பெரியகுளம் அருகே அதிகாரிகள் துணையுடன் அபகரிக்கப்பட்ட மேலும் 56 ஏக்கர் அரசு நிலம் மீட்பு
பெரியகுளம் அருகே வருவாய்த்துறை அதிகாரிகள் துணையுடன் அபகரிக்கப்பட்ட மேலும் 56 ஏக்கர் அரசு நிலம் மீட்கப்பட்டது. அந்த நிலத்துக்கு வழங்கப்பட்ட பட்டாக்கள் மற்றும் பத்திரப்பதிவு ரத்து செய்யப்பட்டது.
தேனி:
பெரியகுளம் அருகே வருவாய்த்துறை அதிகாரிகள் துணையுடன் அபகரிக்கப்பட்ட மேலும் 56 ஏக்கர் அரசு நிலம் மீட்கப்பட்டது. அந்த நிலத்துக்கு வழங்கப்பட்ட பட்டாக்கள் மற்றும் பத்திரப்பதிவு ரத்து செய்யப்பட்டது.
அரசு நிலம் அபகரிப்பு
தேனி அருகே வடவீரநாயக்கன்பட்டி கிராமத்தில் வருவாய்த்துறை அதிகாரிகள் துணையுடன் அ.தி.மு.க. பிரமுகர் மற்றும் அவருடைய உறவினர்கள் உள்பட 27 பேர் அரசு நிலத்தை அபகரித்து பட்டா பெற்றனர். இதுகுறித்து புகார்கள் எழுந்ததால் மாவட்ட கலெக்டர் முரளிதரன் உத்தரவின்பேரில், பெரியகுளம் சப்-கலெக்டர் ரிஷப் விசாரணை நடத்தினார். இதில் பெரியகுளம் தாலுகாவில் பணியாற்றிய தாசில்தார்கள், துணை தாசில்தார்கள் துணையுடன் அரசு நிலத்தை அபகரித்து பட்டா பெற்றது தெரியவந்தது.
இதற்கு துணைபோன 2 தாசில்தார்கள், 2 துணை தாசில்தார்கள், 2 நில அளவையர்கள் ஆகிய 6 பேர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டனர். அபகரிக்கப்பட்ட 94.65 ஏக்கர் அரசு புறம்போக்கு நிலம் மீட்கப்பட்டு மீண்டும் அரசு நிலமாக மாற்றப்பட்டது. இந்நிலையில், பெரியகுளம் அருகே தாமரைக்குளம் பகுதியில் இதே அதிகாரிகள் துணையுடன் 56 ஏக்கர் அரசு புறம்போக்கு நிலத்தை 42 பேர் அபகரித்ததாகவும், அதற்கு பட்டா வாங்கியதாகவும் தெரியவந்தது. இதையடுத்து அந்த 56 ஏக்கர் அரசு நிலங்களும் மீட்கப்பட்டு மீண்டும் அரசு நிலமாக மாற்றப்பட்டது.
இதுகுறித்து மாவட்ட கலெக்டர் முரளிதரனிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-
பட்டாக்கள் ரத்து
இந்த அரசு நிலங்கள் அபகரிப்பு குறித்து தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. வடவீரநாயக்கன்பட்டியில் மீட்கப்பட்ட நிலத்தில் கனிமவளங்களை எடுத்து விற்பனை செய்துள்ளனர். எனவே, அங்கு அள்ளப்பட்ட கனிமவளங்கள் குறித்து கனிமவளத்துறை இணை இயக்குனர் முருகானந்தம் தலைமையில் 4 பேர் கொண்ட குழுவினர் சென்னையில் இருந்து வந்து ஆய்வு செய்தனர். எவ்வளவு மதிப்பிலான கனிமங்கள் எடுக்கப்பட்டுள்ளன என்பது குறித்த அறிக்கையை அவர்கள் விரைவில் தாக்கல் செய்வார்கள். அதன்பேரில் அபராதம் விதிப்பு உள்ளிட்ட மேல் நடவடிக்கை எடுக்கப்படும். தற்போது மீட்கப்பட்ட 56 ஏக்கர் நிலத்தில் 42 பேருக்கு பட்டா கொடுக்கப்பட்டுள்ளது. அதில் சிலர் நிலத்தை வேறு நபர்களுக்கு பத்திரப்பதிவு செய்து கொடுத்துள்ளனர். எனவே, அந்த பட்டாக்கள் ரத்து செய்யப்பட்டன. பத்திரப்பதிவையும் ரத்து செய்ய சார்பதிவாளருக்கு அறிவுறுத்தப்பட்டது.
இதேபோன்று மாவட்டம் முழுவதும் அரசு நிலங்கள் வேறு எங்காவது அபகரிக்கப்பட்டுள்ளதா? என ஆய்வு செய்யும் பணிகளும் நடந்து வருகின்றன. அபகரிப்பு கண்டறியப்பட்டால் அந்த நிலங்களும் மீட்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story