சேலம் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல்: அ.தி.மு.க. வென்ற இடங்களில் வெற்றி வாகை சூடிய தி.மு.க.
சேலம் மாவட்டத்தில் நடந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில் ஏற்கனவே அ.தி.மு.க. வென்ற இடங்களில் தற்போது தி.மு.க. வெற்றி வாகை சூடியுள்ளது.
சேலம்:
தி.மு.க. வெற்றி
சேலம் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் காலியாக இருந்த 24 பதவிகளுக்கு கடந்த 9-ந் தேதி தேர்தல் நடைபெற்றது.மொத்தம் 195 வாக்குச்சாவடிகளில் ஓட்டுப்பதிவு நடந்தது. ஓமலூர் ஒன்றியத்தில் மாவட்ட ஊராட்சி 10-வது வார்டு உறுப்பினர் பதவிக்கு தி.மு.க. சார்பில் போட்டியிட்ட சண்முகம் 26 ஆயிரத்து 531 வாக்குகள் பெற்றதோடு, 10 ஆயிரத்து 472 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அ.தி.மு.க. வேட்பாளர் முருகன் 16 ஆயிரத்து 59 வாக்குகள் பெற்று தோல்வி அடைந்தார். கடந்த முறை நடந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில் இப்போது ஓமலூர் தொகுதி எம்.எல்.ஏ.வாக உள்ள மணி, மாவட்ட ஊராட்சி 10-வது வார்டில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றிருந்தார். ஆனால் தற்போது அந்த வார்டை தி.மு.க. கைப்பற்றியுள்ளது.
வெற்றி வாகை சூடிய தி.மு.க.
இதேபோல், பனமரத்துப்பட்டி ஒன்றியம் 9-வது வார்டு உறுப்பினர் பதவிக்கு தி.மு.க. சார்பில் போட்டியிட்ட சுரேஷ்குமார், 2 ஆயிரத்து 993 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். அதேசமயம், மாவட்டத்தில் காலியாக இருந்த 10 கிராம ஊராட்சி மன்ற தலைவர் பதவிகளுக்கு நடந்த தேர்தலில் 8 இடங்களில் தி.மு.க. ஆதரவு வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர். அதாவது, புத்தூர் அக்ரஹாரத்தில் சிவானந்தம், சிக்கனம்பட்டியில் ரங்கநாதன், சேலத்தாம்பட்டியில் கண்மணி, கோவிந்தம்பாளையத்தில் விஜயா, புளியம்பட்டியில் கோவிந்தசாமி, அதிகாரிப்பட்டியில் சத்யா, வீராணத்தில் செல்வராணி, வெள்ளாரில் சுகந்தி ஆகியோர் வெற்றி பெற்று ஊராட்சி மன்ற தலைவர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இந்த பகுதி முழுவதும் கடந்த சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சியான பா.ம.க. வெற்றி பெற்ற இடங்களாகும். ஆனால் தற்போது நடந்த உள்ளாட்சி தேர்தலில் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களின் தொகுதிகளிலேயே தி.மு.க. வெற்றி வாகை சூடியுள்ளது.
செல்வாக்கு அதிகரிப்பு
இது ஒருபுறம் இருக்க, எடப்பாடி ஒன்றியத்திற்கு உட்பட்ட தாதாபுரம், கரிக்காப்பட்டி ஆகிய கிராம ஊராட்சி மன்ற தலைவர் பதவிகளுக்கு நடந்த தேர்தலில் மட்டும் அ.தி.மு.க.வை சேர்ந்த வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர். இதில், தாதாபுரத்தில் வளர்மதியும், கரிக்காப்பட்டியில் விஜயாவும் வெற்றி பெற்றுள்ளனர். சேலம் மாவட்டத்தில் கடந்த ஏப்ரல் மாதம் நடந்த சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க. 8 தொகுதிகளையும், அதன் கூட்டணியில் இடம் பெற்று போட்டியிட்ட பா.ம.க. 2 தொகுதிகளையும் பெற்றது. சேலம் வடக்கு தொகுதியில் மட்டும் தி.மு.க. வெற்றி பெற்றிருந்தது.
ஆனால் தற்போது நடந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில் மாவட்ட ஊராட்சி 10-வது வார்டு உறுப்பினர் மற்றும் பனமரத்துப்பட்டி ஒன்றியம் 9-வது வார்டு உறுப்பினர் பதவிகளை தி.மு.க. கைப்பற்றியுள்ளது. இதேபோல், 10 கிராம ஊராட்சி மன்ற தலைவர் பதவிகளில் 8 இடங்களை தி.மு.க.வை சேர்ந்தவர்கள் வெற்றி பெற்றுள்ளனர். இதன்மூலம் சேலம் மாவட்டத்தில் அ.தி.மு.க. வென்ற இடங்களில் தி.மு.க. வெற்றி பெற்றுள்ளதால் அக்கட்சியின் செல்வாக்கு தற்போது அதிகரித்து உள்ளது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story