பஞ்சாயத்து தலைவரான 21 வயது பெண் என்ஜினீயர்


பஞ்சாயத்து தலைவரான 21 வயது பெண் என்ஜினீயர்
x
தினத்தந்தி 14 Oct 2021 1:28 AM IST (Updated: 14 Oct 2021 1:28 AM IST)
t-max-icont-min-icon

பஞ்சாயத்து தலைவராக 21 வயது பெண் என்ஜினீயர் தேர்வு செய்யப்பட்டார்.

கடையம்:

தென்காசி மாவட்டம் கடையம் யூனியனில் உள்ளது வெங்கடாம்பட்டி கிராம பஞ்சாயத்து. இந்த பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு அங்குள்ள லட்சுமியூரை சேர்ந்த ரவிசுப்பிரமணியன் மகளான என்ஜினீயர் சாருகலா (வயது 21) போட்டியிட்டார்.

இந்த பஞ்சாயத்தில் பதிவான வாக்குகள் நேற்று முன்தினம் எண்ணப்பட்டன. இதில் சாருகலா 3,336 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அவர் தன்னை எதிர்த்து போட்டியிட்ட வேட்பாளரைவிட 796 வாக்குகள் அதிகம் பெற்று இந்த வெற்றியை சுவைத்தார்.
இளம் வயதில் பஞ்சாயத்து தலைவராக அவர் தேர்ந்தெடுக்கப்பட்டது மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

இதுகுறித்து சாருகலா கூறியதாவது:-
என்னை வெற்றிபெறச்செய்த மக்களுக்கும், எனது பெற்றோருக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். வெங்கடாம்பட்டி கிராம பஞ்சாயத்தை வளமான கிராமமாக மாற்ற பாடுபடுவேன். குடிநீர், சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை மேம்படுத்துவேன். தமிழக அரசின் திட்டங்கள் எங்கள் பகுதி மக்களுக்கு கிடைக்க செய்வேன். கிராமத்தின் அனைத்து பகுதிகளையும் சுகாதாரமாக்கி முன்மாதிரி கிராமமாக வெங்கடாம்பட்டியை மாற்றுவேன். இதற்காக பொதுமக்களின் கருத்தை கேட்டு வளர்ச்சி பணிகளை மேற்கொள்வேன்.  இவ்வாறு அவர் கூறினார்.

Next Story