மாவட்ட செய்திகள்

ஆயுத பூஜையை முன்னிட்டு சேலத்தில் பூஜை பொருட்கள் விற்பனை மும்முரம்-குண்டு மல்லி கிலோ ரூ.800-க்கு விற்பனை + "||" + ayudha pooja

ஆயுத பூஜையை முன்னிட்டு சேலத்தில் பூஜை பொருட்கள் விற்பனை மும்முரம்-குண்டு மல்லி கிலோ ரூ.800-க்கு விற்பனை

ஆயுத பூஜையை முன்னிட்டு சேலத்தில் பூஜை  பொருட்கள்  விற்பனை  மும்முரம்-குண்டு மல்லி கிலோ ரூ.800-க்கு விற்பனை
ஆயுத பூஜையை முன்னிட்டு சேலத்தில் பூஜை பொருட்கள் விற்பனை மும்முரமாக நடந்தது. ஒரு கிலோ குண்டுமல்லி ரூ.800-க்கு விற்பனை செய்யப்பட்டது.
சேலம்:
ஆயுத பூஜை பண்டிகை
இந்துக்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான ஆயுத பூஜையை முன்னிட்டு வீடுகளில் மட்டுமின்றி தொழிற்சாலைகள், வர்த்தக நிறுவனங்கள், மோட்டார் தொழிற்சாலை, பஸ் கம்பெனி, கல்வி நிறுவனங்களில் சுண்டல், சர்க்கரை பொங்கல், பொரி, அவல், பழங்கள் உள்ளிட்டவை படையலிட்டு வழிபடுவதை பொதுமக்கள் காலம் காலமாக கடைபிடித்து வருகின்றனர்.
அந்த வகையில் இன்று (வியாழக்கிழமை) ஆயுத பூஜையும், நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) விஜயதசமியும் கொண்டாடப்படுகிறது. ஆயுத பூஜையை கொண்டாடும் வகையில் தொழிற்சாலைகள் மற்றும் அலுவலகங்களை சுத்தம் செய்து வர்ணம் பூசுவது உள்ளிட்ட பணிகளில் உரிமையாளர்களும், தொழிலாளர்களும் ஈடுபட்டனர்.
பொரி, கடலை விற்பனை
சேலம் செவ்வாய்பேட்டை பால் மார்க்கெட், கடைவீதி, பட்டை கோவில், வ.உ.சி மார்க்கெட், ஆனந்தா இறக்கம் காய்கறி மார்க்கெட், அஸ்தம்பட்டி உள்ளிட்ட பல இடங்களில் நேற்று சாம்பல் பூசணி விற்பனைக்காக குவித்து வைக்கப்பட்டிருந்தன. அதை ஏராளமான பொதுமக்கள் திருஷ்டி கழிப்பதற்காக வாங்கி சென்றனர். ஒரு கிலோ சாம்பல் பூசணிக்காய் ரூ.10 முதல் ரூ.12 வரை விற்பனை செய்யப்பட்டது.
அதேபோல், செவ்வாய்பேட்டை, கடைவீதி பால் மார்க்கெட், வின்சென்ட், அஸ்தம்பட்டி, அம்மாபேட்டை பகுதிகளில் உள்ள கடைகளிலும், சாலையோரம் தற்காலிகமாக அமைக்கப்பட்டிருந்த கடைகளிலும் பொரி, கடலை, அவல் விற்பனை மும்முரமாக நடந்தது. குறிப்பாக செவ்வாய்பேட்டையில் உள்ள பொரி கடைகளில் தொழிற்சாலைகளில் சாமி கும்பிடுவதற்காக மொத்தமாக பொரிகளை சிலர் வாங்கி சென்றனர். ஒரு பக்கா ரூ.15-க்கு விற்பனை செய்யப்பட்டது. அதேபோல், வீடுகளுக்கு தேவையான பொரி, கடலைகளை பொதுமக்கள் தங்களுக்கு தேவைக்கு ஏற்றவகையில் வாங்கி சென்றனர். இதனால் செவ்வாய்பேட்டை, கடைவீதி, பால் மார்க்கெட் உள்ளிட்ட பகுதிகளில் பொதுமக்களின் கூட்டம் அலைமோதியது.
பூஜை பொருட்கள்
சேலம் அஸ்தம்பட்டி, செவ்வாய்பேட்டை உள்ளிட்ட பல பகுதிகளில் வாழைகுலை, பழங்கள் மற்றும் பூஜைக்கு தேவையான பொருட்கள் விற்பனை மும்முரமாக நடந்தது. அதேபோல், ஒரு கிலோ ஆப்பிள் ரூ.100 முதல் ரூ.120 வரைக்கும், சாத்துக்குடி ரூ.50-க்கும் விற்பனை செய்யப்பட்டது. மேலும், திராட்சை, மாதுளை, கொய்யா, ஆரஞ்சு உள்ளிட்ட பழங்கள் விற்பனையும் மும்முரமாக நடந்தது. மேலும், தேங்காய், வாழைப்பழம், மா இலை, வாழைக்கன்று, அலங்கார தோரணங்கள் மற்றும் பூஜை பொருட்களின் விற்பனையும் ஜோராக நடந்தது.
பூக்கள் விலை உயர்வு
ஆயுத பூஜையை முன்னிட்டு சேலம் வ.உ.சி. பூ மார்க்கெட்டில் நேற்று பூக்களின் விலை கிடுகிடுவென உயர்ந்தது. ஆயுதபூஜை மற்றும் விஜயதசமி நாட்களில் பூஜை செய்வதற்கு பூக்களின் தேவை அதிகமாக இருக்கும் என்பதால் நேற்று பூ மார்க்கெட்டில் பூக்களை வாங்குவதற்காக மொத்தம் மற்றும் சில்லரை வியாபாரிகள் கூட்டம் அலைமோதியது. ஒரு கிலோ குண்டுமல்லி ரூ.800-க்கு விற்பனை செய்யப்பட்டது. அதேபோல், கனகாம்பரம் ஒரு கிலோ ரூ.1,000, சன்ன மல்லி ரூ.700, ஜாதி மல்லி ரூ.300, ரோஜா ரூ.160, சாமந்தி ரூ.200, அரளி ரூ.350, சம்பங்கி ரூ.180, நந்தியாவட்டம் ரூ.200, காக்கட்டான் ரூ.450-க்கும் விற்பனை செய்யப்பட்டது. பூக்களின் விலை அதிகரித்தாலும் அதன் தேவைப்பாடு இருப்பதால் பொதுமக்கள் அதிகளவில் அவற்றை வாங்கி சென்றனர்.