வேலூர் கோட்டையை இரவிலும் பார்க்கும் வகையில் மின்விளக்குகள் பொருத்தும் பணி தீவிரம்


வேலூர் கோட்டையை இரவிலும் பார்க்கும் வகையில் மின்விளக்குகள் பொருத்தும் பணி தீவிரம்
x
தினத்தந்தி 13 Oct 2021 5:50 PM GMT (Updated: 13 Oct 2021 5:50 PM GMT)

வேலூர் கோட்டையை இரவிலும் பார்க்கும் வகையில் மின்விளக்குகள் பொருத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

வேலூர்

வேலூர் கோட்டையை இரவிலும் பார்க்கும் வகையில் மின்விளக்குகள் பொருத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

வேலூர் கோட்டை

வேலூர் கோட்டை மாவட்டத்தின் முக்கிய சுற்றுலா மையமாகவும், வரலாற்று சின்னமாகவும் திகழ்கிறது. இதனை சுற்றிப்பார்க்க ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இக்கோட்டை மாநகரின் மையப்பகுதியில் அழகிய அகழியுடன் காட்சி அளிக்கிறது.

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் வேலூர் கோட்டையை புனரமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. கோட்டையினுள் சாலைகள், பூங்காக்கள் மற்றும் பழமையை பிரதிபலிக்கும் வகையில் தெருவிளக்குகள் போன்றவை அமைக்கப்பட்டு வருகிறது.
கோட்டைக்கு வருபவர்கள் மாலை வேளையில் வெளியே உள்ள பூங்காவில் அமர்ந்து பொழுது போக்குவார்கள். பூங்காவில் இருந்து பார்க்கும்போது கோட்டையின் கம்பீர தோற்றத்தை காணலாம். ஆனால் சூரியன் மறைந்த பின்னர் அதை ரசிக்க முடியாது. மின் விளக்குகள் இல்லாததால் கோட்டை முழுவதும் இருள் சூழ்ந்திருக்கும்.

இந்தநிலையில் இரவு நேரத்திலும் கோட்டையை பார்க்கும் வகையில் மின்விளக்குள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

இரவில் ஒளிவிளக்குகள்

இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் கோட்டையை மேம்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது. இரவில் கோட்டையை பொதுமக்கள் பார்க்க முடியாத நிலை இருந்தது. இதை மாற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதன்படி மின் விளக்குகளால் கோட்டையில் வெளிச்சம் பாய்ச்ச ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கோட்டையின் எதிர்புறம் அகழியை ஒட்டியவாறு விளக்குகள் அமைக்கப்பட்டு வருகிறது. கோட்டையை சுற்றி இந்த விளக்குகள் அமைக்கப்பட உள்ளது. இந்த விளக்குகளின் ஒளி மூலம் கோட்டையை பார்க்கலாம். மேலும் வரலாறு தொடர்பான விவரங்கள் படகாட்சியாக ஒளிபரப்பவும் நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

தேசியகொடி நிறங்களில் மின் விளக்கு

இந்தியா முழுவதும் பல கோடி மக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதை வெளிப்படுத்தும் வகையில் நாடு முழுவதும் உள்ள 100 புராதன மையங்களில் தேசிய கொடியில் உள்ள 3 நிறங்களில் மின் விளக்குகள் ஒளிரச் செய்ய வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. 

இந்த புராதன சின்னங்களில் வேலூர் கோட்டையும் ஒன்றாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, 3 நிறங்களில் மின் விளக்குகள் இன்று (வியாழக்கிழமை) மாலை 6 மணி முதல் 15-ந் தேதி நள்ளிரவு 1 மணி வரை அதாவது 7 மணி நேரம் கோட்டை மதில்சுவரில் ஒளிர விடப்படும் என்றும் இதற்கான ஆயத்தப்பணிகள் நடைபெற்று வருகிறது என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story