டிராக்டர் மோதி சாய்ந்த மின்கம்பங்கள்


டிராக்டர் மோதி சாய்ந்த மின்கம்பங்கள்
x
தினத்தந்தி 14 Oct 2021 12:42 AM IST (Updated: 14 Oct 2021 12:42 AM IST)
t-max-icont-min-icon

வேடசந்தூர் அருகே டிராக்டர் மோதியதில் மின்கம்பங்கள் சாய்ந்தன.

வேடசந்தூர்: 

வேடசந்தூர் அருகே உள்ள அழகாபுரியில் இருந்து மரங்களை ஏற்றிக்கொண்டு ஒரு டிராக்டர் மாரம்பாடி நோக்கி நேற்று சென்று கொண்டிருந்தது. டிராக்டரை பெருமாள்கோவில்பட்டியை சேர்ந்த பால்ராஜ் (வயது 30) என்பவர் ஓட்டினார். வேடசந்தூர்-மாரம்பாடி சாலையில் பேரூராட்சி குப்பைகிடங்கு அருகே வந்தபோது டிராக்டரில் வைக்கப்பட்டிருந்த மரங்கள் அந்த வழியாக சென்ற மின்வயரில் சிக்கியது. இதன் காரணமாக அங்கு நட்டு வைக்கப்பட்டிருந்த 5 மின்கம்பங்கள் அடுத்தடுத்து சாய்ந்து கீழே விழுந்தன. 


இதைப்பார்த்த டிரைவர் உடனடியாக டிராக்டரை நிறுத்தினார். இதற்கிடையே அந்த வழியாக வாகனங்களில் வந்தவர்கள் சாலையில் மின்கம்பிகள் விழுந்து கிடப்பதை பார்த்த அதிர்ச்சியில் பாதி வழியில் திரும்பிச்சென்றனர். மேலும் அந்த வழியாக நடந்து சென்றவர்களும் அலறியடித்தபடி அங்கிருந்து ஓடினர். பின்னர் உடனடியாக மின்வாரியத்துக்கு அவர்கள் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து அப்பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. 

இதனால் உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை. பின்னர் சாய்ந்து விழுந்த மின்கம்பங்களை சீரமைக்கும் பணியில் மின்வாரிய ஊழியர்கள் ஈடுபட்டனர். விபத்து குறித்து வேடசந்தூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story