தொழிலாளியை கொலை செய்த 2 பேருக்கு ஆயுள் தண்டனை; திருவண்ணாமலை கோர்ட்டு தீர்ப்பு


தொழிலாளியை கொலை செய்த 2 பேருக்கு ஆயுள் தண்டனை; திருவண்ணாமலை கோர்ட்டு தீர்ப்பு
x
தினத்தந்தி 13 Oct 2021 5:48 PM GMT (Updated: 13 Oct 2021 5:48 PM GMT)

திருவண்ணாமலை அருகே நிலத்தகராறில் தொழிலாளியை கொலை செய்த 2 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி கோவிந்தராஜன் தீர்ப்பு வழங்கினார்.

திருவண்ணாமலை

திருவண்ணாமலை அருகே நிலத்தகராறில் தொழிலாளியை கொலை செய்த 2 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி கோவிந்தராஜன் தீர்ப்பு வழங்கினார்.

 நிலத்தகராறு

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் தாலுகா தாமரைபாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் ஆலடியான். இவருடைய மூத்த மகன் ஏழுமலை (வயது 56). தந்தை-மகன் இருவரும் பெங்களூருவில் தங்கி கூலி வேலை செய்து வந்துள்ளனர். 

ஆலடியானுக்கு தாமரைப்பாக்கத்தில் உள்ள சொந்தமான நிலத்தை அதே பகுதியை சேர்ந்த ராமமூர்த்தி மற்றும் சிலர் ஆக்கிரமிப்பு செய்துள்ளனர்.

இதனை அறிந்த ஆலடியான், ஏழுமலை ஆகியோர் நிலத்தை வருவாய்த்துறை மூலம் அளந்து மீட்க பெங்களூருவில் இருந்து சொந்த ஊருக்கு வந்தனர். 

பின்னர் அதற்கான பணிகளில் இருவரும் ஈடுபட்டுள்ளனர். இதுதொடர்பாக ஏழுமலை மற்றும் ராமமூர்த்தி தரப்பினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

 தொழிலாளி கொலை

இந்த நிலையில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 16-ந் தேதி இரவு வீட்டை விட்டு வெளியே சென்ற ஏழுமலை திரும்பி வரவில்லை. அதனால் அதிர்ச்சி அடைந்த ஆலடியான் மற்றும் குடும்பத்தினர் அவரை பல்வேறு இடங்களில் தேடிப் பார்த்தனர். 

இதற்கிடையே மறுநாள் காலை ஏழுமலை ரத்த காயங்களுடன் மாதிமங்கலம் செல்லும் பைபாஸ் சாலையோரம் இறந்து கிடந்தார். 

அவரின் உடல் திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. அதில், அவர் கழுத்து நெரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.

இதுகுறித்து கடலாடி போலீசார் வழக்குப்பதிந்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், ராமூர்த்தியின் மகன் கோடீஸ்வரன் (35) மற்றும் அவருடைய உறவினர் கிருஷ்ணமூர்த்தி (65) ஆகியோர் ஏழுமலையை கொலை செய்தது தெரியவந்தது. 
இதையடுத்து அவர்களை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

 ஆயுள் தண்டனை

இதுதொடர்பாக வழக்கின் விசாரணை திருவண்ணாமலை மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் சிறப்பு அமர்வு கோர்ட்டில் நடைபெற்று வந்தது. 

இந்த நிலையில் வழக்கின் இறுதி விசாரணை நடந்தது. இருதரப்பு வாதங்கைளயும் கேட்டறிந்த பின்னர் நீதிபதி ஆர்.கோவிந்தராஜன் தீர்ப்பு கூறினார்.

அதில், நிலத்தகராறில் ஏழுமலையை கழுத்தை நெரித்து கொலை செய்த கோடீஸ்வரன், கிருஷ்ணமூர்த்தி ஆகியோருக்கு ஆயுள் தண்டனையும், ரூ.25 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டார். 

அதைத்தொடர்ந்து இருவரும் பலத்த போலீஸ் காவலுடன் வேனில் வேலூர் மத்திய ஆண்கள் ஜெயிலுக்கு அழைத்து செல்லப்பட்டனர்.

Next Story