மாவட்ட செய்திகள்

கொள்ளிடம் புதிய தடுப்பணை கட்டுமானப்பணி 92 சதவீதம் நிறைவு + "||" + Construction

கொள்ளிடம் புதிய தடுப்பணை கட்டுமானப்பணி 92 சதவீதம் நிறைவு

கொள்ளிடம் புதிய தடுப்பணை கட்டுமானப்பணி 92 சதவீதம் நிறைவு
திருச்சி முக்கொம்பு மேலணையில் உள்ள கொள்ளிடம் ஆற்றின் புதிய தடுப்பணை கட்டுமான பணிகள் 92 சதவீதம் முடிந்து விட்டது. வருகிற ஜனவரி மாதம் பயன்பாட்டுக்கு வருகிறது.
திருச்சி, அக்.14-
திருச்சி முக்கொம்பு மேலணையில் உள்ள கொள்ளிடம் ஆற்றின் புதிய தடுப்பணை கட்டுமான பணிகள் 92 சதவீதம் முடிந்து விட்டது. வருகிற ஜனவரி மாதம்  பயன்பாட்டுக்கு வருகிறது.
கொள்ளிடம் தடுப்பணை உடைந்தது

சேலம் மாவட்டம் மேட்டூர் அணையில் திறந்து விடப்படும் தண்ணீர் நாமக்கல், கரூர் மாவட்டம் வழியாக பாய்ந்து இறுதியாக திருச்சி முக்கொம்பு மேலணையை அடைகிறது. முக்கொம்பு மேலணையில் இருந்துதான் காவிரி, கொள்ளிடம் என 2 ஆறுகள் பிரிகிறது. இவற்றில் காவிரி ஆறு கல்லணை நோக்கி பாய்ந்து டெல்டா மாவட்ட விவசாய பாசனத்திற்கு உதவுகிறது.
காவிரி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கின் காரணமாக கடந்த 2018-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 22-ந் தேதி இரவு முக்கொம்பு மேலணையில் உள்ள கொள்ளிடம் தடுப்பணையில் 9 ஷட்டர்கள் உடைந்து ஆற்றுக்குள் விழுந்தன. இதையடுத்து, முதல் கட்டமாக பெரிய பாறைகள் மற்றும் லட்சக்கணக்கான மணல் மூட்டைகளை அடுக்கி தற்காலிக தடுப்பணை கட்டப்பட்டது.
ரூ.387.60 கோடியில் தடுப்பணை
அதன்பின், முக்கொம்பில் உடைந்த கொள்ளிடம் தடுப்பணைக்குப் பதிலாக ரூ.387 கோடியே 60 லட்சம் செலவில் புதிய தடுப்பணை கட்டப்பட்டு வருகிறது. உடனடியாக பணிகள் தொடங்கப்பட்டு வேகமாக நடந்து வந்தது. இப்பணிகள் கடந்த மார்ச் மாதம் நிறைவடையும் என்று அரசுத் தரப்பில் கூறப்பட்டது. ஆனால், கொரோனா தொற்று கடந்த ஓராண்டுக்கு மேலாக நீடித்து வருவதால் கட்டுமான பணியிலும் தொய்வு ஏற்பட்டது.
ஜனவரியில் பயன்பாடு
தற்போது பணிகள் முடுக்கி விடப்பட்டது. முக்கொம்பு கொள்ளிடத்தில் புதிய தடுப்பணை கட்டும் பணிகள் தற்போது 92 சதவீதம் நிறைவடைந்துள்ளதாகவும், இன்னும் 8 சதவீதப்பணிகள் பாலத்தின் மீது சாலைப்பணிகள் உள்ளிட்ட இதர பணிகள் மட்டும் இருப்பதாகவும், அந்த பணியும் வருகிற நவம்பர் மாதத்திற்குள் முடிக்கப்பட்டு, இறுதிக்கட்ட பணிகள் டிசம்பருக்குள் முடிந்து விடும் என்றும், வருகிற ஜனவரி (2022) மாதம் கொள்ளிடம் தடுப்பணை பயன்பாட்டுக்கு வரும் என்று பொதுப்பணித்துறை ஆற்றுப்பாசன அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
மேலும் ஜனவரி மாதம் நடக்கும், கொள்ளிடம் தடுப்பணை பயன்பாட்டுக்கு அர்ப்பணிக்கும் நிகழ்ச்சியில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் பங்கேற்க இருப்பதாகவும் எதிர்பார்க்கப்படுகிறது.
என்னென்ன பணிகள்?
நாட்டிலேயே முதல் முறையாக கொள்ளிடம் புதிய தடுப்பணையின் தெற்குப் பகுதியில் 626 மீட்டர் நீளத்திற்கு45 ஷட்டர்கள், வடக்குப் பகுதியில் 138 மீட்டர் நீளத்திற்கு 10 ஷட்டர்கள் என மொத்தம் 55 ஹைட்ராலிக் வெர்டிக்கல் ஷட்டர்கள் அமைக்கப்பட்டுள்ளன. பைல் பவுன்டேஷன் தொழில்நுட்பமுறையில் 60 அடி ஆழத்தில் 484 தூண்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதில், 6 அடி ஆழத்துக்கு பாறையை குடைந்து தூண்கள் அமைக்கப்பட்டுள்ளன. இரும்பு, கம்பிகள் ஆகியவை துருப்பிடிக்காத வகையில் `எபோக்சி பூச்சு' பயன்படுத்தப்பட்டுள்ளது.
மேலும் தமிழகத்தில் இதுவரை இல்லாத வகையில் கதவணையின் ஷட்டர்களை (மதகுகள்) இயக்க நீரியல் இயக்கிகள் என்ற நவீன தொழில் நுட்பம் பயன்படுத்தப்படுகிறது. இதன் மூலம், கட்டுப்பாட்டு அறைகளில் இருந்தவாறே ஷட்டர்களை இயக்க முடியும். மேலும் கதவணையில் இருந்து வெளியேறும் தண்ணீரின் வேகத்தை கட்டுப்படுத்தும் வகையில் தொட்டிகளும் கட்டப்பட்டுள்ளன.
உபரிநீர் மட்டுமே செல்லும்
காவிரி ஆற்றில் கரைபுரண்டு வெள்ளம் வரும் வேளையில், உபரிநீராக திறந்து விடவே கொள்ளிடம் தடுப்பணை பயன்பட்டு வருகிறது. கொள்ளிடம் ஆற்றில் இருந்து வெளியேறும் உபரிநீராலும் திருச்சி மற்றும் அரியலூர் மாவட்டங்களில் உள்ள புள்ளம்பாடி பெருவளை மற்றும் அய்யன் வாய்க்கால்கள் வாயிலாக சுமார் 57 ஆயிரம் ஏக்கர் நிலங்களும் பாசன வசதி பெறும். மேலும் கொள்ளிடம் ஆற்றின் தண்ணீரால் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து குடிநீர் தேவையையும் பூர்த்தி செய்யும். இறுதியாக கொள்ளிடம் நீரானது நாகை மாவட்டத்தில் கடலில் கலக்கிறது.