வெல்லம் தயாரிக்கும் ஆலையில் தீ விபத்து; ரூ.1½ லட்சம் கரும்பு சக்கை போர் எரிந்து நாசம்


வெல்லம் தயாரிக்கும் ஆலையில் தீ விபத்து; ரூ.1½ லட்சம் கரும்பு சக்கை போர் எரிந்து நாசம்
x
தினத்தந்தி 13 Oct 2021 6:52 PM GMT (Updated: 13 Oct 2021 6:52 PM GMT)

வெல்லம் தயாரிக்கும் ஆலையில் ஏற்பட்ட தீ விபத்தில் ரூ.1½ லட்சம் மதிப்பிலான கரும்பு சக்கை போர் எரிந்து நாசமானது.

நொய்யல், 
வெல்லம் தயாரிக்கும் ஆலை
கரூர் மாவட்டம் நடையனூர் அருகே சொட்டியூர் பகுதியை சேர்ந்தவர் மகேஸ்வரன் (வயது 50). இவர் பேச்சிப்பாறை அருகே அலகாபுரி என்ற பகுதியில் வெல்லம் தயாரிக்கும் ஆலை நடத்தி வருகிறார். வெல்லம் தயாரிப்பதற்காக கரும்பு சக்கை போர் அதிகளவில் குவிக்கப்பட்டு இருந்தன. காலை முதல் மாலை வரை அங்கு வெல்லம் மற்றும் அச்சுவெல்லம் ஆகியவை தயாரிக்கப்பட்டு வந்தது. 
ேநற்று முன்தினம் இரவு சுமார் 12 மணியளவில் கரும்புச்சக்கை போரில் திடீரென தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த தொழிலாளர்கள் தீயை அணைக்க முயற்சி செய்தனர். ஆனால் முடியவில்லை. 
கரும்புச்சக்கை போர் எரிந்து நாசம்
இதுகுறித்து தகவல் அறிந்த வேலாயுதம்பாளையம் தீயணைப்பு நிலைய அலுவலர் திருமுருகன் தலைமையில் வேலாயுதம்பாளையம், கரூர், புகளூர் காகித ஆலை தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கரும்புச்சக்கை போரில் எரிந்து கொண்டிருந்த தீயில் தண்ணீரை பீய்ச்சி அடித்தனர். தீயணைப்பு வீரர்கள் சுமார் 2 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். மேலும், அருகில் உள்ள பகுதிகளுக்கு தீ பரவாமல் தடுத்தனர்.
இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இருப்பினும் ரூ.1½ லட்சம் மதிப்பிலான கரும்புச்சக்கை போர் தீயில் எரிந்து நாசமாயின.
கீற்றுக்கொட்டகை
அதேபோல் புன்னம் சத்திரம் அருகே பொன்னியாக்கவுண்டன்புதூர் பகுதியை சேர்ந்தவர் குமார் (45). இவர் தனக்கு சொந்தமான இடத்தில் கீற்றுக்கொட்டகை போட்டு வைத்திருந்தார். அந்த கீற்றுக்கொட்டகையின் அருகில் இருந்த சருகுகளுக்கு தீ வைத்துள்ளார். அப்போது காற்றின் காரணமாக அருகாமையிலிருந்த கீற்றுக்கொட்டகையில் பிடித்து தீ எரிய ஆரம்பித்தது. அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து தீயை அணைக்க முயற்சித்தனர். இருப்பினும் தீயை அணைக்க முடியவில்லை. 
இதுகுறித்து தகவல் அறிந்த வேலாயுதம்பாளையம் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கீற்றுக்கொட்டகையில் எரிந்து கொண்டிருந்த தீயை தண்ணீரை பீய்ச்சி அடித்து அணைத்தனர். இருப்பினும் ரூ 50 ஆயிரம் மதிப்பிலான கீற்றுக்கொட்டகை தீயில் எரிந்து நாசமானது.

Next Story