அணைமேடு நீர்வீழ்ச்சியில் ஆபத்தான குளியல்


அணைமேடு நீர்வீழ்ச்சியில் ஆபத்தான குளியல்
x
தினத்தந்தி 14 Oct 2021 1:12 AM IST (Updated: 14 Oct 2021 1:12 AM IST)
t-max-icont-min-icon

அணைமேடு நீர்வீழ்ச்சியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டும் நிலையில், பொதுமக்கள் ஆபத்தை உணராமல் அங்கு குளிக்கின்றனர்.

தாரமங்கலம்:
அணைமேடு
தாரமங்கலம் பகுதியில் கடந்த சிலநாட்களாக தொடர்மழை பெய்து வருவதால், சரபங்கா நதியில் நீர்வரத்து அதிகரித்து உள்ளது. இந்த நீர்வரத்து வெள்ளமாக பெருக்கெடுத்து ஓடும் போது ஆற்றின் கரைகள் சேதம் அடைந்து விடுவதை தவிர்க்க கழுங்கு எனப்படும் தடுப்புச்சுவர் கற்களால் ஆன கரை அணை மேடு பகுதியில் அமைக்கப்பட்டு உள்ளது. 
மழைநீர் பெருக்கெடுத்து வரும் காலங்களில் இந்த கழுங்கின் வழியாக நீர்வீழ்ச்சியாக தண்ணீர் கொட்டும். அவ்வாறு கொட்டும் தண்ணீர் சிறிது தூரம் கிளை ஆறாக பெருக்கெடுத்து சென்று மீண்டும் சரபங்கா நதியில் கலக்கும் வகையில் பண்டைய காலத்தில் வெள்ளத்தடுப்பு பாதுகாப்பு அமைப்பாக ஏற்படுத்தப்பட்டது. 
இவ்வாறு அமைக்கப்பட்ட அணைமேடு கழுங்குவில், தொடர் மழை காலங்களில் தண்ணீர் பெருக்கெடுத்து அருவி போன்று கொட்டுவதை ஏராளமானோர் கண்டுரசிப்பார்கள். குறிப்பாக வெள்ளக்காலங்களில் அணை மேடு நீர்வீழ்ச்சி போன்று கழுங்கை தாண்டி தண்ணீர் கொட்டுவது கண்கொள்ளா காட்சியாக இருக்கும். 
ஆபத்தான குளியல்
அந்த வகையில் தொடர் மழை காரணமாக அணைமேடு நீர்வீழ்ச்சியில் தற்போது தண்ணீர் கொட்டுகிறது. இதில் ஆபத்தை உணராமல் பொதுமக்கள்  குளிக்கின்றனர். எனவே பொதுமக்கள் இங்கு குளிக்க தடை விதித்து சம்பந்தபபட்ட அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும் என்பதே அனைத்து தரப்பினரின் எதிர்பார்ப்பாகும்.

Next Story