பாசனம் பெறும். 

நிரம்பி வழிந்தது

விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று கடந்த ஜூன் மாதம் 19-ந் தேதி அணையில் இருந்து 40 மில்லியன் கனஅடி நீர் திறக்கப்பட்டது. இந்த நிலையில் தற்போது அணை நிரம்பி மொத்த கொள்ளளவை எட்டி உபரி நீர் வெளியேறி வருகிறது. இந்த நீர் சின்னசமுத்திரம், வெள்ளேரி, மாடப்பள்ளி ஏரி வழியாக அங்கிருந்து இரு கிளைகளாக பிரிந்து ஒரு கிளை செலந்தம்பள்ளி, கோனேரிகுப்பம், கம்பளிகுளம், முத்தம்பட்டி, ராட்சமங்கலம், பசலிகுட்டை ஏரி வழியாக சென்று பாம்பாற்றை அடைகிறது. மற்றொரு கிளை கணமந்தூர், புதுக்கோட்டை ஏரி வழியாக திருப்பத்தூர் பெரியேரி நிரம்பி அங்கிருந்து பாம்பாற்றை அடையும். 

திருப்பத்தூர் மாவட்டத்தில் மொத்தம் 49 ஏரிகள் உள்ளது. தொடர் மழை காரணமாக தற்போது உதயேந்திரம், பள்ளிப்பட்டு, சிம்மனபுதூர், பொம்மிக்குப்பம், மாடப்பள்ளி, பெருமாபட்டு, விண்ணமங்கலம், பசலிகுட்டைி, துளசிபாய் உள்ளிட்ட 10 ஏரிகள் நிரம்பி உபரி நீர் வெளியேறி வருகிறது.

தண்ணீர் திறக்க கோரிக்கை

அதே போல மூன்று ஏரிகளில் 90 சதவீதமும், 2 ஏரிகளில் 75 சதவீதமும், 6 ஏரிகளில் 50 சதவீதமும் தண்ணீர் உள்ளதாக பொதுப்பணித் துறையினர் தெரிவித்தனர். மற்ற ஏரிகளில் 25 சதவீதம் தண்ணீர் உள்ளது. 

ஆண்டியப்பனூர் அணை நிரம்பி உள்ளதால் பாசன வசதிக்காக மீண்டும் தண்ணீரை திறந்துவிட வேண்டும் என திருப்பத்தூர் மாவட்ட விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். அணை நிரம்பி வழிவதை தொடர்ந்து ஏராளமான பொது மக்களும், சுற்றுலாப் பயணிகளும் அங்கு சென்று குளித்து மகிழ்ந்து வருகின்றனர். இதனால் உடனடியாக அங்கு தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

Next Story