பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு சோதனை


பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு சோதனை
x
தினத்தந்தி 13 Oct 2021 1:31 PM GMT (Updated: 13 Oct 2021 1:31 PM GMT)

ஊட்டியில் பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதில் கணக்கில் வராத ரூ.80 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது.

ஊட்டி

ஊட்டியில் பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதில் கணக்கில் வராத ரூ.80 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது.

லஞ்ச ஒழிப்பு சோதனை

நீலகிரி மாவட்டத்தில் 11 பேரூராட்சிகள் உள்ளது. இந்த பேரூராட்சிகளின் செயல் அலுவலர்களுக்கான கூட்டம், ஊட்டி பிங்கர்போஸ்ட்டில் கலெக்டர் அலுவலக கூடுதல் வளாகத்தில் உள்ள பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் செயல் அலுவலர்கள், உதவி இயக்குனருக்கு பணம் கொடுக்க உள்ளதாக லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதன்பேரில் லஞ்ச ஒழிப்பு துணை போலீஸ் சூப்பிரண்டு சுபாஷினி தலைமையில் இன்ஸ்பெக்டர் கீதாலட்சுமி மற்றும் போலீசார் பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் அலுவலகத்தில் திடீரென சோதனை நடத்தினர்.

7 பேரிடம் விசாரணை 

அப்போது அலுவலகத்தில் இருந்த செயல் அலுவலர்கள் மற்றும் அரசு ஊழியர்கள், பணியாளர்கள் வெளியே செல்ல அனுமதிக்கப்படவில்லை. உதவி இயக்குனர், செயல் அலுவலர்களிடம் போலீசார் சோதனை நடத்தினர். அதில் 7 பேரிடம் இருந்து கணக்கில் வராத ரூ.80 ஆயிரத்து 190 பறிமுதல் செய்யப்பட்டது. இந்த பணத்துக்கான உரிய ஆவணங்கள் இல்லை.

இதுகுறித்து பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் கனகராஜ், 5 பேரூராட்சி செயல் அலுவலர்கள், ஒரு இளநிலை பொறியாளர் ஆகிய 7 பேரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். 3 மணி நேரத்திற்கும் மேலாக லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினர். இந்த இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story