கூடலூரில் அரசு நெல் கொள்முதல் நிலையம் திறப்பு
கூடலூரில் அரசு நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டது.
கூடலூர்:
கூடலூர் பகுதியில் சுமார் 7 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் கோடை, சம்பா என இருபோக நெல் விவசாயம் செய்து வருகின்றனர். தற்போது முதல்போக சம்பா நெல் அறுவடை செய்யும் பணி நடைபெற்று வருகிறது. இதையொட்டி கூடலூரில் அரசு நெல் கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும் என்று ஆண்டிப்பட்டி எம்.எல்.ஏ. மகாராஜனிடம், விவசாயிகள் கோரிக்கை மனு கொடுத்தனர். இதைத்தொடர்ந்து அவரும், தேனி தெற்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் கம்பம் ராமகிருஷ்ணன் எம்.எல்.ஏ., மாவட்ட வேளாண் துறை அதிகாரிகளுடன் கலந்து பேசி, கூடலூரில் அரசு நெல் கொள்முதல் நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர். இதையடுத்து கூடலூர் அரசமரம் பஸ் நிறுத்தம் அருகே எருக்கங்காடுகளம் பகுதியில் அரசு நெல்கொள்முதல் நிலையம் அமைக்கப்பட்டது. இதற்கான திறப்பு விழா நேற்று நடைபெற்றது.
இந்த விழாவிற்கு எம்.எல்.ஏ.க்கள் கம்பம் ராமகிருஷ்ணன், மகாராஜன் ஆகியோர் தலைமை தாங்கி, நெல் கொள்முதல் நிலையத்தை திறந்து வைத்தனர். இதில், கூடலூர் நகராட்சி ஆணையாளர் சேகர், தி.மு.க நகர செயலாளர் லோகன் துரை, முல்லைப்பெரியாறு அணை நீரினை பயன்படுத்துவோர் சங்கம், அனைத்து விவசாயிகள் சங்கத்தினர் மற்றும் மாவட்ட வேளாண்மை துறை அதிகாரிகள் கலந்துகொண்டனர். இதையடுத்து அங்கு நெல் கொள்முதல் செய்யும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் விவசாயிகளும், தாங்கள் அறுவடை செய்த நெல்லை கொள்முதல் நிலையத்துக்கு கொண்டு சென்று விற்பனை செய்கின்றனர். இதில், ஏ ரகம் நெல் 100 கிலோ ரூ.2 ஆயிரத்து 60-க்கும், பொது ரகம் நெல் ரூ.2 ஆயிரத்து 15-க்கும் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது.
Related Tags :
Next Story