நடுவழியில் பழுதாகி நின்ற அரசு பஸ்


நடுவழியில் பழுதாகி நின்ற அரசு பஸ்
x
தினத்தந்தி 13 Oct 2021 7:01 PM IST (Updated: 13 Oct 2021 7:01 PM IST)
t-max-icont-min-icon

ஊட்டி-சிறியூர் இடையே நடுவழியில் பழுதாகி நின்ற அரசு பஸ்சால் பயணிகள் அவதி அடைந்தனர்.

கூடலூர்

ஊட்டி-சிறியூர் இடையே நடுவழியில் பழுதாகி நின்ற அரசு பஸ்சால் பயணிகள் அவதி அடைந்தனர். 

அரசு பஸ்

மசினகுடி மற்றும் அதன் சுற்றுவட்டாரத்தில் பொக்காபுரம், வாழைத்தோட்டம், மாவனல்லா, மாயார், சிறியூர் உள்பட பல்வேறு கிராமங்கள் உள்ளது. இங்கு ஆயிரக்கணக்கான மக்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் அத்தியாவசிய மற்றும் அவசர தேவைகளுக்கு கூடலூர் அல்லது ஊட்டிக்கு தினமும் சென்று வருகின்றனர். இதற்காக ஊட்டியில் இருந்து தலைகுந்தா, கல்லட்டி வழியாக மசினகுடி, சிறியூருக்கு அரசு பஸ் இயக்கப்படுகிறது.

இதனால் தினமும் ஏராளமான பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவ-மாணவிகள் பயன் அடைந்து வருகின்றனர். ஆனால் பராமரிப்பு பணிகள் சரிவர மேற்கொள்ளாததால் அரசு பஸ் அடிக்கடி பழுதாகி நடுவழியில் நின்று விடுகிறது. இதனால் அனைத்து தரப்பினரும் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

பழுதாகி நின்றது

இந்த நிலையில் நேற்று மாலை 3 மணிக்கு ஊட்டியில் இருந்து பயணிகளுடன் புறப்பட்ட அரசு பஸ் மசினகுடிக்கு வந்து சேர்ந்தது. ஆனால் திடீரென டயர் பழுதாகி நின்றது. இதனால் சிறியூர் உள்ளிட்ட கிராமப்புற மக்கள் நடுவழியில் இறங்கி நின்றனர். பயனற்ற டயர்களை பொருத்தி பாதுகாப்பற்ற முறையில் அரசு பஸ்சை இயக்குவதால் அடிக்கடி பழுதடைந்து வருவதாக அவர்கள் புகார் தெரிவித்தனர். மேலும் ஊட்டி அரசு போக்குவரத்துக்கழக நிர்வாகத்திடம் பலமுறை புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றனர்.

இதுகுறித்து பொதுமக்கள் மேலும் கூறும்போது, ஊட்டியில் இருந்து கல்லட்டி சாலையில் பாதுகாப்பாக வாகனங்களை இயக்க வேண்டும் என்று எச்சரிக்கை விடப்பட்டு வருகிறது. ஆனால் அரசு பஸ் எந்தவித பாதுகாப்பும் இன்றி பயணிகளுடன் இயக்கப்படுகிறது. அடிக்கடி பழுதடைந்து நடுவழியில் நிற்பதால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் பஸ்சை நன்கு பராமரித்து இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.


Next Story