கூட்டுறவு சங்க செயலாளர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை


கூட்டுறவு சங்க செயலாளர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை
x
தினத்தந்தி 14 Oct 2021 12:52 AM IST (Updated: 14 Oct 2021 12:52 AM IST)
t-max-icont-min-icon

அரசுக்கு ரூ.6½ கோடி இழப்பு ஏற்படுத்திய வழக்கில் திருச்சி கூட்டுறவு சங்க செயலாளர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினார்கள்.

திருச்சி, அக்.14-
அரசுக்கு ரூ.6½ கோடி இழப்பு ஏற்படுத்திய வழக்கில் திருச்சி கூட்டுறவு சங்க செயலாளர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினார்கள்.
குறைந்த விலைக்குவிற்பனை
திருச்சி தில்லைநகரில் திருச்சிராப்பள்ளி கூட்டுறவு வீடுகட்டுமான சங்க கிளை உள்ளது. கடந்த 2016-2017-ம் ஆண்டு இந்த சங்கத்தின் தலைவராக அ.தி.மு.க.வை சேர்ந்த குமாரும், செயலாளராக கார்மேகம் என்பவரும் இருந்தனர்.
அப்போது, தில்லை நகர் பகுதியில் உள்ள அரசு நிலத்தை ஒரு சதுர அடி ரூ.150 என்று இவர்கள் விற்பனை செய்துள்ளனர். ஆனால், அப்போது அந்த நிலத்தின் அரசு வழிகாட்டி மதிப்பீடு ஒரு சதுர அடி ரூ.3 ஆயிரம் ஆகும். சந்தை மதிப்பு என்று கணக்கிட்டால் ரூ.6 ஆயிரத்துக்கு மேல் இருக்கும்.
அரசுக்கு ரூ.6½ கோடி இழப்பு
இதுபோல் சங்க உறுப்பினர்கள் மொத்தம் 7 பேருக்கு இவர்கள் அரசு இடத்தை குறைந்த விலைக்கு விற்றுள்ளனர். இதனால் அரசுக்குரூ.6 கோடியே 55 லட்சத்து97 ஆயிரம் இழப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இதுகுறித்த புகாரின் பேரில், அப்போதைய சங்க தலைவர் குமார், செயலாளர் கார்மேகம் ஆகியோர் மீது திருச்சி மாவட்ட லஞ்ச ஒழிப்பு துணை போலீஸ் சூப்பிரண்டு மணிகண்டன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தார்.
செயலாளர் வீட்டில் சோதனை
இந்தநிலையில் பொன்னகரில் உள்ள கார்மேகத்தின் வீட்டில் நேற்று லஞ்ச ஒழிப்புத்துறை துணை போலீஸ் சூப்பிரண்டு மணிகண்டன் தலைமையிலான போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது, அவருடைய வீட்டில் ரூ.2 லட்சத்து 71 ஆயிரம் ரொக்கம், 50 பவுன் நகைகள், ரூ.18 லட்சம் மதிப்பிலான ஒரு புதிய சொகுசு கார் ஆகியவை இருந்தன.அவற்றை தொடர் விசாரணைக்காக வழக்கு ஆவணங்களாக லஞ்ச ஒழிப்பு போலீசார் பதிவு செய்தனர். மேலும், செயலாளர் கார்மேகம் மீது துறை ரீதியிலான விசாரணைக்கு  அவர்கள் பரிந்துரை செய்துள்ளனர். தற்போது பொன்னகரில் உள்ள கூட்டுறவு சங்கத்தில் கார்மேகம் செயலாளராக பணியாற்றி வருவது குறிப்பிடத்தக்கது.

Next Story