பள்ளி வாகனங்கள் ஆய்வு
பள்ளி வாகனங்களை ஆர்.டி.ஓ. மற்றும் துணை போலீஸ் சூப்பிரண்டு ஆகியோர் ஆய்வு செய்தனர்
உடுமலை
உடுமலையில் பள்ளி வாகனங்களை ஆர்.டி.ஓ. மற்றும் துணை போலீஸ் சூப்பிரண்டு ஆகியோர் ஆய்வு செய்தனர்.
பள்ளிகள் திறப்பு
கொரோனா வைரஸ் தொற்று பரவுவது குறைந்து வருவதைத்தொடர்ந்து படிப்படியாக கல்வி நிறுவனங்கள் செயல்படத்தொடங்கியுள்ளன. அதன்படி வருகிற 1ம்தேதி முதல், 1ம் வகுப்பு முதல் 8ம் வகுப்புவரை பள்ளிகள் திறக்கப்பட உள்ளது. இதற்கான ஆயத்த பணிகளை செய்யும்படி கல்வித்துறை, பள்ளிகளுக்கு அறிவுரை வழங்கியுள்ளது. இதன் தொடர்ச்சியாக பள்ளி வாகனங்களை தயார் நிலையில் வைத்திருக்கவும், அந்த வாகனங்களை இயக்குவதற்கான தகுதி சான்றிதழை புதுப்பித்து பெறுவதற்காக வாகனங்களை அதிகாரிகளின் ஆய்வுக்கு உட்படுத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன்படி உடுமலையில் பள்ளி வாகனங்களை ஆய்வு செய்யும் பணிகள் தொடங்கியது.
உடுமலை மற்றும் மடத்துக்குளம் தாலுகாவில் பள்ளி வாகனங்கள் மொத்தம் 257 உள்ளன. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பள்ளிகள் செயல்படாமல் இருந்ததால் இந்த வாகனங்களில், பெரும்பாலான வாகனங்கள் தகுதிச்சான்றை புதுப்பிக்காமல் வாகனங்கள் பள்ளி நிர்வாகத்தால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
முதல்கட்டமாக நேற்று 107 வாகனங்கள் உடுமலை நேதாஜி விளையாட்டு மைதானத்திற்கு கொண்டு வரப்பட்டன. இந்த வாகனங்களை உடுமலை ஆர்.டி.ஓ.கீதா, துணை போலீஸ் சூப்பிரண்டு ஆர்.தேன்மொழிவேல் ஆகியோர் ஆய்வு செய்தனர். அந்த வாகனங்களில் தளம், படிகள், இருக்கைகள் சரியாக உள்ளதா?, அவசரவழி, முதலுதவி சிகிச்சைபெட்டி, தீயணைப்பான், கேமரா ஆகியவை உள்ளதா?,
அந்த பள்ளி வாகனம் எந்த இடத்தில் உள்ளது என்பதை அறிந்து கொள்ளும் ஜி.பி.எஸ். கருவி பொருத்தப்பட்டுள்ளதா? என்று ஆய்வு செய்யப்பட்டது.
இந்த ஆய்வின்போது தாசில்தார் ராமலிங்கம், தாராபுரம் வட்டார போக்குவரத்துத்துறை அதிகாரி சி.செந்தில்குமார், உடுமலை மோட்டார் வாகன ஆய்வாளர் செல்வதீபா, போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கடேசன், சப்-இன்ஸ்பெக்டர் குருமூர்த்திமற்றும் கல்வித்துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.
குறைபாடுகள்
இந்த ஆய்வின்போது 17 வாகனங்களில் அதிக அளவிலான குறைபாடுகள் இருந்தது கண்டறியப்பட்டது. அந்த குறைபாடுகள் அனைத்தையும் முழுமையாக சரிசெய்து ஆய்வுக்கு உட்படுத்தி தகுதி சான்றை புதுப்பித்த பிறகே இயக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது. இது தவிர 33 வாகனங்களில் கேமரா இல்லாதது, கிழிந்த இருக்கைகள் உள்ளிட்ட சிறு சிறு குறைப்பாடுகள் இருந்தது. அந்த குறைபாடுகளை சரிசெய்ய அறிவுறுத்தப்பட்டது. 107வாகனங்கள் ஆய்வு செய்யப்பட்டதில் 90 வாகனங்களுக்கு தகுதிச்சான்று புதுப்பிக்கப்படாமல் இருந்தது தெரியவந்தது. அந்த வாகனங்கள் அரசு வழங்கியுள்ள கால அவகாசமான வருகிற 31-ம்தேதிக்குள் தகுதி சான்றை புதுப்பித்துக்கொள்ளும்படி அறிவுறுத்தப்பட்டது.
மேலும் இந்த ஆய்வின்போது, தீ விபத்து ஏற்பட்டால் தீயை அணைப்பது மற்றும் பரவாமல் தடுப்பது குறித்த நடவடிக்கைகளை மேற்கொள்வது குறித்து பள்ளி வாகன ஓட்டுனர்களுக்கு, உடுமலை தீயணைப்பு துறையினர், தீயணைப்பு அலுவலர் ஹரிராமகிருஷ்ணன் தலைமையில் செயல்விளக்கமளித்தனர்.
---
உடுமலையில் பள்ளி வாகனங்களை அதிகாரிகள் ஆய்வு செய்தபோது எடுத்தபடம்.
Related Tags :
Next Story