செஞ்சி அருகே துணிகரம் வீடு புகுந்து ரூ.15 லட்சம் நகை, பணம் கொள்ளை மர்ம மனிதர்களுக்கு போலீஸ் வலைவீச்சு


செஞ்சி அருகே துணிகரம் வீடு புகுந்து ரூ.15 லட்சம் நகை, பணம் கொள்ளை மர்ம மனிதர்களுக்கு போலீஸ் வலைவீச்சு
x
தினத்தந்தி 13 Oct 2021 11:05 PM IST (Updated: 13 Oct 2021 11:05 PM IST)
t-max-icont-min-icon

செஞ்சி அருகே வீடு புகுந்து ரூ.15 லட்சம் நகை, பணத்தை கொள்ளையடித்த மர்ம மனிதர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

செஞ்சி, 

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அடுத்த பொன்பத்தி கிராமத்தை சேர்ந்தவர் செல்லன் (வயது 65). இவரது மனைவி பொன்னம்மாள். இவர்களுக்கு பெங்களூருவில் சொந்தமாக உள்ள வீட்டுக்கு, செல்லன் தனது மனைவியுடன் சென்று இருந்தார். இந்த நிலையில், நேற்று பொன்பத்தியில் உள்ள இவர்களது வீட்டின் பின்பக்க கதவு திறந்து கிடந்தது.

 இதை பார்த்த அக்கம்பக்கத்தினர், செல்வனுக்கு போன் செய்து தகவல் தெரிவித்தனர்.  அதன்பேரில்  அவர்கள் நேரில் வந்து பார்த்தனர். அப்போது, வீட்டின் பின்பக்க கதவு பூட்டு உடைக்கப்பட்ட நிலையில், அங்கடிருந்த அறையில் பொருட்கள் அனைத்தும் சிதறி கிடந்தன. 

41 பவுன் நகை கொள்ளை

மேலும் பீரோவை கதவை உடைத்து அதில் இருந்த 41 பவுன் நகை, 1 லட்சம் ரூபாய் ஆகியன கொள்ளை போயிருந்தது. வீட்டில் யாரும் இல்லாததை நோட்டமிட்ட மர்ம மனிதர்கள் வீடு புகுந்து நகை, பணத்தை கொள்ளையடித்து சென்று இருப்பது தெரியவந்தது. 

இதுகுறித்து அவர், செஞ்சி போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம மனிதர்களை வலைவீசி தேடி வருகின்றனர். கொள்ளைபோன பொருட்களின் மதிப்பு ரூ.15 லட்சம் இருக்கும் என்று கூறப்படுகிறது.

இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story