விஷம் குடித்து காதல் ஜோடி தற்கொலை


விஷம் குடித்து காதல் ஜோடி தற்கொலை
x
தினத்தந்தி 13 Oct 2021 9:01 PM IST (Updated: 13 Oct 2021 9:01 PM IST)
t-max-icont-min-icon

தேனி அருகே காதல் ஜோடி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டனர்.

உப்புக்கோட்டை:
தேனி அருகே காதல் ஜோடி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டனர். 
காதல் ஜோடி
தேனி அருகே உள்ள பழனிசெட்டிபட்டி, வெற்றி காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் கணேசன் (வயது 42). கூலித்தொழிலாளி. இவரது மகன் ரித்தீஷ்குமார், சின்னமனூர் அருகே வெள்ளையம்மாள்புரத்தில் உள்ள அரசுப்பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். 
அதே பள்ளியில், கணேசனின் உறவினரான வருசநாடு திருவஞ்சியோடையை சேர்ந்த சுரேஷ் (40) என்பவரது மகள் ரிவேதாவும் பிளஸ்-2 படித்தார். இதனால் ரித்தீஷ்குமாருக்கும், ரிவேதாவுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. அது நாளடைவில் காதலாக மலர்ந்தது. கடந்த 1½ ஆண்டுகளாக அவர்கள் 2 பேரும் காதலித்து வந்தனர். 
வேறு இடத்தில் மாப்பிள்ளை
இந்தநிலையில் அவர்களது காதல் விவகாரம், இருவரது பெற்றோருக்கும் தெரியவந்தது. அப்போது பள்ளி, கல்லூரி படிப்பை படித்து முடித்தவுடன் திருமணம் செய்து வைப்பதாக காதல் ஜோடியிடம் பெற்றோர் தெரிவித்தனர். 
இதற்கிடையே ரிவேதாவின் பெற்றோர் அவருக்கு வேறு இடத்தில் மாப்பிள்ளை பார்த்து வந்ததாக கூறப்படுகிறது. மேலும் அவரது வீட்டிற்கு உறவினர்கள் சிலர் பெண் பார்ப்பதற்காக வந்து சென்றனர். இதனால் தங்களை பிரித்துவிடுவார்கள் என எண்ணிய ரிவேதாவும், ரித்தீஷ்குமாரும் கடந்த 8-ந்தேதி வீட்டை விட்டு வெளியேறினர். 
விஷம் குடித்தனர்
தேனி அருகே கோட்டூருக்கு வந்த காதல் ஜோடி, அங்குள்ள பெட்ரோல் விற்பனை நிலையம் எதிரே காட்டுப்பகுதியில் வைத்து விஷத்தை குடித்தனர். இதில் அவர்கள் 2 பேரும் மயங்கிய நிலையில் உயிருக்கு போராடினர். அப்போது அந்த வழியாக வந்த சிலர், 2 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் தேனி மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் நேற்று முன்தினம் இரவு ரித்தீஷ்குமாரும், நேற்று காலை ரிவேதாவும் சிகிச்சை பலனின்றி அடுத்தடுத்து பரிதாபமாக இறந்தனர். 
இதுகுறித்து வீரபாண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பெற்றோர் பிரித்துவிடுவார்கள் என நினைத்து காதல் ஜோடி விஷம் குடித்து தற்கொலை செய்த சம்பவம் தேனி பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Next Story